2026.07.19  Berychiv UCRAINA

உக்ரைனில் உள்ள பெர்டிச்சிவ் மரியன்னை திருத்தலத்தில் அமைதிக்காக இறைவேண்டல் செய்த பேராயர் காலகர்

உக்ரைனில் இலத்தீன் வழிபாட்டு முறை கத்தோலிக்கத் திருஅவையின் மறுசீரமைப்பின் 35-ஆம் ஆண்டு விழாவையொட்டி பெர்டிச்சிவ் கார்மேல் அன்னை திருத்தலத்தில் நடைபெற்ற திருப்பலியில், திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் சிறப்புத் தூதரான பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்கள் அமைதிக்காக இறைவேண்டல் செய்தார்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

ஜூலை 19, ஞாயிறன்று, பெர்டிச்சிவில் அமைந்துள்ள கார்மேல் அன்னை தேசியத் திருத்தலத்தில் நடைபெற்ற திருப்பலிக்குத் தலைமை தாங்கிய திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் சிறப்புத் தூதரான பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்கள், உக்ரைனில் நிலையான அமைதி நிலவ இறைவேண்டல் செய்தார்.

இந்த நிகழ்வானது, உக்ரைனில் இலத்தீன் வழிபாட்டு முறை கத்தோலிக்கத் திருஅவையின் கட்டமைப்புகள் மறுசீரமைக்கப்பட்டதன் 35-வது ஆண்டு விழாவையும், திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்கள் இந்த நாட்டிற்கு மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தின் 25-வது ஆண்டு விழாவையும் குறிக்கும் வகையில் அமைந்தது.

பலத்த மழை மற்றும் தொடர்ந்து இடம்பெற்று வரும் போர் ஆகியவற்றுக்கு இடையேயும், குடும்பங்கள், இளைஞர்கள், முதியவர்கள், ஆயர்கள், அருள்பணியாளர்கள் மற்றும் துறவிகள் என 3,000-க்கும் மேற்பட்ட திருப்பயணிகள் திறந்தவெளியில் இடம்பெற்ற இந்தத் திருப்பலியில் கலந்துகொண்டனர். அப்போது பேராயர் காலகர், திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் வாழ்த்துக்களையும் ஆன்மீக உடனிருப்பையும் தெரிவித்தார், மேலும் உக்ரைனுக்காக திருத்தந்தை தொடர்ந்து இறைவேண்டல் செய்துவருவதாகவும் அங்கிருந்த கிறிஸ்தவ நம்பிக்கையாளர்களுக்கு உறுதியளித்தார்.

தனது மறையுரையில், இறைவாக்கினர் எலியா இறைவேண்டலில் கொண்டிருந்த விடாமுயற்சியைப் பற்றி எடுத்துக்காட்டிய பேராயர் காலகர் அவர்கள், அமைதி என்பது கடவுள் தரும் பரிசு என்பதையும், துன்பங்களுக்கு மத்தியிலும் கிறிஸ்தவர்கள் ஒருபோதும் நம்பிக்கையை இழக்கக்கூடாது என்பதையும் அங்கு கூடியிருந்த நம்பிக்கையாளர்களுக்கு நினைவூட்டினார். உக்ரைன் மக்கள் இறைவேண்டல், பற்றுறுதி, மனம் திரும்புதல் மற்றும் கடவுளின் பராமரிப்பின் மீதான நம்பிக்கையில் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

புனித கன்னி மரியாவின் வல்லமைமிக்க பரிந்துரையைப் பற்றி எடுத்துரைத்த பேராயர் அவர்கள், மேலும் நம்பிக்கையின் அன்னையான பெர்டிச்சிவ் அன்னையிடம் தங்களை ஒப்படைக்குமாறு அனைவருக்கும்  அழைப்பு விடுத்தார். உக்ரைனில் அமைதிக்காகவும், அரசியல் தலைவர்கள், போர்வீரர்கள், காயமடைந்தவர்கள், அன்பானவர்களை இழந்தவர்கள் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் இறைவேண்டல் செய்தார்.

"எந்தவொரு போரும் கடவுளின் பிள்ளைகளாகிய மனிதரின் மாண்பைக் குறைக்கவோ, அவர்களை இறைவனின் அன்பிலிருந்து பிரிக்கவோ முடியாது" என்று புனித பவுலின் போதனையை மேற்கோள்காட்டிய பேராயர் காலகர் அவர்கள், அச்சமோ மனச்சோர்வோ தங்களின் நம்பிக்கையையும் எதிர்நோக்கையும் சிதைக்க இடமளிக்காமல், இறைவன் மீது உறுதியான நம்பிக்கையுடன் நிலைத்திருக்குமாறு கிறிஸ்தவ நம்பிக்கையாளர்களை ஊக்குவித்தார்.

திருப்பலியின் முடிவில், உக்ரைன் மீதான திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் நெருக்கத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இளம் திருப்பயணிகள் பேராயருக்கு மலர்களையும், மரியன்னையின் மரத்தாலான உருவப்படத்தையும் வழங்கினர்.

ஜூலை 20 அன்று, அமைதிக்கான தனது மேய்ப்புப் பணி மற்றும் தூதரகப் பணியின் ஒரு பகுதியாக, பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்கள் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் பிற உயர்மட்ட அரசுத் தலைவர்களைச் சந்திக்க உள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

20 ஜூலை 2026, 10:16