நிதிச் செயல்பாடுகளை மாற்றியமைக்கும் வத்திக்கானின் புதிய சீர்திருத்தத்திற்கு திருத்தந்தை ஆணை!
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
வத்திக்கானின் கண்காணிப்பு மற்றும் நிதி தகவல் ஆணையம் (ASIF) நிறுவப்பட்டு 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதன் விரிவான சீர்திருத்தத்திற்கு திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் ஒப்புதல் அளித்துள்
இந்த சீர்திருத்தம் ஒரு புதிய சட்டத்தையும், அந்த ஆணையத்தின் முதல் உள்கட்டமைப்பு ஒழுங்குமுறைகளையும் அறிமுகப்படுத்துகிறது. இது வத்திக்கானின் வெளிப்படைத்தன்மை, நிதியைக் கையாளுவதில் நேர்மை மற்றும் அனைத்துலக நாடுகளுடனான இணக்கம் ஆகியவற்றின் மீதான அர்ப்பணிப்பை வலுப்படுத்துகிறது.
பணமோசடி, பயங்கரவாத நிதி உதவி, பேரழிவு தரும் ஆயுதங்களின் பெருக்கம் மற்றும் நிதி மேற்பார்வை ஆகியவற்றை எதிர்ப்பதற்கான வளர்ந்து வரும் உலகளாவிய தரநிலைகளுக்கு ஏற்ப அமைந்துள்ள இந்த சீர்திருத்தங்கள் திருஅவை மற்றும் வத்திக்கான் நகர் அரசின் செயல்பாடுகளை மாற்றியமைப்பதாக அமைந்துள்ளன.
இந்த புதிய கட்டமைப்பு, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆறாவது பணமோசடி தடுப்பு வழிகாட்டுதல் (AMLD VI) மற்றும் எக்மாண்ட் குழுவின் சட்டம் (2025) உள்ளிட்ட அண்மைய அனைத்துலக முன்னேற்றங்களையும் உள்ளடக்கியது.
இந்த சீர்திருத்தத்தின் முக்கிய அம்சம் வத்திக்கானின் கண்காணிப்பு மற்றும் நிதி தகவல் ஆணையத்தின் செயல்பாட்டு சுதந்திரத்தை வலுப்படுத்துவதாகும். இது அதன் கண்காணிப்பு மற்றும் நிதி நுண்ணறிவுப் பொறுப்புகளை திறம்படச் செய்ய வழிவகுக்கிறது. அதே நேரத்தில், இந்த ஆணையம் பொருளாதார அவைக்கு நேரடியாகப் பொறுப்புக்கூறும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.
இந்த அவை அதன் வருடாந்திர அறிக்கைகள், நிதிநிலை அறிக்கைகள் மற்றும் அவ்வப்போது சமர்ப்பிக்கப்படும் செயல்பாட்டு அறிக்கைகளை மேற்பார்வையிடும்.
இந்த சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக நிர்வாகக் கட்டமைப்பும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் தலைவர் மற்றும் வாரியத்திற்குப் பதிலாக, ஒரு இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு நிபுணத்துவம் வாய்ந்த ஆலோசகர்கள் உறுதுணையாக இருப்பார்கள், இது அதிக செயல்திறனையும் தெளிவான பொறுப்புக்கூறலையும் உறுதி செய்கிறது.
வத்திக்கானின் கண்காணிப்பு மற்றும் நிதி தகவல் ஆணையத்தின் அலுவலகங்கள் தொடர்ந்து நிதி நுண்ணறிவு, பணமோசடி தடுப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு கண்காணிப்பு, மற்றும் விவேகமான ஒழுங்குமுறை ஆகிய மூன்று முக்கிய பகுதிகளில் கவனம் செலுத்துகின்றன.
சட்ட விவகாரங்களுக்கான புதிய தலைவர் பதவியும் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த சீர்திருத்தம், மதப் பணிகளுக்கான நிறுவனத்தின் (IOR) பயனர்களுக்கான பாதுகாப்பை மேலும் விரிவுபடுத்துகிறது.
வத்திக்கானின் கண்காணிப்பு மற்றும் நிதி தகவல் ஆணையத்தின் நடுவரின் அதிகார வரம்பை அனைத்து நிதிச் சேவைகளுக்கும் நீட்டிப்பதன் மூலம், வெளிப்படையான, பொறுப்புக்கூறக்கூடிய மற்றும் அனைத்துலக அளவில் நம்பகமான நிதி நிர்வாகத்திற்கான வத்திக்கானின் உறுதிப்பாட்டை இது வலுப்படுத்துகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.