ஒன்றிணைந்த திருஅவை: சொல்லல்ல, செயலே முக்கியம்! — கர்தினால் மரியோ கிரெச்
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
ஒன்றிணைந்த பயணம் (synodality) என்பது வெறுமனே விவாதிக்கப்படுவதாக மட்டும் இல்லாமல், உள்ளூர் திருஅவைகளின் அன்றாட வாழ்க்கையில் வாழ்ந்து காட்டப்பட வேண்டும் என்று ஆயர்கள் மாமன்றத்தின் (Synod of Bishops) பொதுச் செயலாளரான கர்தினால் மரியோ கிரெச் அவர்கள் கூறியுள்ளார்.
ஜகார்த்தாவில் இடம்பெற்ற ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் (FABC) 12-வது நிறைவிறுதிப் பேரவையில் பங்கேற்றவர்களிடம் உரையாற்றிய போது கர்தினால் கிரெச் அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்.
"ஒன்றிணைந்த மனமாற்றத்திற்கான அழைப்பு மற்றும் ஆசியாவில் பாலங்களாகவும் பாலங்களை உருவாக்குபவர்களாகவும் இருப்பதற்கான பணி" என்ற கருப்பொருளில் பேசிய அவர், ஒன்றிணைந்த திருஅவையின் (Synodal Church) பயணத்தை வாழ்வில் செயல்படுத்துவதற்கான அடிப்படை இடமாக உள்ளூர் திருஅவையே திகழ்கிறது என்று வலியுறுத்தியுள்ளார்.
இது வெறுமனே ஒரு நிர்வாகப் பிரிவு மட்டுமல்ல; நற்செய்தி அறிவிக்கப்படும், அருள்சாதனங்கள் கொண்டாடப்படும், மற்றும் கிறிஸ்துவுடனான ஒன்றிப்பில் நம்பிக்கையாளர்கள் கூடிவரும் உலகளாவிய திருஅவையின் உண்மையான வெளிப்பாடாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
"மேலும், ஒவ்வொரு உள்ளூர் திருஅவையும் தனது தனித்துவமான கொடைகள், அனுபவங்கள் மற்றும் விசுவாசச் சாட்சியங்களைப் பகிர்வதன் மூலம் உலகளாவிய திருஅவையின் வாழ்வையும் பணியையும் வளப்படுத்துகிறது என்றும் கர்தினால் கிரெச் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
2021-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஒன்றிணைந்த பயணம் இறைமக்களுக்குச் செவிமடுப்பதை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டது என்றும், பங்களிப்பை ஒரு வழிமுறையாகவும் இலக்காகவும் கொண்டுள்ளது என்றும் எடுத்துக்காட்டிய கர்தினால் கிரெச் அவர்கள், இந்தச் செயல்முறை, உள்ளூர் சமூகங்களுக்கும் உலகளாவிய திருஅவைக்கும் இடையிலான தொடர்ச்சியான கருத்துப் பரிமாற்றத்தை ஊக்குவித்ததுடன், அடித்தட்டு மக்களின் குரல்கள் மாமன்றத்தின் விவேகத்தை வடிவமைப்பதில் முக்கியப் பங்காற்றியது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பல்சமய உரையாடல், கலாச்சாரப் பன்முகத்தன்மை, சிறுபான்மை கிறிஸ்தவச் சமூகங்கள் மற்றும் ஏழைகளுக்கான சேவை ஆகியவற்றில் ஆசியத் திருஅவை கொண்டுள்ள அனுபவங்களை உலகளாவிய திருஅவைக்கான மதிப்புமிக்க கொடைகள் என்று சுட்டிக்காட்டிய கர்தினால் கிரெச் அவர்கள், மேலும் இந்தத் திருஅவையை செவிமடுத்தல், பகுத்தறிதல் மற்றும் ஒன்றிப்பைப் பாதுகாத்தல் ஆகியவற்றின் மூலம் ஆயர்கள் வழிநடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.