திருப்பீடத்தின் சொத்து மதிப்பு உயர்வு: 2025 நிதியறிக்கையை வெளியிட்ட APSA
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
திருப்பீடத்தின் சொத்துக்களை நிர்வகிக்கும் அமைப்பு (APSA) தனது 2025 ஆம் ஆண்டிற்கான நிதி அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. இதில் இந்த அமைப்பின் நிகர சொத்து மதிப்பு 2024 ஆம் ஆண்டை விட €89 மில்லியன் யூரோ அதிகரித்து, €2.686 பில்லியன் யூரோவாக உயர்ந்துள்ளது. 2025ம் ஆண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவு மற்றும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் தேர்தல் என சில அசாதாரண சூழலைக் கொண்டிருந்த போதிலும், இந்த அமைப்பு தனது நிலையான செயல்பாடுகளின் மூலம் திருஅவைக்கான தடையற்ற சேவையை வழங்கியுள்ளது.
திருப்பீடம் மற்றும் வத்திக்கான் நகர அரசின் கருவூலம் மற்றும் அசையாச் சொத்துகளை நிர்வகிக்கும் இந்நிறுவனம், 2025ஆம் ஆண்டில் €22.8 மில்லியன் செயல்முறை இலாபத்தை பதிவு செய்துள்ளது. இது 2024ஆம் ஆண்டின் €62.2 மில்லியன் இலாபத்தைவிடக் குறைவாக இருந்தாலும், அந்த ஆண்டு முதலீட்டு மறுசீரமைப்பின் காரணமாக கிடைத்த அசாதாரண வருவாயால் உயர்ந்த இலாபம் பதிவாகியிருந்தது. எனவே, 2025ஆம் ஆண்டின் நிதிநிலை இயல்பான நிர்வாகச் செயல்பாடுகளுக்குத் திரும்பியதையே பிரதிபலிக்கிறது என்று அதன் தலைவர் பேராயர் ஜியோர்டானோ பிச்சினோட்டி விளக்கினார்.
புதிய வத்திக்கான் கணக்கியல் தரநிலைகளின் கீழ், முதலீட்டில் இருந்து பெறப்பட்ட €16 மில்லியன் யூரோ இலாபம் நேரடியாக நிகர சொத்துகளுக்கு மாற்றப்பட்டது ஒரு
முக்கிய அம்சமாகும். இது வெறும் இலாபமாகக் காட்டப்படுவதற்குப் பதிலாக திருஅவையின் சொத்துக்களை வலுப்படுத்துகிறது. இந்த அமைப்பின் முதலீட்டு உத்தி பாதுகாப்பானதாகவே இருந்ததுடன், 14.37% வருவாயையும் எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திறமையான நிர்வாகம் மற்றும் அதிக வருவாய் ஆகியவற்றின் காரணமாக அசையாச் சொத்துக்களுக்கான துறை €44.5 மில்லியன் யூரோ வருவாயை ஈட்டியுள்ளது. இத்தாலியில் 4,200 க்கும் மேற்பட்ட சொத்துகளையும், வெளிநாடுகளில் 1,200 சொத்துகளையும் இந்த அமைப்பு நிர்வகிக்கும் அதே வேளையில் அதன் சொத்துக்களை மேம்படுத்தவும் நெறிப்படுத்தவும் மூன்றாண்டுத் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது.
உரோமை நிர்வாகக் குழுவின் செயல்பாடுகளை ஆதரிக்க இந்த அமைப்பு €22.7 மில்லியன் யூரோவை வழங்கியதுடன், வத்திக்கான் அமைப்புகளுக்கான கொள்முதல், கணக்கியல், கட்டணம் செலுத்துதல் மற்றும் சொத்து மேலாண்மை உள்ளிட்ட அத்தியாவசிய நிர்வாகச் சேவைகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது.
2025 ஆம் ஆண்டின் அறிக்கைகள் முன்னெச்சரிக்கை, வெளிப்படைத்தன்மை, நிலைத்தன்மை மற்றும் சேவை ஆகிய திருப்பீடத்தின் சொத்துக்களை நிர்வகிக்கும் அமைப்பின் நோக்கத்தைப் பிரதிபலிக்கின்றன என்றும், திருஅவையின் சொத்துக்கள் திருஅவையின் உலகளாவிய பணிகளைத் தொடர்ந்து ஆதரிப்பதை உறுதி செய்கின்றன என்றும் பேராயர் பிச்சினோட்டி அவர்கள் கூறியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.