தேடுதல்

காஸ்டல் கந்தோல்ஃபோவில் உள்ள திருத்தந்தையின் தோட்டங்களிலுள்ள 'போர்கோ லவ்தாத்தோ ஸி' வளாகத்தின் இத்தாலிய தோட்டங்களை ஒட்டிய புதிய புகைப்படக் கண்காட்சி காஸ்டல் கந்தோல்ஃபோவில் உள்ள திருத்தந்தையின் தோட்டங்களிலுள்ள 'போர்கோ லவ்தாத்தோ ஸி' வளாகத்தின் இத்தாலிய தோட்டங்களை ஒட்டிய புதிய புகைப்படக் கண்காட்சி 

போர்கோ லவ்தாத்தோ சி வளாகத்தில் ‘மனிதனும் இயற்கையும்: நுட்பமான சமநிலைகள்’ புகைப்படக் கண்காட்சி!

காஸ்தல் கந்தோல்ஃபோவில் உள்ள போர்கோ லவ்தாத்தோ சி வளாகத்தில், “மனிதனும் இயற்கையும்: நுட்பமான சமநிலைகள்” என்ற புகைப்படக் கண்காட்சி ஜூலை 30 வரை நடைபெறுகிறது. மொனாக்கோ இளவரசர் இரண்டாம் ஆல்பர்ட் அறக்கட்டளையும், திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் இளைஞர் அறக்கட்டளையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்தக் கண்காட்சி, உயிரினப் பல்வகைமை, ஒருங்கிணைந்த சூழலியல் மற்றும் படைப்பைப் பாதுகாக்கும் மனிதகுலத்தின் பொறுப்பை வலியுறுத்துகிறது.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

காஸ்தல் கந்தோல்ஃபோவில் உள்ள திருத்தந்தையரின் தோட்டப் பகுதியில் அமைந்துள்ள போர்கோ லவ்தாத்தோ சி வளாகத்தில், “மனிதனும் இயற்கையும்: நுட்பமான சமநிலைகள்” (Man and Nature: Fragile Balances) என்ற புகைப்படக் கண்காட்சி ஜூலை 3 அன்று தொடங்கப்பட்டது. மொனாக்கோ இளவரசர் இரண்டாம் ஆல்பர்ட் அறக்கட்டளையின் இத்தாலிய கிளையும், திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால்  இளைஞர் அறக்கட்டளையும் இணைந்து இதை ஏற்பாடு செய்துள்ளன. இக்கண்காட்சி ஜூலை 30 வரை பார்வையாளர்களுக்காக திறந்திருக்கும்.

மொனாக்கோ இளவரசர் இரண்டாம் ஆல்பர்ட் சுற்றுச்சூழல் புகைப்பட விருதைப் பெற்ற படைப்புகள் இதில் இடம்பெற்றுள்ளன என்றும், உயிரினப் பல்வகைமையே உலகின் சமநிலைக்கு அடித்தளம் என்றும்  சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், சுற்றுச்சூழல் பாதிப்பு மனிதகுலத்தையும் பாதிக்கிறது என்பதை  இப்புகைப்படங்கள் எடுத்துக்காட்டுகின்றன என்றும், படைப்பின் அழகை ரசிப்பதோடு, இயற்கைச் சூழலைப் பாதுகாக்கும் பொறுப்பையும் உணர அழைப்பு விடுக்கின்றன என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.

கண்காட்சி திறப்புக்கு முன் “படைப்பைப் பராமரித்தல்: அறிந்து செயல்படுவோம்” என்ற கருத்தரங்கும் நடைபெற்றது. இதில் திருஅவைத் தலைவர்கள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் மற்றும் பல்வேறு துறை பிரதிநிதிகள் பங்கேற்று, ஒருங்கிணைந்த சூழலியல், உயிரினப் பல்வகைமை பாதுகாப்பு மற்றும் பொதுவான இல்லத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு குறித்து கலந்துரையாடினர்.

“அறிவு மட்டும் போதாது; அதை பொறுப்பாகவும் செயலாகவும் மாற்ற வேண்டும்” என்று மொனாக்கோ இளவரசர் இரண்டாம் ஆல்பர்ட் அறக்கட்டளையின் இத்தாலியக் கிளையின் தலைவர் மார்கோ கொலசாந்தி அவர்கள் வலியுறுத்தினார்.

லவ்தாத்தோ சி உயர்கல்வி மையத்தின் தலைமை இயக்குநர் கர்தினால் ஃபாபியோ பாஜ்ஜியோ அவர்கள், இந்த முயற்சி போர்கோ லவ்தாத்தோ சியின் கல்வி மற்றும் சுற்றுச்சூழல் பணியுடன் நெருக்கமாக இணைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் இளைஞர் அறக்கட்டளையின் தலைவர் டேனியேலே புரூனோ அவர்கள், படைப்பைப் பாதுகாப்பது ஒரு கடமை என்றும், இளைஞர்கள் இதில் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இறுதியாக  சியோலில் நடைபெறும் உலக இளைஞர் தினத்தின் போது நடைபெறும் அனைத்துலக மாநாட்டில் படைப்பைப் பாதுகாப்பது குறித்த சிறப்பு அமர்வும் இடம்பெறும் என்று அறிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

21 ஜூலை 2026, 13:06