தேடுதல்

திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்ட் காலகர்   (ANSA)

போரால் பாதிக்கப்பட்ட கீவ் நகரில் அமைதிக்காக இறைவேண்டல் செய்த பேராயர் காலகர்!

உக்ரைன் பயணத்தின் மூன்றாம் நாளில், பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்கள் கீவ் நகரில் ஏவுகணைத் தாக்குதலால் சேதமடைந்த ஆலயங்கள் மற்றும் பகுதிகளைப் பார்வையிட்டு, அமைதிக்காக இறைவேண்டல் செய்தார்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

உக்ரைனுக்கான தனது பயணத்தின் மூன்றாம் நாளில், பன்னாட்டு உறவுகளுக்கான திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்கள், கீவ் நகரில் குண்டுவீச்சால் சேதமடைந்த இடங்களைப் பார்வையிட்டார். அங்கு அவர் அமைதிக்காக இறைவேண்டல் செய்ததுடன், திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் ஆன்மீக உடனிருப்பையும் உக்ரைனிய மக்களுக்குத் தெரிவித்தார்.

தனது அன்றைய  பயணத்தின் முதல் நிகழ்வாக 2024 ஆம் ஆண்டு டிசம்பரில் இரஷ்ய ஏவுகணைத் தாக்குதலால் கடுமையாக சேதமடைந்து தற்போது சீரமைக்கப்பட்டு வரும் புனித நிக்கோலஸ் ஆலயத்திற்குச் சென்று பங்கு சமூகத்தினருடன் இணைந்து இறைவேண்டல் செய்த பேராயர் காலகர் அவர்கள், கிறிஸ்தவ நம்பிக்கையில் அவர்கள் கொண்டுள்ள ஆழ்ந்த பற்றைப் பாராட்டினார்.

மேலும் திருத்தந்தை அவர்கள் உக்ரைனுக்காக ஒவ்வொரு நாளும் இறைவேண்டல் செய்து வருவதாகவும், ஒரு நாள் கீவ் நகருக்கு வருகை தர விரும்புவதாகவும் அவர் கூறினார்.

அண்மையில் நடைபெற்ற திடீர் வான்வழித் தாக்குதலில் அழிவடைந்த தங்களது அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து சேதமின்றி மீட்கப்பட்ட திருக்குடும்பத்தின் திருவுருவப் படத்தை, "நம்பிக்கையின் அடையாளம்" என்று குறிப்பிட்டு, பங்குமக்கள் பேராயர் காலகருக்கு நினைவுப் பரிசாக வழங்கினர்.

பின்னர் பேராயர் அவர்கள் கடந்த மே மாதம் இடம்பெற்ற இரஷ்ய ஏவுகணைத் தாக்குதலில் மூன்று குழந்தைகள் உள்பட 24 பேர் கொல்லப்பட்ட பிராட்ஸ்ட்வா தாராசிவ்ட்சிவ் தெருவைப் பார்வையிட்டார். அங்கு அவர் உள்ளூர் அதிகாரிகள், அவசரகால மீட்புக் குழுவினர் மற்றும் உயிர் பிழைத்தவர்களுக்கு உதவும் ஐ.நா அகதிகள் முகமையின் (UNHCR) பிரதிநிதிகளை சந்தித்தார்.

மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நினைவிடத்தில், உயிரிழந்தவர்களுக்காகவும் போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் குணமடையவும் இறைவேண்டல் செய்தார்.

ஏவுகணைத் தாக்குதல்களால் சேதமடைந்த புனித தாமஸ் அக்வினாஸ் டொமினிகன் இறையியல் நிறுவனத்தையும் பேராயர் காலகர் அவர்கள் பார்வையிட்டார், அங்கு சமூகத்தை மீண்டும் கட்டமைப்பவர்களை ஊக்குவித்ததுடன், திருஅவையின் உடனிருப்பையும் அவர் உறுதிப்படுத்தினார்.

இரஷ்யத் தாக்குதலில் சேதமடைந்த, யுனெஸ்கோ பட்டியலில் இடம்பெற்றுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மரபுவழி துறவிகள் மடமான கீவ் பெச்செர்ஸ்க் லாவ்ராவிற்கு அவர் மேற்கொண்ட பயணத்துடன் அந்த நாள் முடிவடைந்தது, அங்கு அவர் உக்ரைனில் நிரந்தர அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காக இறைவேண்டல் செய்தார்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

20 ஜூலை 2026, 09:08