வீடற்றோர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதே நிலையான நகர வளர்ச்சியின் அடித்தளம்: திருப்பீடம்
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
மனித மாண்பையும் பொதுநலனையும் மையமாகக் கொண்ட நிலையான நகரங்களை உருவாக்க, வீடற்றோர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதை அரசுகள் முதன்மைப் பணியாகக் கொள்ள வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அவையில் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் குழு வலியுறுத்தியுள்ளது.
புதிய நகர்ப்புற செயல் திட்டத்தின் (New Urban Agenda) 10ஆம் ஆண்டு நிறைவையொட்டி, நியூயார்க் நகரில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டின் ஐ.நா. உயர்மட்டக் கூட்டத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், வீடு என்பது வணிகப் பொருளாகவோ, நிதிச் சொத்தாகவோ கருதப்படக் கூடாது; அது ஒவ்வொரு மனிதருக்கும் உரிய அடிப்படை மனித உரிமை என திருப்பீடம் வலியுறுத்தியுள்ளது.
வீடற்ற நிலை, பாதுகாப்பு, நிலைத்தன்மை, தனியுரிமை மற்றும் சமூகத்தில் சேர்ந்திருக்கும் உணர்வை மனிதர்களிடமிருந்து பறிப்பதோடு, பல அடிப்படை மனித உரிமைகளையும் மறுத்து, குடும்பங்களை வறுமை மற்றும் புறக்கணிப்பின் சுழற்சிக்குள் தள்ளுகிறது என்றும் அந்த அறிக்கை கவலை தெரிவித்துள்ளது.
திருத்தந்தை அவர்களின் மகத்தான மானுடம் திருமடலை மேற்கோள்காட்டிய திருப்பீடம், உண்மையான வளர்ச்சி மனிதரை மையமாகக் கொண்டிருக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
மேலும், மலிவு விலையில் தரமான வீடுகள், ஒருங்கிணைந்த சமூகச் சேவைகள், மற்றும் வறுமை, வேலைவாய்ப்பின்மை, மனநலப் பிரச்சனைகள், போதைப்பழக்கம், குடும்பச் சீர்குலைவு, இடம்பெயர்வு, போர் மற்றும் மோதல்கள் போன்ற வீடற்ற நிலைக்கான அடிப்படைக் காரணங்களை நீக்கும் கொள்கைகளில் அரசுகள் முதலீடு செய்ய வேண்டும் என்றும் திருப்பீடம் கேட்டுக்கொண்டுள்ளது.
உள்ளூர் சமூகங்கள், குடிமை அமைப்புகள், சமய அமைப்புகள் மற்றும் வீடற்ற நிலையை அனுபவித்தவர்களுடன் இணைந்து செயல்படுவதன் அவசியத்தையும் வலியுறுத்திய திருப்பீடம், ஒரு நகரத்தின் உண்மையான வளர்ச்சி அதன் உயரமான கட்டடங்களாலோ அல்லது பொருளாதார வளத்தாலோ அளவிடப்படுவதில்லை; மாறாக, ஒவ்வொரு மனிதரின் மாண்பைப் பாதுகாத்து, அனைவருக்கும் சமவாய்ப்பும் நம்பிக்கையும் அளிக்கும் திறனில்தான் அதன் உண்மையான நிலைத்தன்மை வெளிப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.