எய்ட்ஸ் நோயை ஒழிப்பதற்கான புதுப்பிக்கப்பட்ட உலகளாவிய அர்ப்பணிப்பிற்கு திருப்பீடம் அழைப்பு!
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
எய்ட்ஸ் நோயை ஒழிப்பதற்கான புதுப்பிக்கப்பட்ட உலகளாவிய அர்ப்பணிப்பிற்கு திருப்பீடம் அழைப்பு விடுத்துள்ளது. எச்.ஐ.வி (HIV) தொற்றைத் தடுப்பதிலும், அதற்கான சிகிச்சையளிப்பதிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை வரவேற்கும் அதே வேளையில், வளரும் நாடுகளில் உள்ள பலருக்கு இன்னும் உயிர்காக்கும் மருத்துவ வசதிகள் கிடைக்கவில்லை என்பதையும் திருப்பீடம் சுட்டிக்காட்டியுள்ளது.
நியூயார்க்கில் இடம்பெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் எச்.ஐ.வி/எய்ட்ஸ் (HIV/AIDS) தொடர்பான உயர்மட்டக் கூட்டத்தில் உரையாற்றிய திருப்பீடத்தின் தூதுக்குழு , "2010 ஆம் ஆண்டு முதல் பெரும்பாலான பகுதிகளில் புதிய எச்.ஐ.வி தொற்றுகள் குறைந்துள்ளன" என்றும், "இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்த உதவும் ஆன்டிரெட்ரோவைரல் (antiretroviral) சிகிச்சை பரவலாக அதிகரித்திருப்பது எச்.ஐ.வி-யுடன் வாழும் மக்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ உதவியுள்ளது" என்றும் குறிப்பிட்டுள்ளது.
அனைவருக்கும் நிலையான மருத்துவப் பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்வதற்காக, நலவாழ்வு அமைப்புகள், மருத்துவ ஆராய்ச்சி மற்றும் உள்ளூர் மருந்து உற்பத்தி ஆகியவற்றில் தொடர்ச்சியான முதலீடுகளின் அவசியத்தையும் திருப்பீடம் வலியுறுத்தியுள்ளது.
திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் வார்த்தைகளை மேற்கோள்காட்டி, பொருள் சார்ந்த வாழ்வைத் தேடி ஓடும்போது, வறுமையிலும் பாதிப்பிலும் வாழ்பவர்களைப் புறக்கணிக்கக் கூடாது என்று திருப்பீடத்தின் தூதுக்குழு எச்சரித்துள்ளது.
எச்.ஐ.வி-யுடன் வாழும் மக்களில் வெறும் மூன்று விழுக்காட்டினர் மட்டுமே குழந்தைகள் என்றாலும் குழந்தைகளுக்கும் இந்தக் கூட்டத்தில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டது.
தாமதமான நோயறிதல் மற்றும் போதுமான சிகிச்சை கிடைக்காததால், எச்.ஐ.வி. தொடர்பான உயிரிழப்புகளில் 12 விழுக்காட்டினர் குழந்தைகளாக உள்ளனர் என்று சுட்டிக்காட்டியுள்ள திருப்பீடம், மேலும், தாய்மார்களுக்கான தரமான மகப்பேறு பராமரிப்பு, ஆரம்ப நிலையிலேயே எச்.ஐ.வி. பரிசோதனை மற்றும் குழந்தைகளுக்கு ஏற்ற மருந்துகள் வழங்கப்படுவதன் அவசியத்தையும் அது வலியுறுத்தியுள்ளது.
கத்தோலிக்கத் திருஅவையின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்திய திருப்பீடத் தூதுக்குழு, உலகளவில் எச்.ஐ.வி. தொடர்பான சிகிச்சை மற்றும் பராமரிப்பில் ஏறக்குறைய நான்கில் ஒரு பங்கை கத்தோலிக்க நலவாழ்வு நிறுவனங்கள் வழங்கி வருவதாக தெரிவித்துள்ளது.
எச்.ஐ.வி.யுடன் வாழும் ஒவ்வொருவரின் உள்ளார்ந்த மனித மாண்பை மதித்து, அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை மற்றும் பராமரிப்பு வழங்கும் பணியில் திருஅவை உறுதியாக தொடரும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.