தேடுதல்

பேராயர் கிறிஸ்தோப்-சகியா எல்-காசிஸ் பேராயர் கிறிஸ்தோப்-சகியா எல்-காசிஸ்   (Archbishop Christophe El-Kassis )

ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தர பார்வையாளராக பேராயர் எல்-காசிஸ் நியமனம்

ஐக்கிய நாடுகள் சபையின் நியூயார்க் தலைமையகத்தில் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராக, லெபனோன் நாட்டைச் சேர்ந்த பேராயர் கிறிஸ்தோப்-சகியா எல்-காசிஸ் அவர்களை திருத்தந்தை பதினான்காம் லியோ நியமித்துள்ளார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) நியூயார்க் தலைமையகத்தில் திருப்பீடத்தின் நிரந்தர பார்வையாளராக (Permanent Observer) பேராயர் கிறிஸ்தோப்-சகியா எல்-காசிஸ் (Christophe-Zakhia El-Kassis) அவர்களை திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் நியமித்துள்ளார்.

ஜூலை 25, சனிக்கிழமையன்று , இந்நியமனம் குறித்த அறிவிப்பை திருப்பீட செய்தித் தொடர்பகம்  வெளியிட்டது.

லெபனோன் நாட்டைச் சேர்ந்த பேராயர் கிறிஸ்தோப்-சகியா எல்-காசிஸ் அவர்கள், ரொசெல்லே (Roselle) பெயரளவு பேராயராகப் பணியாற்றி வருகிறார். இதுவரை அவர், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஏமன் நாடுகளுக்கான திருத்தந்தையின் தூதராகவும் (Apostolic Nuncio), அரேபியத் தீபகற்பத்திற்கான திருத்தந்தையின் பிரதிநிதியாகவும் பணியாற்றி வந்துள்ளார்.

1994ஆம் ஆண்டு அருள்பொழிவு பெற்ற அவர், 2000ஆம் ஆண்டில் திருப்பீடத்தின் தூதரகப் பணியில் இணைந்தார். அதன் பின்னர் இந்தோனேசியா, சூடான், துருக்கி ஆகிய நாடுகளிலும், திருப்பீடத்தின் அரசுச் செயலகத்திலும் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையில் திருப்பீடம் நிரந்தரப் பார்வையாளர் என்ற சிறப்பு அந்தஸ்தைக் கொண்டுள்ளது. இதன் மூலம், ஐ.நா. பொதுப் பேரவையிலும் அதன் பிற அமைப்புகளின் பணிகளிலும் பங்கேற்று, அமைதி, மனித மாண்பு, மதச் சுதந்திரம், மனித உரிமைகள் மற்றும் உலகளாவிய பொதுநலன் தொடர்பான விடயங்களில் திருஅவையின் நிலைப்பாடுகளை எடுத்துரைத்து வருகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

28 ஜூலை 2026, 13:46