2026.07.09 dark

வாசிப்பை புதிய அனுபவமாக மாற்றும் பான் டெய்ஜிங்கின் கலைக் கண்காட்சி!

வத்திக்கானின் கலாச்சாரம் மற்றும் கல்விக்கான திருப்பீடத் துறை, "ரீடிங், அகைன்" கலைத் தொடரின் இரண்டாவது அத்தியாயத்தை உரோம் நகரில் தொடங்கியுள்ளது.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

கலாச்சாரம் மற்றும் கல்விக்கான திருப்பீடத் துறை, "ரீடிங், அகைன்" (Reading, Again) என்ற கலைத் தொடரின் இரண்டாவது அத்தியாயத்தை, சீனக் கலைஞர் பான் டெய்ஜிங் உருவாக்கிய சிறப்பு கலை நிறுவலுடன், உரோம் நகரிலுள்ள கொன்சிலியாசியோனே 5 (Conciliazione 5) காட்சியகத்தில் தொடங்கியுள்ளது. இக்கண்காட்சிக்கான கலை ஒருங்கிணைப்பை (Curation) டொனாட்டியென் கிரோ அவர்கள் மேற்கொண்டுள்ளார்.

ஜூலை 2, வியாழனன்று, புனித பத்தாம் பயஸ் அரங்கில் (St. Pius X Hall) நடைபெற்ற நிகழ்வில், கலைஞர் பான் டெய்ஜிங் மற்றும் அவரது படைப்பை அறிமுகப்படுத்திய கலாச்சாரம் மற்றும் கல்விக்கான திருப்பீடத் துறையின் தலைவர் கர்தினால் ஜோசே டோலென்டினோ டி மெண்டோன்சா அவர்கள், பான் டெய்ஜிங்கின் இந்தக் கலைப்படைப்பு பார்வையாளர்களை நிகழ்காலத்தில் முழுமையாக வாழவும், தங்களின் உணர்வுகளை ஏற்றுக்கொள்ளவும், வாசிப்பை வெறும் எழுத்துகளைப் புரிந்துகொள்வதாக அல்லாமல், உடல், புலன்கள் மற்றும் மனித உள்ளத்தைத் தொடும் ஆழமான அனுபவமாக உணரவும் அழைக்கிறது என்று  குறிப்பிட்டார்.

பான் டெய்ஜிங், இந்த கலைநிறுவல் மனிதர்கள் தங்களைப்பற்றி சிந்திக்கவும், உள்ளார்ந்த பயணத்தை மேற்கொள்ளவும், இன்றைய இரைச்சலான உலகில் அமைதியைத் தேடிக் கண்டறியவும் உதவுகிறது என்று கர்தினால் மெண்டோன்சா அவர்கள் வலியுறுத்தினார்.

மேலும் அமைதி என்பது செயலற்ற நிலை அல்ல; மாறாக அது வளர்ச்சி, நேர்மை மற்றும் சுயஅறிவுக்கான இடமாகும் என்றும், கலை வழியாக தன்னையும் உலகின் உண்மையையும் ஆழமாகப் புரிந்துகொள்ள முயல்கிறேன் என்றும் குறிப்பிட்டார்.

இந்தக் கண்காட்சியை பிளேட்டோவின் குகை உவமைக்கும், புனித அகுஸ்தினாரின் நினைவகச் சிந்தனைக்கும் ஒப்பிட்டு காட்டிய கர்தினால் மெண்டோன்சா அவர்கள், இருள் கூட உண்மையை அறியும் பாதையாக மாற முடியும் என்பதை இந்தக் கலைப்படைப்பு வெளிப்படுத்துகிறது என்றும்  எடுத்துக்காட்டினார்.

கண்காட்சியின் கியூரேட்டரான டொனாட்டியென் கிரோ, சிற்பம், ஒலி, திரைப்படம் மற்றும் நிகழ்த்துக் கலை ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் பான் டெய்ஜிங்கின் படைப்புகள், மனித வாழ்க்கை, அடையாளம் மற்றும் பொதுவான மனிதநேயத்தை ஆராய்கின்றன என்று கர்தினால் மெண்டோன்சா அவர்கள் சுட்டிக்காட்டினார்.

மேலும், எழுத்தாளர் மார்சல் ப்ரூஸ்ட் கூறிய "ஒவ்வொரு வாசகரும் வாசிக்கும்போது தன்னைத்தானே வாசிக்கிறார்" என்ற கருத்தை மேற்கோள்காட்டிய கர்தினால் மெண்டோன்சா அவர்கள், இந்தக் கண்காட்சி ஒவ்வொருவரையும் தங்களின் உள்ளார்ந்த பயணத்திற்கு அழைக்கிறது என்றும் தெரிவித்தார்.

இந்தக் கண்காட்சி, கலையை வெறுமனே புரிந்துகொள்வதற்காக அல்ல, மாறாக தன்னிலைப் பிரதிபலிப்பு, மனிதச் சந்திப்பு மற்றும் மனிதநேயத்தின் ஆழத்தை மீண்டும் உணரும் ஆன்மிகப் பயணமாக அனுபவிக்க அழைக்கிறது என்று கர்தினால் மெண்டோன்சா அவர்கள் குறிப்பிட்டார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

09 ஜூலை 2026, 12:44