தேடுதல்

கர்தினால் பியெத்ரோ பரோலின் கர்தினால் பியெத்ரோ பரோலின்   (ANSA)

ஈரானுடன் மீண்டும் பேச்சுவார்த்தை அவசியம்; உலக அமைதிக்கு உரையாடலே வழி: கர்தினால் பரோலின்

காசா, உக்ரைன் உள்ளிட்ட மோதல் பகுதிகளில் அமைதியை நிலைநாட்ட உரையாடல், தூதரகம் மற்றும் நல்லிணக்கமே வழி என்று திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் வலியுறுத்தினார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

உலகின் நன்மைக்காக ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்றும், காசாவிலும் அமைதியை ஏற்படுத்த உரையாடலே வழி என்றும், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

ஜூலை 22, புதனன்று, இத்தாலியில் உள்ள திருப்பீடத்திற்கான இத்தாலிய தூதரகமான பலாச்சோ பொரோமேயோவில் நடைபெற்ற, அன்டோனியோ பிரெசியோசி எழுதிய "Easter of Peace: From John XXIII to Leo XIV Towards the Jubilee of 2033" என்ற நூல் வெளியீட்டு விழாவின் ஒரு பகுதியாக செய்தியாளர்களிடம் பேசியபோது கர்தினால் பரோலின் அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனில் நடைபெற்று வரும் போரின் அண்மைய நிலை குறித்து கருத்து தெரிவித்த கர்தினால் பரோலின் அவர்கள், "அமைதிக்கான வாய்ப்புகள் தென்படாத நிலையில், மோதல்கள் மேலும் தீவிரமடைந்து வருகின்றன" என்று கவலை தெரிவித்துள்ளார்.

அண்மையில் உக்ரைனுக்குச் சென்று திரும்பிய பன்னாட்டு உறவுகளுக்கான திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்களின் தகவலின்படி, கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை இரவுக்கு இடையில் மிகவும் கடுமையான தாக்குதல்களில் ஒன்று நடைபெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஈரானுடன் மீண்டும் உரையாடல் அவசியம்

ஈரான் தொடர்பாகப் பேசிய கர்தினால் பரோலின் அவர்கள், முன்பு இருந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்போது நடைமுறையில் இல்லை என்றும், அந்நாட்டின் நிலைமை குறித்து கவலை தெரிவித்தார்.

"இந்த நிலைமை எவ்வாறு முடிவடையும் என்பது யாருக்கும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், நாட்டின் நலனுக்காகவும், உலகின் நலனுக்காகவும், நீடித்த ஒப்பந்தத்தை எட்டும் நோக்கில் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கப்பட வேண்டும். இத்தகைய சூழல்கள் உலக அமைதிக்கே அச்சுறுத்தலாக உள்ளன" என்று அவர் கூறினார்.

"சுவர்களுக்கு இல்லை; பாலங்களுக்கு ஆம்"

காசா பகுதியில் சுவர் அமைப்பது தொடர்பாக வெளியான தகவல்கள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த கர்தினால் பரோலின் அவர்கள், "சுவர்களுக்கு இல்லை; பாலங்களுக்கு ஆம்" என்பதே திருப்பீடத்தின் நிலைப்பாடு என்று தெரிவித்தார். இந்தக் கொள்கையே அந்த முயற்சியைக் குறித்த திருப்பீடத்தின் மதிப்பீட்டையும் பிரதிபலிப்பதாக அவர் கூறினார்.

வன்முறையால் ஒருபோதும் பலன் இல்லை

இத்தாலியின் போலோன்யா நகரில் அப்தெர்ரஹிம் ஃபாகிர் என்ற நபர் காவல்துறையினரால் தரையில் தள்ளப்பட்டதைத் தொடர்ந்து உயிரிழந்த சம்பவத்தால் ஏற்பட்ட வன்முறைகள் குறித்தும் கர்தினால் பரோலின் கருத்து தெரிவித்தார்.

"உண்மை வெளிச்சத்திற்கு வர வேண்டும் என்பதே எனது விருப்பம். அதற்குத் தேவையான விசாரணைகள் அமைதியான சூழலில் நடைபெற வேண்டும்; வன்முறைக்கு இடமளிக்கக் கூடாது. வன்முறை ஒருபோதும் பயனளிப்பதில்லை" என்று அவர் கூறினார்.

அமைதியை வளர்ப்பதில் திருஅவையின் பங்கு

இத்தாலியில் 2021-ஆம் ஆண்டு தனது நகைக்கடையில் கொள்ளையடிக்க வந்த இருவரைக் கொன்று, மற்றொருவரைக் காயப்படுத்திய குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற நகைக்கடை உரிமையாளர் மரியோ ரொஜேரோ வழக்கைத் தொடர்ந்து எழுந்த கடுமையான பொதுக் கருத்து வேறுபாடுகளையும் குறிப்பிட்ட கர்தினால் பரோலின் அவர்கள், அமைதி மற்றும் உரையாடலை ஊக்குவிக்கும் தனது பணியை திருஅவை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகக் கூறினார்.

"விதைப்பவரின் உவமையைப் போல, திருஅவை தொடர்ந்து அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையின் வார்த்தைகளை விதைத்து வருகிறது. அவை பலன் தரும் என்ற நம்பிக்கையை நாங்கள் இழக்கவில்லை. முடிவுகள் எப்படியிருந்தாலும், அமைதியான மற்றும் ஆக்கப்பூர்வமான மனிதச் சமூக வாழ்விற்கு இம்மதிப்புகள் இன்றியமையாதவை என்பதால், அவற்றைத் தொடர்ந்து வலியுறுத்துவது திருஅவையின் கடமையாகும்" என்று அவர் கூறினார்.

அமைதிக்கான திருஅவையின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு

நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய கர்தினால் பரோலின் அவர்கள், இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்குப் பின்னர் திருத்தந்தையர்கள் ஒவ்வொருவரும் உலக அமைதியை முன்னெடுத்த விதத்தை எடுத்துக்காட்டினார்.

புனிதர் யோவான் XXIII-இன் Pacem in Terris, புனிதர் ஆறாம் பவுல் அவர்களின் "இனி போர் வேண்டாம்!" என்ற அழைப்பு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறிய "துண்டு துண்டாக நடைபெறும் உலகப் போர்" என்ற எச்சரிக்கை, மற்றும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வலியுறுத்திய "போர் மனிதகுலத்திற்கு ஒருபோதும் தகுதியானதல்ல" என்ற கருத்து ஆகியவற்றை மேற்கோள் காட்டிய அவர், திருஅவை தொடர்ந்து "அமைதியின் உயிர்த்தெழுதலை" உலகிற்கு வழங்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

இறுதியாக 2033-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சிறப்பு யூபிலி ஆண்டை முன்னிட்டு கிறிஸ்தவர்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்தவும், உரையாடல், தூதரகம் மற்றும் நல்லிணக்கத்தின் வழியாக உலகின் பிளவுகளைத் தாண்டிச் செல்லவும் இந்தப் பயணம் உதவும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

23 ஜூலை 2026, 14:00