தேடுதல்

புனித பத்தாம் பயஸ் சகோதரத்துவம் நான்கு புதிய ஆயர்களைத் திருநிலைப்படுத்தியபோது. புனித பத்தாம் பயஸ் சகோதரத்துவம் நான்கு புதிய ஆயர்களைத் திருநிலைப்படுத்தியபோது. 

SSPX-திருஅவை உறவு: புதிய ஆயர் அருள்பொழிவால் மீண்டும் ஆழமான பிளவு

1970-இல் தொடங்கப்பட்ட புனித பத்தாம் பயஸ் குருத்துவ சகோதரத்துவ (SSPX) அமைப்பு, இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்க போதனைகளை நிராகரித்ததால் கத்தோலிக்க திருஅவையிலிருந்து விலகியது. பல தசாப்தங்களாக நடைபெற்ற நல்லிணக்க முயற்சிகளுக்குப் பின்னரும், 2026 ஜூலை 1 அன்று திருத்தந்தையின் வேண்டுகோளை மீறி புதிய ஆயர்களுக்கு அருள்பொழிவு வழங்கியதால், திருஅவையுடனான பிளவு மீண்டும் தீவிரமடைந்ததாக திருப்பீடம் தெரிவித்துள்ளது.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

பேராயர் மார்செல் லெபெவ்ரே என்பவரால் 1970-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ‘புனித பத்தாம் பயஸ் குருத்துவ சகோதரத்துவ அமைப்பு’ (SSPX), இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் முக்கிய போதனைகளை நிராகரித்ததாலும், சீர்திருத்தப்பட்ட திருப்பலி வழிபாட்டை நிறைவேற்ற மறுத்ததாலும், கத்தோலிக்கத் திருஅவையிலிருந்து படிப்படியாகத் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டது.

திருத்தந்தையர்களான ஆறாம் பவுல், இரண்டாம் ஜான் பால், பதினாறாம் பெனடிக்ட், பிரான்சிஸ் மற்றும் பதினான்காம் லியோ ஆகியோரின் தொடர்ச்சியான பேச்சுவார்த்தை முயற்சிகளையும் மீறி, நல்லிணக்க முயற்சிகள் மீண்டும் மீண்டும் தோல்வியடைந்தன. 1988-ஆம் ஆண்டில், பேராயர் லெபெவ்ரே அவர்கள்,  திருப்பீடத்துடன் ஒரு கோட்பாட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார், ஆனால் பின்னர் அதிலிருந்து பின்வாங்கி, திருத்தந்தையின் அனுமதியின்றி நான்கு ஆயர்களைத் திருப்பொழிவு செய்தார்.

இதன் காரணமாக, 1988 ஆம் ஆண்டு ஜூலை 01 அன்று, அவரும் புதிதாக நியமிக்கப்பட்ட ஆயர்களும் திருஅவையில் பிளவை ஏற்படுத்தும் குற்றத்தைச் செய்ததற்காக திருஅவையை விட்டுத் தானாகவே விலக்கப்படும் தண்டனைக்கு ஆளாயினர்.

பின்னர், 2009-ஆம் ஆண்டில் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்கள் இந்த ஆயர்களின் மீதான திருஅவை விலக்கத் தண்டனையை ரத்து செய்ததுடன், இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்கு முந்தைய இலத்தீன் திருப்பலி முறையைப் பயன்படுத்துவதற்கும் அனுமதி அளித்தார். மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒரு மேய்ப்புப்பணி பராமரிப்பு நடவடிக்கையாக, புனித பத்தாம் பயஸ் குருத்துவ சகோதரத்துவ அமைப்பின் அருள்பணியாளர்கள் ஒப்புரவு அருட்சாதனம் வழங்குவதற்கான அதிகாரங்களை வழங்கினார். இருப்பினும், கோட்பாட்டு ரீதியான கருத்து வேறுபாடுகள் தொடர்ந்தன.

இந்நிலையில் 2026-ஆம் ஆண்டில், விசுவாசக் கோட்பாட்டிற்கான திருப்பீடத்துறையும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களும், புதிய ஆயர் திருநிலைப்பாட்டை நிறுத்தி வைக்குமாறும் பேச்சுவார்த்தையைத் தொடருமாறும் புதிய கோரிக்கைகளை விடுத்தனர்.

இருந்த போதிலும் புனித பத்தாம் பயஸ் குருத்துவ சகோதரத்துவ அமைப்பு  ஜூலை 1, புதனன்று புதிய ஆயர்களுக்குப் அருள்பொழிவு செய்யும் பணிகளைத் தொடர்ந்தது. இது ஒரு புதிய திருஅவைப்பிளவுக்கு வழிவகுத்தது.

"புனித பத்தாம் பயஸ் குருத்துவ சகோதரத்துவ அமைப்பின் அருள்பணியாளர்கள் தற்போது சட்டவிரோதமாகவே திருவருள்சாதனங்களை நிறைவேற்றுகின்றனர்" என்றும், "அவர்களால் நடத்தப்படும் ஒப்புரவு அருள்சாதனம் மற்றும் திருமணங்கள் செல்லாதவை"  என்றும் திருப்பீடம் அறிவித்தது.

இந்தப் பிரிவினை குறித்து திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தனது கவலையை வெளிப்படுத்தியதோடு, இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் இன்றியமையாத போதனைகளை ஏற்றுக்கொள்ள புனித பத்தாம் பயஸ் குருத்துவ சகோதரத்துவ அமைப்பு மறுத்தபோதிலும், திருஅவை தொடர்ந்து முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

03 ஜூலை 2026, 12:27