தேடுதல்

சீனாவில் நடைபெற்ற திருவழிபாட்டு கொண்டாட்டத்தின் கோப்புப் படம் சீனாவில் நடைபெற்ற திருவழிபாட்டு கொண்டாட்டத்தின் கோப்புப் படம்  (China)

சிஃபெங் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக ஜோசப் சாங் யான்ஃபெங்

சீனாவின் உள் மங்கோலியா பகுதியில் அமைந்துள்ள சிஃபெங் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக ஜோசப் சாங் யான்ஃபெங் அவர்கள் ஜூலை 22 அன்று திருநிலைப்படுத்தப்பட்டார்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

சீனாவின் உள் மங்கோலியா பகுதியில் உள்ள சிஃபெங் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, ஜோசப் சாங் யான்ஃபெங் அவர்கள் ஜூலை 22, புதன்கிழமையன்று, திருநிலைப்படுத்தப்பட்டார்.

திருப்பீடத்திற்கும் சீன மக்கள் குடியரசுக்கும் இடையிலான தற்காலிக ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் அடிப்படையில் அவரது நியமனத்திற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்த பின்னர், ஜூன் 15 அன்று சிஃபெங் மறைமாவட்டத்தை வழிநடத்த ஆயர் சாங் யான்ஃபெங் அவர்களை திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் நியமித்துள்ளார்.

1984 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் நாள் லியோனிங் மாநிலத்தில் பெய்ஜென் நகரில் பிறந்த ஆயர் சாங் அவர்கள், ஷென்யாங் அருள்பணியாளர் உயர் பயிற்சியகத்தில் பயின்றார். பின்னர் தென் கொரியாவில் உள்ள டேஜியோன் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் விவிலிய இறையியலில் பட்டம் பெற்றார்.

அவர் 2010ஆம் ஆண்டு நவம்பர் 18, அன்று சிஃபெங் மறைமாவட்டத்தின் அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டார். 2010 முதல் 2013 வரை, அவர் மறைமாவட்ட தலைமையகத்தில் பணியாற்றிக்கொண்டே பல பங்குத்தளங்களில் மேய்ப்புப் பணிகளை மேற்கொண்டார். பின்னர் அவர் சிஃபெங் மறைமாவட்டத் தலைமைக் கோவிலில் பங்குத்தந்தையாகவும், அதன்பிறகு லிண்டாங் பங்குத்தந்தையாகவும் பணியாற்றினார்.

2021 ஆம் ஆண்டு அக்டோபர் 15 முதல், ஆயர் சாங் சிஃபெங் அவர்கள் மறைமாவட்டத்தின் நிர்வாகியாகப் பணியாற்றி வந்தார். இந்த ஆயர் திருநிலைப்பாட்டின் மூலம், அவர் இப்போது அந்த மறைமாவட்டத்தின் மேய்ப்புப் பணித் தலைவராக அதாவது ஆயராகப் பொறுப்பேற்றுள்ளார்.

ஆயர்கள் நியமனம் தொடர்பாக திருப்பீடத்திற்கும் சீன மக்கள் குடியரசுக்கும் இடையில் ஏற்பட்ட தற்காலிக ஒப்பந்தத்தை தொடர்ந்து செயல்படுத்துவதில், அவரது நியமனமும் திருநிலைப்பாடும் மற்றொரு முக்கிய படியாகும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

23 ஜூலை 2026, 13:27