உக்ரைன் மக்களின் உறுதியும் நம்பிக்கையும் உலகிற்கு எடுத்துக்காட்டு: பேராயர் காலகர்
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
உக்ரைனுக்கான ஆறு நாள் திருப்பயணத்தை நிறைவு செய்த பன்னாட்டு உறவுகளுக்கான திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்கள், பல ஆண்டுகளாகப் போரும் துயரங்களும் நீடித்துவரும் நிலையிலும், உக்ரைன் மக்கள் வெளிப்படுத்தி வரும் உறுதி, இறைநம்பிக்கை மற்றும் விடாமுயற்சி உலகிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று பாராட்டியுள்ளார்.
திருத்தந்தை அவர்களின் பிரதிநிதியாக உக்ரைன் சென்ற பேராயர் காலகர் அவர்கள், பெர்திசிவ் (Berdychiv) மரியன்னை திருத்தலத்தில் நடைபெற்ற இலத்தீன் கத்தோலிக்கத் திருஅவையின் மறுசீரமைப்பின் 35ஆம் ஆண்டு விழாவிலும், திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்களின் உக்ரைன் திருப்பயணத்தின் 25ஆம் ஆண்டு நினைவு விழாவிலும் பங்கேற்றார்.
போர் தொடர்ந்து நடைபெற்று வந்தபோதிலும், ஆயிரக்கணக்கான திருப்பயணிகள் மரியன்னையிடம் ஆழ்ந்த பக்தியுடன் கூடி, உக்ரைனில் அமைதி நிலவ வேண்டி செபித்தனர்.
தமது பயணத்தின் போது, உக்ரைன் குடியரசுத் தலைவர் வொலொடிமிர் செலென்ஸ்கி, அரசுத் தலைவர்கள், திருஅவைத் தலைவர்கள் மற்றும் போரால் பாதிக்கப்பட்ட மக்களை பேராயர் காலகர் அவர்கள் சந்தித்தார். மேலும், குண்டுவீச்சால் சேதமடைந்த குடியிருப்புப் பகுதிகளையும், கீவ் நகரிலுள்ள மைதான் நினைவிடத்தையும் பார்வையிட்டு, தங்கள் அன்புக்குரியவர்களையும் வீடுகளையும் இழந்த குடும்பங்களின் துயரத்தை நேரில் கண்டறிந்தார்.
இந்தப் பயணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பேராயர் காலகர் அவர்கள், இடைவிடாத தாக்குதல்களுக்கு மத்தியிலும் உக்ரைன் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையைத் தொடர்வதோடு, குடும்பங்களைப் பாதுகாத்து, தங்கள் சுதந்திரத்தைக் காக்க உறுதியுடன் போராடி வருவதாகக் கூறினார்.
மேலும், தாங்கள் தங்கள் நாட்டை மட்டுமல்ல, ஐரோப்பா முழுவதையும் பாதுகாத்து வருகிறோம் என்ற நம்பிக்கை பல உக்ரைன் மக்களிடையே நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், போர்க் கைதிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாகத் திரும்புவதற்காக கர்தினால் மத்தேயோ சூப்பி மேற்கொண்டு வரும் முயற்சிகள் உட்பட, மனிதாபிமான உதவிகளுக்கும் அமைதிக்கான உரையாடலுக்கும் திருப்பீடம் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக பேராயர் காலகர் அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
திருத்தந்தை அவர்களின் உக்ரைன் பயணம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பேராயர் காலகர் அவர்கள், உக்ரைனுக்கு வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பை திருத்தந்தை மிகுந்த முக்கியத்துவத்துடன் எடுத்துக்கொண்டிருப்பதாகவும், அந்தப் பயணம் அமைதி ஏற்படுவதற்கு உண்மையான பங்களிப்பாக அமையும் வகையில், தகுந்த காலத்தையும் சூழலையும் கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இறுதியாக "எல்லாவற்றையும் இழந்துவிட்ட போதிலும் நம்பிக்கையை இழக்காத குடும்பங்களின் முகங்களும், போரால் சிதைக்கப்பட்ட வீடுகளும் என் நினைவில் என்றும் நிலைத்திருக்கும்" என்று கூறி தனது பயணத்தை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.