தேடுதல்

2026.07.30 China

சீனாவின் பாமெங் மறைமாவட்டத்தின் துணை ஆயராக ஆயர் பிரான்சிஸ் சேவியர் துவான் யோங்குன்

திருப்பீடம் மற்றும் சீன மக்கள் குடியரசுக்கு இடையிலான இடைக்கால ஒப்பந்தத்தின்படி, சீனாவின் பாமெங் மறைமாவட்டத்தின் துணை ஆயராக அருள்பணி பிரான்சிஸ் சேவியர் துவான் யோங்குன் அவர்களை திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் நியமித்துள்ளார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

கடந்த ஜூன் 15ஆம் நாள், சீனாவின் உள் மங்கோலியா தன்னாட்சி மாநிலத்தில் அமைந்துள்ள பாமெங் (Bameng) மறைமாவட்டத்தின் துணை ஆயராக அருள்பணி பிரான்சிஸ் சேவியர் துவான் யோங்குன் அவர்கள் நியமிக்கப்பட்டார். திருப்பீடத்திற்கும் சீன மக்கள் குடியரசுக்கும் இடையிலான இடைக்கால ஒப்பந்தத்தின் அடிப்படையில், திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களால் இந்நியமனம் வழங்கப்பட்டது.

கடந்த ஜூலை 29ஆம் நாள் பாமெங் நகரில் ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்ட ஆயர் யோங்குன் அவர்கள், 1980 டிசம்பர் 6ஆம் நாள் உள் மங்கோலியாவின் ஹாங்ஜின் ஹௌகி பகுதியில் பிறந்தார். 2000 முதல் 2007ஆம் ஆண்டு வரை ஹெபெய் இறையியல் கல்லூரியில் கல்வி பயின்ற அவர், பின்னர் 2008 முதல் 2013ஆம் ஆண்டு வரை பெய்ஜிங் பல்கலைக்கழகம் மற்றும் பெய்ஜிங் அயல்மொழிகள் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி மேற்கொண்டார்.

2011 ஜனவரி 1 அன்று பாமெங் மறைமாவட்டத்திற்காக அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்ட அவர், 2013 முதல் 2016 வரை தைவானில் உள்ள ஃபூ ஜென் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் தனது மேற்படிப்பைத் தொடர்ந்தார்.

தாய்மறைமாவட்டத்திற்குத் திரும்பிய பின்னர், 2016 முதல் 2020 வரை மறைமாவட்ட உருவாக்க மையத்தின் இயக்குநராகப் பணியாற்றினார். பின்னர், பாமெங் மறைமாவட்டத்தின் முதன்மை அருள்பணியாளராக  (Vicar General) மற்றும் மறைமாவட்டப் பேராலயப் பங்குத்தந்தையாக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

30 ஜூலை 2026, 13:34