ரூப்னிக் வழக்கில் வெளியான தகவல்கள் ஆதாரமற்றவை: திருப்பீடம் விளக்கம்
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
அருள்பணி மார்கோ இவான் ரூப்னிக் அவர்கள் தொடர்புடைய திருஅவைச் சட்ட வழக்கில் ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அண்மையில் வெளியான ஊடக அறிக்கைகளை, "முற்றிலும் ஆதாரமற்றவை" என்று கூறி திருப்பீடம் நிராகரித்துள்ளது.
இதுகுறித்து செயதியாளர்களிடம் பேசிய திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் இயக்குநர் மத்தேயு புரூனி அவர்கள், மறைமாவட்டங்கள், இயேசு சபையினர், தொடர்புடைய நபர்கள் மற்றும் ஊடக அறிக்கைகளிடமிருந்து பெறப்பட்ட ஆவணங்களை இந்த வழக்கைக் கையாளும் குழு, ஆய்வு செய்து வருவதாகக் கூறினார்.
எந்தவொரு நீதித்துறை செயல்பாட்டையும் போலவே, தற்போதைய நடவடிக்கைகள் குறித்த எந்தவொரு தகவலையும் வெளிப்படையாக அறிவிக்க முடியாது என்றும் புரூனி வலியுறுத்தியுள்ளார்.
விசாரணையில் நேர்மையைப் பாதுகாக்கவும், இதில் தொடர்புடையவர்களுக்கு மேலும் மன உளைச்சலை ஏற்படுத்துவதைத் தவிர்க்கவும் இரகசியத்தன்மையைப் பேணுவது அவசியம் என்று கூறிய புரூனி அவர்கள், ஒருவேளை விசாரணைக் குழுவுக்கு கூடுதல் தகவல் தேவை எனத் தீர்மானிக்கப்பட்டால், அதைப் பெறுவதற்கான தேவையான நடவடிக்கைகளை அது சுதந்திரமாக எடுக்கும் என்றும் கூறியுள்ளார்.
திருஅவைச் சட்டத்தின்படியான குற்றவியல் விசாரணை ஒரு நீதித்துறை தன்மையைக் கொண்டுள்ளது என்பதையும், கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்குப் பொருந்தக்கூடிய வரையறைச் சட்டம் இருந்தபோதிலும் விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது என்பதையும் திருப்பீடம் தெளிவுபடுத்தியுள்ளது.
திருஅவைச் சட்டத்தின்படி, அருள்பணி ரூப்னிக் குற்றம் செய்தாரா இல்லையா என்பதை திருஅவைத் தீர்ப்பாயமே இறுதியாகத் தீர்மானிக்கும். திருஅவையின் உள் விவகாரங்களை திருஅவைச் சட்டம் நிர்வகிக்கிறது என்றும், பொருத்தமான இடங்களில் திருஅவையின் தண்டனைகளை விதிக்க அது அனுமதிக்கிறது என்றும் அந்த அறிக்கை மேலும் குறிப்பிட்டுள்ளது.
அருள்பணி ரூப்னிக் மீது சுமத்தப்படும் எந்தவொரு குற்றச்சாட்டும், அது நிகழ்ந்ததாகக் கூறப்படும் நாடுகளின் சிவில் சட்டங்களுக்கு உட்பட்டதாகும். அந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பான காலவரையறைகள் மற்றும் சட்டநடவடிக்கைகள், திருஅவையின் அதிகாரத் தலையீடு இன்றி, அந்தந்த நாடுகளின் சிவில் சட்டங்களின்படியே தீர்மானிக்கப்படும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.