2026 உலகளாவிய குடும்பங்கள் சந்திப்பு: ஆயத்த ஆவணத்தை வெளியிட்டது திருப்பீடம்
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வுக்கான திருப்பீடத்துறையும் (Dicastery for the Laity, Family and Life), ஆயர் மாமன்றத்தின் (Synod) பொதுச் செயலகமும் இணைந்து, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கூட்டியுள்ள உலகளாவிய குடும்பங்களுக்கான சந்திப்பிற்கான ஆயத்த ஆவணமான கருப்பொருள் கட்டமைப்பை (Thematic Framework) வெளியிட்டுள்ளன.
2026 அக்டோபர் 7 முதல் 14 வரை வத்திக்கானில் நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பில், கிழக்கு கத்தோலிக்க திருஅவைகளின் தலைவர்களும், உலக நாடுகளின் ஆயர் பேரவைகளின் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.
2026 மார்ச் 19 அன்று திருத்தந்தை அவர்கள் அறிவித்த இந்தச் சந்திப்பு, அன்பின் மகிழ்ச்சி (Amoris Laetitia) என்ற திருத்தூது அறிவுரை மடலின் பத்தாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெறுகிறது. வேகமாக மாறிவரும் இன்றைய உலகச் சூழலில், குடும்பங்களுக்கு நற்செய்தியை இன்னும் பயனுள்ள முறையில் எடுத்துச் செல்வதற்கான வழிகளை, அனைவரின் அனுபவங்களையும் கருத்துகளையும் கேட்டறிந்து, ஆயர் மாமன்றப் பாணியிலான கூட்டு பகுத்தறிவின் மூலம் ஆராய்வதே இச்சந்திப்பின் முக்கிய நோக்கமாகும்.
கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற கர்தினால்கள் பேரவைக் கூட்டத்தில், குடும்பங்களின் இன்றியமையாத பங்கை மீண்டும் வலியுறுத்திய திருத்தந்தை, குடும்பங்கள் வலுவாக இருக்கும்போது அங்கு நல்லுறவுகள், ஒற்றுமை மற்றும் நம்பிக்கை வளர்கின்றன என்றும், குடும்பங்கள் சவால்களை எதிர்கொள்ளும்போது அதன் தாக்கம் ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்கிறது என்றும் தெரிவித்தார். மேலும், உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சில குடும்பங்களும் இந்தச் சந்திப்பில் பங்கேற்று, தங்களது வாழ்வியல் அனுபவங்களையும் இறைநம்பிக்கைப் பயணத்தையும் பகிர்ந்துகொள்வார்கள் என்றும் அவர் அறிவித்தார்.
இந்தச் சந்திப்பில், கேட்பது, உரையாடல், இறைவேண்டல் மற்றும் பகுத்தறிவு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். ஆயர்கள், குடும்பங்களின் அனுபவங்களையும் நிபுணர்களின் கருத்துகளையும் கேட்டறிந்து, குடும்ப வாழ்வு, திருமண அழைத்தல் மற்றும் மனித வாழ்வின் மாண்பை மேம்படுத்துவதற்கான மேய்ப்புப் பணிகளை புதுப்பிக்க உறுதியேற்பார்கள். இதற்காக, உலகம் முழுவதும் உள்ள ஆயர் பேரவைகளும், கிழக்கு கத்தோலிக்க திருஅவைகளும், தங்களது உள்ளூர் குடும்பங்களுடன் முன்கூட்டியே கலந்துரையாடலைத் தொடங்குமாறு அழைக்கப்பட்டுள்ளன.
இந்த உலகளாவிய சந்திப்பில், இன்றைய குடும்பங்களின் உண்மை நிலையும் சவால்களும், இளைஞர்களை திருமண அழைத்தலுக்கு வழிநடத்துதல், திருமணத்தின் தொடக்க ஆண்டுகளில் தம்பதியருக்கு துணைநிற்றல், சவாலான சூழலில் வாழும் குடும்பங்களுக்கு ஆதரவளித்தல் மற்றும் கிறிஸ்தவ குடும்பங்களை திருஅவையின் மறைப்பணியில் செயற்பாட்டு பங்காளிகளாக உருவாக்குதல் ஆகிய ஐந்து முக்கிய கருப்பொருள்கள் குறித்து ஆழ்ந்த சிந்தனையும் கலந்துரையாடலும் நடைபெறவுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.