கர்தினால் பியத்ரோ பரோலின் மறையுரை வழங்கியபோது. கர்தினால் பியத்ரோ பரோலின் மறையுரை வழங்கியபோது.  (@Basilica Cattedrale Sant'Agata_Catania)

உலகம் முழுவதும் துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்களுக்காக இறைவேண்டல் செய்ய அழைப்பு விடுத்த கர்தினால் பரோலின்

சிசிலியின் கட்டானியாவில் நடைபெற்ற திருப்பலியில், உலகம் முழுவதும் துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்களுக்காக இறைவேண்டல் செய்யுமாறு திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அழைப்பு விடுத்தார்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

ஆகஸ்ட் 17, திங்களன்று சிசிலியில் உள்ள கட்டானியாவில் இடம்பெற்ற  திருப்பலியின் போது, திருப்பீடத்தின் செயலரான கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்கள், உலகம் முழுவதும் துன்புறுத்தலைச் சந்திக்கும் கிறிஸ்தவர்களுக்காக இறைவேண்டல் செய்யுமாறு கத்தோலிக்கர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

புனித ஆகத்தாவின்  அருளீக்கங்கள் கான்ஸ்டான்டினோபிளிலிருந்து கட்டானியாவுக்குக் கொண்டுவரப்பட்டதன் ஒன்பதாம் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற இந்தத் திருப்பலியின் போது, "புனித ஆகத்தாவின் மறைசாட்சியம் என்பது வெறுமனே கடந்த காலத்தின் நினைவு மட்டுமல்ல, அது இறைப்பற்று, நம்பிக்கை மற்றும் அன்பின் நற்சான்றாக இன்றும் வாழ்கிறது"  என்று கர்தினால் பரோலின் அவர்கள் கூறினார்.

அப்போது கிறிஸ்தவர்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்களைப் பற்றிய தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட அவர், கிறிஸ்து மற்றும் அவரது நற்செய்தியின் பெயரால் துன்பப்படுபவர்களை நினைவுகூர்ந்து இறைவேண்டல் செய்யுமாறு இறைமக்களை வலியுறுத்தினார். திருஅவை மனித ஆற்றலையோ அல்லது திறனையோ சார்ந்து இல்லை, மாறாகக் கடவுளின் அருளையும் உண்மையையுமே சார்ந்துள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

குழந்தைகளை இறைநம்பிக்கையில் வளர்க்கும் பெற்றோர், துன்பங்களின் மத்தியிலும் அன்பில் நிலைத்திருக்கும் தம்பதியர், போலித்தனமான கலாச்சாரத்திற்கு அடிபணியாத இளைஞர்கள், தாராள மனதுடன் தங்களை அர்ப்பணிக்கும் அருள்பணியாளர்கள் மற்றும் துறவியர், மேலும் சமரசத்திற்குப் பதிலாக உண்மை, நீதியைத் தேர்ந்தெடுத்து, பழிவாங்குதலுக்குப் பதிலாக மன்னிப்பை வழங்கும் அனைவரும் வாழ்வில் எதிர்கொள்ளும் அன்றாட சவால்களை அவர் ‘நம்பிக்கையின் அன்றாட மறைசாட்சி’ என எடுத்துரைத்தார்.

இறுதியாக, தீமையை மற்றொரு தீமையால் வெல்ல முடியாது என்றும், சிலுவையில் உதித்த அன்பினால் மட்டுமே அதை வெல்ல முடியும் என்றும் வலியுறுத்திய கர்தினால் அவர்கள், "கட்டானியா மக்கள் தங்களின் வளமான இறை நம்பிக்கை மற்றும் தொண்டு செய்யும் பாரம்பரியத்தைப் பாதுகாத்து, அதனைப் பயன்படுத்தி வறுமை, சமத்துவமின்மை, குடும்பப் போராட்டங்கள் மற்றும் பிற சமூக சவால்களுக்குத் தீர்வு காண  வேண்டும்" என்றும் ஊக்குவித்து மறையுரையை நிறைவு செய்தார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

19 ஆகஸ்ட் 2026, 14:02