ஐக்கிய நாடுகள் அமைப்பின் சின்னம் ஐக்கிய நாடுகள் அமைப்பின் சின்னம்  (AFP or licensors)

ஆப்பிரிக்காவில் வறுமையின் ஆணிவேரை அகற்ற நீண்டகால ஆதரவு தேவை: திருப்பீடம்

ஆப்பிரிக்க நாடுகளில் வறுமையின் அடிப்படைக் காரணங்களை நீக்க, அனைத்துலக சமூகம் குறுகியகால நிவாரணங்களுடன் நீண்டகால மற்றும் நிலையான ஆதரவை வழங்க வேண்டும்.

ஜான்சிராணி அருளாந்து – வத்திக்கான்

ஆப்பிரிக்க நாடுகளில் வறுமையின் அடிப்படைக் காரணங்களை நீக்குவதற்கு, குறுகியகால நிவாரண உதவிகள் மட்டுமன்றி, நீண்டகால மற்றும் நிலையான ஆதரவை அனைத்துலக சமூகம் வழங்க வேண்டும் என்று திருப்பீடம் வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் அவைக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் குழு, ஜூலை 8 அன்று வெளியிட்ட அறிக்கையில், குறிப்பாக தீவிர வறுமை உலகின் மிகப்பெரிய சவாலாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

மேலும், வறுமை காரணமாக கோடிக்கணக்கான மக்கள், குறிப்பாக பெண்களும் குழந்தைகளும், போதுமான உணவு, தூய்மையான குடிநீர், நலவாழ்வு வசதிகள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய அடிப்படை உரிமைகளை இழந்து வருவதுடன், ஒவ்வொரு மனிதருக்கும் இறைவன் வழங்கியுள்ள மாண்பும் மீறப்படுவதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த அறிக்கை, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான உயர்மட்ட அரசியல் மன்றத்தில், ஆப்பிரிக்காவின் மிகவும் பின்தங்கிய, கடற்கரை இல்லாத மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் நிலையான வளர்ச்சி இலக்குகளை முன்னேற்றுவது குறித்த அமர்வில் வழங்கப்பட்டது.

2030ஆம் ஆண்டுக்குள் நிலையான வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கான காலக்கெடு நெருங்கி வரும் நிலையில், வளர்ச்சிக்குத் தடையாக உள்ள கட்டமைப்பு சார்ந்த இடர்களை அகற்றுமாறு திருப்பீடம் அனைத்துலக சமூகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. அதேவேளையில், சலுகை அடிப்படையிலான நிதியுதவிகளை அதிகரித்தல், நியாயமான உலக வர்த்தகத்தை ஊக்குவித்தல், தொழில்நுட்பப் பரிமாற்றத்தை விரிவுபடுத்தல் மற்றும் பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் வகையில் கடன் தள்ளுபடிகளை வழங்குதல் ஆகியவை நிலையான வளர்ச்சிக்கு அவசியமானவை என்றும் அது வலியுறுத்தியுள்ளது.

மேலும், ஒவ்வொரு நாட்டின் தனித்துவமான சவால்களான புவியியல் தனிமை, காலநிலை மாற்றம் மற்றும் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை போன்றவை சமூக ஏற்றத்தாழ்வுகளை மேலும் அதிகரித்து வருவதால், அவற்றைக் கருத்தில் கொண்டு வளர்ச்சித் திட்டங்கள் வடிவமைக்கப்பட வேண்டும் என்றும் திருப்பீடம் தெரிவித்துள்ளது.

இறுதியாக, குடும்பம் சமூகத்தின் அடித்தளம் மட்டுமல்ல, நெருக்கடிகளை எதிர்கொள்ளும் ஆற்றலின் முக்கிய ஆதாரமும் ஆகும் என்று குறிப்பிட்ட திருப்பீடம், குடும்பங்களை வலுப்படுத்தும் கொள்கைகளே வறுமையைக் குறைப்பதற்கும், சமூக நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கும், ஆப்பிரிக்கா முழுவதும் முழுமையான மனித வளர்ச்சியை முன்னேற்றுவதற்கும் இன்றியமையாதவை என வலியுறுத்தியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

10 ஜூலை 2026, 12:24