SSPX ஆயர்களுக்கு சபைநீக்கத் தண்டனை: வத்திக்கானின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
ஜூலை 01, புதனன்று, சுவிட்சர்லாந்தின் ஏகோன் (Écône) நகரில் இடம்பெற்ற ஆயர் அருள்பொழிவு நிகழ்வில் பங்கேற்ற புனித பத்தாம் பத்திநாதர் குருத்துவக் கூட்டமைப்பின் (SSPX) ஆயர்கள், திருத்தந்தையின் ஆணை இல்லாமலும், அவரின் விருப்பத்திற்கு எதிராகவும் ஆயர் பட்டங்களை வழங்கியதால், அவர்கள் தானாகவே சபைநீக்க (latae sententiae excommunication) தண்டனைக்கு உள்ளாகியுள்ளனர் என்று விசுவாசக் கோட்பாட்டிற்கானத் திருப்பீடத்துறை (Dicastery for the Doctrine of the Faith) அறிவித்துள்ளது.
ஜூலை 2, வியாழனன்று, வெளியிடப்பட்டு, கர்தினால் விக்டர் மானுவல் பெர்னாண்டஸ் (Cardinal Víctor Manuel Fernández) அவர்கள் கையெழுத்திட்டுள்ள இந்த ஆணை, முதன்மை அருள்பொழிவு செய்தவராகவும் துணை அருள்பொழிவு செய்தவராகவும் செயல்பட்ட ஆயர்கள் அல்போன்சோ டி கலாரெட்டா மற்றும் பெர்னார்ட் ஃபெல்லாய் ஆகியோருடன், புதிதாக ஆயராக அருள்பொழிவு செய்யப்பட்ட பாஸ்கல் ஷ்ரைபர், மைக்கேல் கோல்டேட், மிஷெல் புவான்சினெட் டி சிவ்ரி மற்றும் மார்க் ஹனாப்பியர் ஆகியோரும் பிளவுவாதச் செயலில் (schismatic act) ஈடுபட்டதால் சபைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
இதனுடன் இணைக்கப்பட்டுள்ள விளக்கக் குறிப்பு, அடுத்தடுத்து வந்த திருத்தந்தையர்கள் பல தசாப்தங்களாக பேச்சுவார்த்தை நடத்திய போதிலும், SSPX கூட்டமைப்புடன் முழுமையான ஒற்றுமையை மீட்டெடுப்பதற்கான அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்துவிட்டன என்பதை நினைவூட்டுகிறது. இந்த அண்மைய ஆயர் அருள்பொழிவு திருச்சபைச் சட்டத்தை வெளிப்படையாக மீறியுள்ளன என்றும், இது ஒரு முறையான பிளவை உருவாக்கியுள்ளது என்றும் அது கூறுகிறது.
இப்போது அனைத்து SSPX அருள்பணியாளர்களும் திருச்சபைப் பிளவுக்குக் காரணமானவர்களாகக் கருதப்படுகிறார்கள் என்றும், சபைநீக்கத் தண்டனைக்கு உட்பட்டவர்கள் என்றும் இந்த ஆணை அறிவித்துள்ளது. SSPX கூட்டமைப்பை முறையாகப் பின்பற்றும் பொதுநிலைக் கத்தோலிக்க விசுவாசிகளும் அவ்வாறே பிளவுவாதிகளாகவும் சபைநீக்கம் செய்யப்பட்டவர்களாகவும் கருதப்படுவர், அதே வேளையில் ஒவ்வொரு தனிப்பட்ட வழக்கும் தற்போதுள்ள திருச்சபைச் சட்ட நெறிமுறைகளின்படி மதிப்பீடு செய்யப்படும்.
மேலும், SSPX அருள்பணியாளர்கள் வழங்கும் திருவருட்சாதனங்கள் சட்டவிரோதமானவை என்றும், அவர்களால் கேட்கப்படும் பாவமன்னிப்புகள் மற்றும் அவர்கள் முன்னிலையில் நடத்தப்படும் திருமணங்கள் செல்லாதவை என்றும் வத்திக்கான் எச்சரித்துள்ளது.
முழுமையான திருஅவை ஒற்றுமைக்குத் திரும்ப விரும்புகிறவர்கள் தங்கள் உள்ளூர் ஆயர்களை அணுகுமாறு திருப்பீடம் ஊக்குவித்துள்ளதுடன், திருஅவை அவர்களை வரவேற்பதை உறுதி செய்துள்ளது. மேலும், கத்தோலிக்கர்கள் அனைவரும் திருத்தந்தை, தங்களது ஆயர்கள் மற்றும் அகில உலகத் திருஅவையுடன் தொடர்ந்து இணைந்திருக்குமாறும், SSPX-இன் கொண்டாட்டங்கள் மற்றும் செயல்பாடுகளில் பங்கேற்பதைத் தவிர்க்குமாறும் வலியுறுத்தியுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.