மாமன்றப் பயணத்தை மதிப்பீடு செய்ய ‘நினைவுகூருதல்’ ஆவணத்தை அறிமுகப்படுத்திய ஆயர் மாமன்றச் செயலகம்
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
ஆயர் மாமன்றத்தின் பொதுச் செயலகம் "நினைவுகூருதல்: உள்ளூர் திருஅவையின் மதிப்பீட்டுக் கூட்டத் தயாரிப்புக்கான வழிகாட்டி" என்ற புதிய ஆவணத்தை வெளியிட்டுள்ளது. 2027 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இடம்பெறும் மதிப்பீட்டுக் கூட்டங்களுக்கு மறைமாவட்டங்களும், கீழைக் கத்தோலிக்க மறைமாவட்டங்களும் (eparchies) தங்களைத் தயார்படுத்திக் கொள்ள உதவும் வகையிலான இந்தப் புதிய வெளியீடு, மாமன்றச் செயல்பாடுகளில் உள்ளூர் அளவிலான செயலாக்கத்தின் நிறைவைக் குறிக்கிறது.
ஜூலை 27 அன்று வெளியிடப்பட்ட இந்த ஆவணம் ஆயர்கள், மறைமாவட்ட மாமன்றக் குழுக்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அனைவருக்கும் ஒரே மாதிரியான திட்டத்தைத் திணிக்காமல், அந்தந்தப் பகுதிகளில் தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கக் கூடிய வகையில் நடைமுறை சார்ந்த கேள்விகள், அளவுகோல்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்குகிறது.
மதிப்பீடு என்பது "நன்றியுணர்வு மற்றும் உண்மையின் அனுபவம்" என்று தெரிவித்த மாமன்றத்தின் பொதுச் செயலாளர் கர்தினால் மரியோ கிரேச் அவர்கள், மேலும், உள்ளூர் திருஅவைகள் தங்களது மாமன்றப் பயணத்தின் மூலம் கடவுள் எவ்வாறு செயல்பட்டார் என்பதை உணர்ந்துகொள்ளவும், எதிர்கால நடவடிக்கைகளைத் தீர்மானிக்கவும் வேண்டுமென ஊக்குவித்தார்.
"நினைவுகூருதல்" என்பது வரலாற்றில் கடவுளின் செயல்களை அங்கீகரிப்பதையும், மாமன்றத்தின் பலன்களை நன்றியுணர்வுடனும் நேர்மையுடனும் சிந்தித்துப் பார்ப்பதையும் குறிக்கிறது என்பதை இந்த வழிகாட்டி ஆவணம் எடுத்துக்காட்டுகிறது. இந்த ஆவணம் உறவுகள், திருஅவைச் செயல்முறைகள் மற்றும் பிணைப்புகள் ஆகிய மனமாற்றத்திற்கான மூன்று முக்கியப் பகுதிகளில் கவனம் செலுத்துகிறது.
ஆயர் தலைமையில் இடம்பெறும் இந்த மதிப்பீட்டுக் கூட்டமானது இறைவேண்டல், அமைதி மற்றும் ஆன்மீக உரையாடல் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். இந்த கூட்டமானது கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் எதிர்கால அர்ப்பணிப்புகளைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் ஒரு விரிவான அறிக்கையையும், பிற திருஅவைகளுக்கான கடிதத்தையும் உருவாக்கும்.
இந்த அறிக்கைகள் 2027 ஜூன் 30 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இதன் தொடர்ச்சியாக 2028 ஆம் ஆண்டில் கண்டங்கள் அளவிலான கூட்டங்களும், அதனைத் தொடர்ந்து இறுதித் திருஅவைக் கூட்டமானது 2028 ஆம் ஆண்டு அக்டோபரில் வத்திக்கானிலும் இடம்பெறும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.