தேடுதல்

சமயப் பணிகளுக்கான நிதி நிறுவனம் சமயப் பணிகளுக்கான நிதி நிறுவனம் 

IOR 2025 நிலைத்தன்மை அறிக்கை: அறநெறி நிதி மற்றும் பொதுநலப் பணியில் உறுதிப்பாடு

வத்திக்கான் வங்கி என பொதுவாக அழைக்கப்படும் மதப்பணிகளுக்கான நிறுவனமான IOR தனது 2025ஆம் ஆண்டிற்கான நிலைத்தன்மை அறிக்கையை வெளியிட்டு, மனித மாண்பு, பொதுநலம் மற்றும் திருஅவையின் சமூகக் கோட்பாட்டை மையமாகக் கொண்ட அறநெறி நிதி நிர்வாகத்தில் தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

வத்திக்கான் வங்கி என பொதுவாக அழைக்கப்படும் மதப்பணிகளுக்கான நிறுவனமான IOR தனது 2025ஆம் ஆண்டிற்கான நிலைத்தன்மை (Sustainability) அறிக்கையை வெளியிட்டுள்ளது. திருஅவையின் சமூகக் கோட்பாட்டின் அடிப்படையில், மனித மாண்பு, பொதுநலம் மற்றும் அறநெறி நிதி நிர்வாகத்தை மேம்படுத்துவதில் தனது உறுதிப்பாட்டை இவ்வறிக்கை மீண்டும் வலியுறுத்துகிறது.

110-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள 12,000-க்கும் அதிகமான கத்தோலிக்க நிறுவனங்கள் மற்றும் திருஅவைப் பணியாளர்களுக்கு சேவை வழங்கும் IOR, சுற்றுச்சூழல், சமூக மற்றும் நல்லாட்சிக் (ESG) கொள்கைகளை தனது நிதி நடவடிக்கைகளில் தொடர்ந்து ஒருங்கிணைத்து வருகிறது.

கத்தோலிக்க அறநெறிகளுக்கு முரணான, மனித உயிர், சமூகம், சுற்றுச்சூழல் மற்றும் நல்லாட்சிக்கு தீங்கு விளைவிக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்யாத கொள்கையை IOR தொடர்ந்து பின்பற்றுகிறது.

2025ஆம் ஆண்டில், IOR 67.6 மில்லியன் யூரோ பொருளாதார மதிப்பை உருவாக்கியதுடன், 51 மில்லியன் யூரோ நிகர இலாபத்தையும் பதிவு செய்தது. இதில் 36 விழுக்காடு திருத்தந்தையின் பணிகளுக்கும், 23 விழுக்காடு பணியாளர்களுக்கும், 14 விழுக்காடு வழங்குநர்களுக்கும் ஒதுக்கப்பட்டு, மீதமுள்ள தொகை நிறுவனத்தின் நீண்டகால நிலைத்தன்மையை வலுப்படுத்த பயன்படுத்தப்பட்டது.

மனிதவள மேம்பாட்டின் ஒரு பகுதியாக, பணியாளர்களுக்கு 2,700 மணி நேரத்திற்கும் அதிகமான தொழில்நுட்ப மற்றும் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டதுடன், 300 வாடிக்கையாளர்களுக்கு கத்தோலிக்க சமூகப் போதனையை அடிப்படையாகக் கொண்ட நிதி விழிப்புணர்வு பயிற்சிகளும் அளிக்கப்பட்டன.

சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் IOR குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. மின்னணு சேவைகள் விரிவாக்கம், ஆவணங்களின் முழுமையான மின்னாக்கம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாடு மற்றும் ஆற்றல் சிக்கன நடவடிக்கைகள் மூலம் காகிதப் பயன்பாடு 37 விழுக்காடு குறைக்கப்பட்டதுடன், உருவான அனைத்து கழிவுகளும் மறுசுழற்சி செயல்முறைகளுக்கு அனுப்பப்பட்டன.

இந்த அறிக்கையின் மூலம், பொறுப்புமிக்க நிதி நிர்வாகத்தையும், மனிதர்கள் மற்றும் சுற்றுச்சூழலின் நலனையும் ஒருங்கிணைத்து, உலகளாவிய திருஅவையின் பொதுநலப் பணிக்கு தொடர்ந்து சேவையாற்றுவதே தனது நோக்கம் என்பதை IOR மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

29 ஜூலை 2026, 13:36