உக்ரைன் பயணத்தை நிறைவு செய்தார் திருத்தந்தையின் சிறப்புத் தூதர் பேராயர் பால் ரிச்சர்ட் காலகர்!
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் சிறப்புத் தூதரான பேராயர் பால் ரிச்சர்ட் கலகர், கீவில் நடைபெற்ற உயர்மட்டச் சந்திப்புகளிலும், நியாயமான மற்றும் நிலையான அமைதிக்கான புதுப்பிக்கப்பட்ட அழைப்புகளுடனும் தனது ஐந்து நாள் உக்ரைன் பயணத்தை நிறைவு செய்துள்ளார்.
தனது பயணத்தின் இறுதி நாளில் பேராயர் காலகர் அவர்கள், உக்ரைன் மக்களுடனான திருஅவையின் உடனிருப்பையும், அமைதி முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதில் அதன் அர்ப்பணிப்பையும் மீண்டும் வலியுறுத்தி, அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் தற்காலிக வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா ஆகியோரைச் சந்தித்தார்.
மேலும், 2013–2014ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற "மாண்பிற்கான புரட்சி" (Maidan Revolution)யின்போது உயிரிழந்தவர்களுக்கும், தற்போதைய போரில் உயிர்நீத்தவர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில், மைதான் நினைவிடத்திற்குச் சென்று ரோஜா மலர்க்கொத்தை வைத்து மரியாதை செலுத்தினார்.
முன்னதாக, பெர்டிச்சிவ் நகரில், உக்ரைனில் இலத்தீன் வழிபாட்டு முறை கத்தோலிக்கத் திருஅவை மீட்டெடுக்கப்பட்டதன் 35-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் திருப்பலிக்கு தலைமை தாங்கிய பேராயர் காலகர் அவர்கள், போரின் இன்னல்களுக்கு இடையிலும் பற்றுறுதியுடனும் நம்பிக்கையுடனும் உறுதியாக இருக்குமாறு ஆயிரக்கணக்கான திருப்பயணிகளை ஊக்குவித்ததோடு, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் இறைவேண்டலையும் ஆன்மீக உடனிருப்பையும் அவர்களுக்கு தெரிவித்தார்.
இந்த பயணத்தின் போது பேராயர் காலகர் ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவியர் மற்றும் அனைத்து உக்ரைன் திருஅவை மற்றும் மத அமைப்புகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து, போரின் மனிதாபிமான தாக்கம், தொடர்ச்சியான இறைவேண்டல் மற்றும் தூதரக முயற்சிகளின் தேவை ஆகியவை குறித்து அவர்களுடன் உரையாடினார்.
போரின்போது திருநிலைப்படுத்தப்பட்ட அருள்பணியாளர்கள் ஆற்றிவரும் முக்கியமான மேய்ப்புப் பணியையும் மனிதாபிமானச் சேவையையும் அங்கீகரிக்கும் வகையில், அவர்களை கட்டாய இராணுவச் சேவையிலிருந்து விலக்குவதற்கான உக்ரைன் அரசின் அண்மைய முடிவையும் அவர்கள் வரவேற்றனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.