உக்ரைன் பயணம் தொடங்கிய திருத்தந்தையின் சிறப்புத் தூதர் பேராயர் காலகர்
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் சிறப்புத் தூதராக, பன்னாட்டு உறவுகளுக்கான திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்கள், இலத்தீன் வழிபாட்டு முறை கத்தோலிக்க திருஅவையின் கட்டமைப்புகள் புதுப்பிக்கப்பட்டதன் 35ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக உக்ரைன் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
ஜூலை 19, ஞாயிறன்று, பெர்டிசிவ் நகரிலுள்ள மவுண்ட் கார்மேல் அன்னை திருத்தலத்தில் நடைபெறும் முக்கிய திருப்பலி, புனித இரண்டாம் ஜான் பால் அவர்களின் 2001 உக்ரைன் திருத்தூது பயணத்தையும் நினைவுகூரும்.
போர் காரணமாக உக்ரைன் வான்வெளி மூடப்பட்டிருப்பதால், ஜூலை 16 அன்று போலந்தின் கிராகோவுக்கு வந்த பேராயர் காலகர் அவர்கள், உக்ரைனுக்கான திருத்தந்தையின் அரசுத் தூதர் பேராயர் விஸ்வால்தாஸ் குல்போகாஸு அவர்களுடன் சாலை வழியாக உக்ரைனுக்குச் சென்றார்.
எல்லைப் பகுதியில் உக்ரைன் அரசின் அதிகாரிகளும், திருப்பீடத்திற்கான உக்ரைன் தூதரும் அவரை வரவேற்றனர். பின்னர் லிவிவ் நகரில் இலத்தீன் வழிபாட்டு முறை பேராயர் மியேச்சிஸ்வாவ் மோக்ர்சிக்கி அவர்களைச் சந்தித்த அவர், "நீதியுடனான அமைதியே இந்தப் போரின் உண்மையான முடிவு; உக்ரைன் மக்களின் துயரங்களை திருஅவையும் திருத்தந்தையும் மறக்கவில்லை" என்று வலியுறுத்தினார்.
போரில் உயிரிழந்தவர்களுக்காக இடம்பெற்ற மௌன அஞ்சலியில் பங்கேற்ற அவர், பின்னர் உக்ரைனிய கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்திற்குச் சென்று, போர் சூழலிலும் கல்வி மற்றும் சமூகப் பணிகள் தொடர்வதைப் பாராட்டியதுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான சேவைகளையும் மாணவர்களின் அர்ப்பணிப்பையும் பாராட்டி மகிழ்ந்தார்.
தொடர்ந்து கீவ் நகரில், உக்ரைனிய கிரேக்க கத்தோலிக்க திருஅவையின் தலைவரான மேஜர் பேராயர் ஸ்வியாதோஸ்லாவ் ஷெவ்சுக் அவர்களை சந்திக்க பேராயர் காலகர் அவர்கள் பயணத்தைத் தொடர்ந்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.