விசுவாசக் கோட்பாட்டுத் திருப்பேராயத்தின் முகப்பு. விசுவாசக் கோட்பாட்டுத் திருப்பேராயத்தின் முகப்பு. 

SSPX உறுப்பினர்கள் கத்தோலிக்க திருஅவையுடன் இணைய புதிய வழிமுறைகள் வெளியீடு!

புனித பத்தாம் பயஸ் குருத்துவ சகோதரத்துவ (SSPX) அமைப்பைச் சேர்ந்த அருள்பணியாளர்கள் மற்றும் பொதுநிலை நம்பிக்கையாளர்கள் கத்தோலிக்க திருஅவையுடன் முழுமையாக இணைய வேண்டிய புதிய நடைமுறைகளை நம்பிக்கைக் கோட்பாட்டிற்கான திருப்பீடத்துறை வெளியிட்டுள்ளது.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

புனித பத்தாம் பயஸ் குருத்துவ சகோதரத்துவ (SSPX) அமைப்பைச் சேர்ந்த அருள்பணியாளர்கள் மற்றும் பொதுநிலை நம்பிக்கையாளர்கள், கத்தோலிக்க திருஅவையுடன் முழுமையாக இணைய விரும்புபவர்களுக்கான புதிய நடைமுறைகள் வெளியிட்டுள்ளன.

ஜூலை 01 புதனன்று இடம்பெற்ற பிளவுவாத செயலைத் தொடர்ந்து, இந்த வழிமுறைகளை நம்பிக்கைக் கோட்பாட்டிற்கான திருப்பீடத்துறை வெளியிட்டுள்ளது.

"கடந்த காலத்தைப் போலல்லாமல், இதற்கு எந்தவொரு சிறப்பு ஆணையமும் தேவையில்லை" என்றும் "இந்த செயல்முறை மறைமாவட்ட ஆயர்கள் மற்றும் துறவுசபைத் தலைவர்கள் மூலமாகவே கையாளப்படும்" என்றும் நம்பிக்கைக் கோட்பாட்டிற்கான திருப்பீடத்துறை தெரிவித்துள்ளது.

இதன்படி, "புனித பத்தாம் பயஸ் குருத்துவ சகோதரத்துவ அமைப்பிலிருந்து வெளியேறும் அருள்பணியாளர்கள், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்றும் "திருத்தந்தையர்களான ஆறாம் பவுல் மற்றும் இரண்டாம் ஜான் பால் ஆகியோரின் வழிபாட்டு முறைகளின்படி திருப்பலி நிறைவேற்றப்படுவதன் சட்டப்பூர்வத்தன்மையை அங்கீகரிக்க வேண்டும்" என்றும் "மேலும் திருத்தந்தைக்கும் திருஅவையின் போதனைகளுக்கும் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர்கள் திருஅவைச் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ள திருஅவை தண்டனைகளிலிருந்து (canonical censures) தங்களை விடுவிக்குமாறு கோரி, தங்களின் சொந்தக் கையெழுத்துடன் எழுதப்பட்ட கடிதத்தை திருத்தந்தையிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதனுடன், அவர்களின் குருத்துவ அருள்பொழிவு சான்றிதழ், நம்பிக்கை அறிக்கை மற்றும் உடன்பாட்டுப் படிவம் ஆகியவற்றையும் இணைக்க வேண்டியது அவசியமாகும்.

இவ்வாவணங்கள் பரிசீலிக்கப்பட்ட பின்னர், நம்பிக்கைக் கோட்பாட்டிற்கான திருப்பீடத்துறை சம்பந்தப்பட்ட அருள்பணியாளர்களின் தண்டனைகளை நீக்குவதுடன், அவர்கள் ஒரு மறைமாவட்டத்தில் அதிகாரப்பூர்வமாக இணைவதற்கான அனுமதி வழங்கும் அரசாணையை பிறப்பிக்கும் முன், ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் வரை பரிசோதனைக் கால அடிப்படையில் தற்காலிக அனுமதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

"பொதுநிலை நம்பிக்கையாளர்களைப் பொறுத்தவரை, அவர்களின் பொறுப்பு தனித்தனியாக மதிப்பிடப்படும்" என்றும் "புனித பத்தாம் பயஸ் குருத்துவ சகோதரத்துவ  அமைப்பின் போதனைகளை முறைப்படி பின்பற்றியவர்கள், தங்களின் நம்பிக்கை அறிக்கை மற்றும் உடன்பாட்டுப் படிவத்தை தங்களது மறைமாவட்ட ஆயரிடம் சமர்ப்பிக்க வேண்டும்" என்றும் தெரிவித்துள்ள நம்பிக்கைக் கோட்பாட்டிற்கான திருப்பீடத்துறை, "அவர்கள் மீண்டும் முழுமையாக திருஅவைக்குள் ஏற்றுக்கொள்ளப்படுவதை ஆயர் கண்காணிப்பார் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும்" ஆன்மீகத் தேவைகளுக்காக மட்டுமே புனித பத்தாம் பயஸ் குருத்துவ சகோதரத்துவ அமைப்பின் வழிபாடுகளில் கலந்துகொண்டு, திருத்தந்தையையோ அல்லது திருஅவையின் போதனைகளையோ நிராகரிக்காத கத்தோலிக்கர்கள் குற்றவாளிகளாகக் கருதப்பட மாட்டார்கள்"  என்றும் நம்பிக்கைக் கோட்பாட்டிற்கான திருப்பீடத்துறை தெளிவுபடுத்தியுள்ளது.

"அவர்கள் திருஅவையுடன் முழுமையான ஒன்றிப்பில் உள்ள ஒரு அருள்பணியாளரிடம் திரும்பி வந்தால் போதுமானது; மேலும், எதிர்காலத்தில் புனித பத்தாம் பயஸ் குருத்துவ சகோதரத்துவ அமைப்பின் வழிபாட்டு நிகழ்வுகளில் கலந்துகொள்வதைத் தவிர்க்க வேண்டும்" என்றும் நம்பிக்கைக் கோட்பாட்டிற்கான திருப்பீடத்துறை வலியுறுத்தியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

03 ஜூலை 2026, 12:33