கிறிஸ்தவ நம்பிக்கையை துணிவுடன் பகிர அழைப்பு விடுத்த பேராயர் ஹிக்ஸ்!
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
கத்தோலிக்கர்கள் தங்கள் கிறிஸ்தவ நம்பிக்கையை துணிவுடன் பிறருடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று கூறிய பேராயர் ரொனால்ட் ஹிக்ஸ் அவர்கள், எந்தவொரு சவாலான சூழ்நிலையிலும் "இயேசு எப்போதும் நம்மோடு படகில் இருக்கிறார்" என்பதை நினைவில் கொண்டு, ஒருபோதும் நம்பிக்கையை இழக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தினார்.
புனித பேதுரு பெருங்கோவிலில் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களிடமிருந்து பேராயர்களுக்கு வழங்கப்படும் பல்லியம் எனும் ஆட்டு உரோமத்தால் செய்யப்பட்ட தோல் துகிலைப் பெற்றுக்கொண்ட பேராயர் ரொனால்ட் ஹிக்ஸ் அவர்கள் வதிக்கான செய்திக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் இவ்வாறு தெரிவித்தார்.
தனது புதிய பொறுப்பைக் குறித்துப் பகிர்ந்துகொண்ட நியூயார்க் பேராயர் ரொனால்ட் ஹிக்ஸ் அவர்கள், ஒற்றுமை, நற்செய்தி அறிவிப்பு மற்றும் சேவை ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
பல்லியம் பெற்றதை திருத்தந்தையுடனான ஆழமான ஒன்றிப்பின் அடையாளமாக விவரித்த பேராயர் ஹிக்ஸ் அவர்கள், மேலும், கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியிலும் ஒற்றுமையைக் கடைப்பிடித்து, புனிதர்களான பேதுரு மற்றும் பவுலைப் போல் வாழ வேண்டும் என்ற திருத்தந்தையின் அழைப்பையும் எடுத்துக்காட்டினார்.
அமெரிக்காவில் பிறந்த முதல் திருத்தந்தையிடமிருந்து இதனைப் பெற்றுக்கொண்டதில் தமக்குள்ள பெருமிதத்தை வெளிப்படுத்திய பேராயர் ஹிக்ஸ் அவர்கள், இருவருக்குமே சிகாகோ நகருடன் இருக்கும் பூர்வீகத் தொடர்பையும் சுட்டிக்காட்டினார்.
நியூயார்க் நகரைப் பற்றிப் பேசிய பேராயர் ஹிக்ஸ் அவர்கள், நியூயார்க் மக்கள் குறித்துப் பொதுவாகச் சொல்லப்படும் எதிர்மறையான கருத்துக்களை உடைக்கும் விதமாக, அவர்கள் தமக்கு அளித்த அன்பான வரவேற்பு தமக்கு வியப்பை அளித்ததாகக் கூறினார்.
மேலும் இந்நகரத்தை அவர் "உலகத்தின் ஒரு சிறிய வடிவம்" என்று வர்ணித்ததோடு, திருஅவை மற்றும் இயேசு கிறிஸ்துவின் மீதான ஆழமான அன்பால் மக்கள் இங்கு ஒன்றிணைந்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
அங்கு அவர் காணும் இளைஞர்கள் மீண்டும் பெருமளவில் கிறிஸ்தவ நம்பிக்கைக்குத் திரும்புவதை மிகச் சிறந்த வாய்ப்புகளில் ஒன்றாகக் குறிப்பிட்ட பேராயர் ஹிக்ஸ் அவர்கள், "உருவாக்கப்பயிற்சி, மறைக்கல்வி மற்றும் நற்செய்தி அறிவிப்பு ஆகியவற்றின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
மேலும் "எல்லா வயதினரும் இறைவனை அறிந்து, அன்பு செய்து, அவருக்குச் சேவை செய்ய நாம் உதவ வேண்டும்" என்றும் "அதே வேளையில், நாம் எப்போதும் மற்றவர்களுக்குச் சேவை செய்யும் ஒரு மறைப்பணித் திருஅவையாக இருக்க வேண்டும்" என்றும் தெரிவித்தார்.
இறுதியாக தனது இறை அழைப்பைப் பற்றிப் பேசிய பேராயர் ஹிக்ஸ் அவர்கள், தாம் ஆறாம் வகுப்பு படிக்கும் போதே அருள்பணித்துவ வாழ்வைப் பற்றிச் சிந்திக்குமாறு தமக்கு ஊக்கமளித்த ஒரு அருள்பணியாளரை நன்றியோடு நினைவு கூர்ந்ததுடன் நற்கருணை, நற்கருணை ஆராதனை மற்றும் அன்றாட இறைவேண்டல் ஆகியவையே தனது அருள் வாழ்வின் அடித்தளம் என்றும் குறிப்பிட்டு தனது நேர்காணலை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.