பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் பேராயர் பால் ரிச்சர்ட் காலகர்   (ANSA)

திருப்பீடம்–நைஜீரியா தூதரக உறவுகளின் 50 ஆண்டுகள்: பேராயர் பால் ரிச்சர்ட் காலகரின் நைஜீரியா பயணம் நிறைவு

திருப்பீடம் மற்றும் நைஜீரியா இடையேயான தூதரக உறவுகளின் 50-வது ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்க நைஜீரியா சென்றிருந்த பன்னாட்டு உறவுகளுக்கான திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்கள், அந்நாட்டு அதிபர் போலா அகமது தினுபுவைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் மற்றும் மதங்களுக்கு இடையேயான நல்லிணக்கம் குறித்து கலந்துரையாடினார். பயணத்தின் நிறைவாக, அபுஜாவில் நடைபெற்ற சிறப்பு திருப்பலிக்குத் தலைமையேற்று, 50 ஆண்டுகால திருப்பீடம்–நைஜீரியா நட்புறவை நினைவுகூர்ந்தார்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

பன்னாட்டு உறவுகளுக்கான திருப்பீடத் துறையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்கள் திருப்பீடம் மற்றும் நைஜீரிய கூட்டாட்சிக் குடியரசு ஆகியவற்றுக்கு இடையேயான தூதரக உறவுகளின் 50-வது ஆண்டு நிறைவு விழாக்களில் பங்கேற்பதற்காக ஜூலை 2 அன்று நைஜீரியா வந்தடைந்தார்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில், குறிப்பிடத்தக்க உள்நாட்டுப் பாதுகாப்பு சவால்கள் நீடித்து வரும் நிலையிலும், 3 கோடிக்கும் அதிகமான கத்தோலிக்கர்களும், 10,000-க்கும் மேற்பட்ட கத்தோலிக்க அருள்பணியாளர்களும் அங்கு வாழ்கின்றனர்.

அந்நாட்டு அரசின் தலைமைச் செயலகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) கணக்கான @TerzaLoggia தெரிவித்துள்ளபடி, இப்பயணத்தின் போது பேராயர் காலகர், அதிபர் மாளிகையில் நைஜீரிய அதிபர் போலா அகமது தினுபு அவர்களை  சந்தித்துப் பேசியுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, வெளியுறவுத்துறை அமைச்சர் பியான்கா ஒடுமேக்வு ஓஜுக்வு மற்றும் எகோவாஸ் (ECOWAS) ஆணையத்தின் தலைவர் ஒமர் அலீவ் துரே ஆகியோரும் உடனிருந்தனர்.

இச்சந்திப்புக்குப் பிறகு உள்ளூர் ஊடகங்களிடம் பேசிய அதிபர் தினுபு அவர்கள், மதங்களுக்கு இடையேயான உரையாடலுக்கு முன்னுரிமை அளித்து, நாட்டின் பல்வேறு மத சமூகங்களிடையே அமைதி, நல்லிணக்கம் மற்றும் சகிப்புத்தன்மையை மேம்படுத்த தனது அரசு உறுதிபூண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

திருப்பீடம்–நைஜீரியா இடையேயான 50 ஆண்டுகால தூதரக உறவுகளை நினைவுகூரும் வகையில், அபுஜாவின் கார்கியில் அமைந்துள்ள நைஜீரியாவின் அரசியான அன்னை மரியா பதில்நிலைத் தலைமைக் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருப்பலிக்குத் தலைமையேற்ற பேராயர் மைக்கேல் காலகர் அவர்கள், தனது நைஜீரியா பயணத்தை ஜூலை 7 அன்று நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

09 ஜூலை 2026, 12:49