வத்திக்கான் நிதி நிறுவனத்தின் மேற்பார்வை வாரியத்தில் மரினா நடாலே நியமனம்
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
வத்திக்கான் வங்கி என பொதுவாக அறியப்படும், IOR எனப்படும் சமயப் பணிகளுக்கான நிறுவனம் (Institute for the Works of Religion – IOR) தனது நிர்வாகத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், மேற்பார்வை வாரியத்தின் புதிய உறுப்பினராக மரினா நடாலே அவர்களை நியமித்துள்ளது.
ஜூலை 8 அன்று இந்த நியமனத்தை அறிவித்த IOR, வங்கி மற்றும் நிதித் துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவரான மரினா நடாலே, இத்தாலியின் முன்னணி நிதி நிறுவனங்களில் உயர்மட்ட பொறுப்புகளை வகித்துள்ளதாக தெரிவித்துள்ளது. நிறுவனத் திட்டமிடல், நிறுவன ஆளுமை, நிதி மேலாண்மை, நிறுவன இணைப்புகள் மற்றும் கையகப்படுத்தல்கள், நிறுவன மறுசீரமைப்பு ஆகிய துறைகளில் அவர் சிறப்பான நிபுணத்துவம் பெற்றுள்ளார்.
1988ஆம் ஆண்டு கிரெடிடோ இத்தாலியானோ வங்கியில் தனது பணியைத் தொடங்கிய மரினா நடாலே, பின்னர் பல முக்கிய நிறுவன இணைப்பு மற்றும் கையகப்படுத்தல் திட்டங்களை வழிநடத்தினார். 2008ஆம் ஆண்டு யூனிகிரெடிட் வங்கியின் ஐரோப்பிய தனியார் வங்கி சேவைத் தளத்தை உருவாக்கிய அவர், பின்னர் அந்த வங்கியின் செயற்குழு மேலாண்மைக் குழுவிலும் பணியாற்றினார். 2017ஆம் ஆண்டு வரை தலைமை நிதி அலுவலர் மற்றும் துணைப் பொதுமேலாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்தார்.
2017 முதல் 2023ஆம் ஆண்டு வரை இத்தாலி அரசுக்குச் சொந்தமான சொத்து மேலாண்மை நிறுவனமான AMCO-வின் தலைமைச் செயல் அலுவலராகவும் பொதுமேலாளராகவும் பணியாற்றிய அவர், அந்நிறுவனத்தின் வளர்ச்சியை வெற்றிகரமாக முன்னெடுத்தார். தற்போது செர்ரி வங்கியின் நிர்வாக வாரியத் தலைவராகவும், நிதி மற்றும் நிறுவனத் திட்டமிடல் ஆலோசகராகவும் பணியாற்றி வருகிறார்.
மரினா நடாலே அவர்களின் நியமனத்தை வரவேற்ற IOR-இன் மேற்பார்வை வாரியத் தலைவர் பிரான்சுவா பாலி, ஐரோப்பிய வங்கித் துறையில் அவர் பெற்றுள்ள நீண்டகால தலைமை அனுபவம், நிறுவனத்தின் நிர்வாகத் திறனையும் நீண்டகால செயல் திட்டங்களையும் மேலும் வலுப்படுத்தும் என்றும், அதேவேளையில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் நேர்மை ஆகிய அடிப்படைக் கொள்கைகளை நிலைநிறுத்த உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.
வத்திக்கான் நகரில் தொழில்முறை நிதிச் சேவைகளை வழங்க அதிகாரம் பெற்றுள்ள ஒரே நிறுவனமான IOR, உலகின் 110-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள 12 ஆயிரத்திற்கும் அதிகமான கத்தோலிக்க திருஅவையுடன் தொடர்புடைய வாடிக்கையாளர்களுக்கு நிதிச் சேவைகளை வழங்கி வருகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.