ஒன்றிணைந்து நடனமாடக் கற்றுக்கொள்ளும் திருஅவை !
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
தனிப்பட்ட செயல்பாட்டிலிருந்து ஒற்றுமைமிக்க சமூகப் பயணத்தை நோக்கி திருஅவை முன்னேற வேண்டும் என்றும், அதன் வாழ்வையும் பணியையும் வழிநடத்தும் "இறை இசையின் தாளத்தை" கேட்டறிந்து அதற்கேற்ப பயணிக்க அழைக்கப்படுகிறது என்றும் கர்தினால் Blase Joseph Cupich அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
வத்திக்கான் ஊடகத்திற்கு வழங்கிய சிந்தனையில், இவ்வாறு கூறிய கர்தினால் Cupich அவர்கள், குரோவாசியாவின் பாரம்பரிய கோலோ (Kolo) நாட்டுப்புற நடனத்தை, திருஅவையின் ஒருங்கிணைந்த பயணத்திற்கு அழகிய உவமையாக முன்வைத்துள்ளார்.
ஒரே தாளத்தில், ஒருவருக்கொருவர் துணையாக இணைந்து நடனமாடும் இந்த நடனம், சமுதாய ஒற்றுமையை உருவாக்குவது போல, "ஒன்றாக நடந்து செல்லுதல்" என்ற பொருள்படும் ஒருங்கிணைந்த பயணம், தூய ஆவியாரின் வழிநடத்துதலில் இறைமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க அழைக்கிறது என்றும் கர்தினால் Cupich அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
நடனத்தில் இசையைக் கவனமாகக் கேட்பது முதல் படியாக இருப்பதைப் போல, ஒருங்கிணைந்த பயணத்திலும் கேட்டறிதல் அடிப்படையாகும் என்று சுட்டிக்காட்டியுள்ள கர்தினால் Cupich அவர்கள், தூய ஆவியார், திருவிவிலியம், திருஅவையின் மரபு மற்றும் குறிப்பாக சமுதாயத்தின் விளிம்புநிலையில் உள்ளோரின் குரலைக் கேட்பதே உண்மையான ஒருங்கிணைந்த பயணத்தின் அடையாளமாகும் என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.
ஒருங்கிணைந்த பயணம், திருஅவையில் ஒவ்வொருவரின் தனித்துவமான அழைப்பையும் பொறுப்பையும் மதிக்கிறது என்றும், ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவியர், பொதுநிலையினர் என அனைவரும் தங்களுக்குரிய கொடைகளைப் பகிர்ந்து, திருஅவையின் வளர்ச்சிக்குப் பங்களிக்க அழைக்கப்படுகின்றனர் என்றும் கர்தினால் Cupich அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், உரையாடல், படைப்பாற்றல், சூழலுக்கேற்ப தம்மை மாற்றிக்கொள்ளும் மனப்பான்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்கும் அணுகுமுறை ஆகியவை ஒருங்கிணைந்த பயணத்தின் முக்கிய அம்சங்களாக வலியுறுத்தப்படுகின்றன. அதேவேளையில், இன்றைய தேவைகளுக்குப் பதிலளிக்கும் திருஅவை, திருவிவிலியம், புனிதர்கள் மற்றும் திருஅவையின் பாரம்பரிய போதனைகளில் உறுதியாக வேரூன்றியிருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்படுகிறது.
இறுதியாக, ஒருங்கிணைந்த பயணம் என்பது நிர்வாக நடைமுறை அல்ல; மாறாக, நற்செய்தியை மகிழ்ச்சியுடன் வாழும் வாழ்வியல் முறையாகும் என்றும், அனைவரின் கொடைகளையும் மதித்து, தூய ஆவியாரின் வழிநடத்துதலில் ஒன்றிணைந்து பயணிக்கும் திருஅவை, மூவொரு இறைவனின் அன்பான ஒற்றுமையை உலகிற்கு வெளிப்படுத்த அழைக்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டு தனது சிந்தனையை கர்தினால் Cupich அவர்கள் நிறைவு செய்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.