ஐரோப்பிய ஒலிபரப்பு ஒன்றியத்தின் 96ஆவது பொதுப் பேரவையில் பங்கேற்கும் வத்திக்கான் வானொலி
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
ஜூன் 24 முதல் 26 வரை செக் குடியரசின் தலைநகரான பிராக் நகரில் உள்ள கியூபெக்ஸ் மையத்தில் இடம்பெறவுள்ள ஐரோப்பிய ஒலிபரப்பு ஒன்றியத்தின் (EBU) 96-வது பொது அவைக் கூட்டத்தில் வத்திக்கான் வானொலி பங்கேற்க உள்ளது.
இந்த நிகழ்வை செக் குடியரசின் பொதுத் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிறுவனங்களான செஸ்கா டெலிவிஸ் மற்றும் செஸ்கி ரோஸ்லாஸ் ஆகியவை இணைந்து நடத்துகின்றன.
ஐரோப்பா முழுவதிலும் உள்ள பொதுச் சேவை ஊடக நிறுவனங்களின் தலைவர்களை ஒன்றிணைக்கும் இந்தப் பொது அவைக் கூட்டத்தில், செயற்கை நுண்ணறிவின் தாக்கம், பொதுச் சேவையில் ஈடுபடும் இதழியலின் எதிர்காலம் மற்றும் எண்ணிம கண்டுபிடிப்புகளுக்கும் தரமான செய்தி அறிக்கையிடலைப் பாதுகாப்பதற்கும் இடையிலான சமநிலையைப் பேணுதல் ஆகிய ஊடகத் துறை எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் குறித்து ஊடகத் தலைவர்கள் விவாதிக்க உள்ளனர்.
950ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஐரோப்பிய ஒலிபரப்பு ஒன்றியம் (EBU), உலகின் மிகப்பெரிய பொதுச் சேவை ஊடக அமைப்புகளில் ஒன்றாகும். 56 நாடுகளைச் சேர்ந்த 113 வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களை உள்ளடக்கிய இந்தக் கூட்டமைப்பு, பொது ஊடகங்களுக்கிடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்தி வருகிறது.
இவ்வொன்றியத்தின் உயர்மட்ட நிர்வாக அமைப்பாக விளங்கும் பொதுப் பேரவை, அமைப்பின் எதிர்கால நோக்கங்கள் மற்றும் முன்னுரிமைத் திட்டங்களை வகுப்பதுடன், அதன் வரவு-செலவுத் திட்டங்களை ஆய்வு செய்து அங்கீகரிக்கும் முக்கிய பொறுப்பையும் வகிக்கிறது.
இந்தப் பொது அவையில் தகவல்தொடர்புக்கான திருப்பீடத்துறையின் துணை இயக்குநரும், ஐரோப்பிய ஒலிபரப்பு ஒன்றியத்தின் வானொலி மற்றும் ஒலிவடிவ செய்திக் குழுவின் தலைவருமான அலெஸாண்ட்ரோ ஜிசோட்டி அவர்கள் வத்திக்கான் வானொலியின் பிரதிநிதியாகக் கலந்து கொள்வார். ஐரோப்பிய ஒலிபரப்பு ஒன்றியத்தை நிறுவிய பெருமையும் வத்திக்கான் வானொலிக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கூட்டத்தில் பொதுச் சேவை ஊடகக் குழுக்களின் பகுதிசார் கூட்டங்களும் இடம்பெறும். வத்திக்கான் வானொலி மத்திய தரைக்கடல் குழு மற்றும் சிறிய நாடுகளின் குழு ஆகிய இரண்டிலும் தீவிரமாகத் தனது பங்களிப்பை வழங்கி வருகிறது.
"தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் உலகளாவிய சவால்களுக்கு ஐரோப்பிய ஊடகங்கள் எவ்வாறு பதிலளிக்கலாம்" என்றும் "அதே வேளையில் பொதுமக்களுக்கு நம்பகமான மற்றும் உயர்தர தகவல்களைத் தொடர்ந்து எப்படி வழங்குவது " என்பது குறித்த விவாதங்களும் முக்கிய இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.