வத்திக்கான் வானொலியின் ஆர்மேனியப் பிரிவு 60-வது ஆண்டு நிறைவு கொண்டாட்டம்!
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
வத்திக்கான் வானொலி தொடங்கப்பட்டதன் 95-வது ஆண்டைக் கொண்டாடும் வேளையில், அதன் ஆர்மேனிய மொழி பேசும் பிரிவின் 60-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, மே 28, வியாழனன்று, வத்திக்கானில் ஒரு சிறப்பு ஆர்மேனிய இசை கச்சேரி நடைபெற்றது.
1966 ஆம் ஆண்டு மே 29 அன்று ஆர்மேனிய கர்தினால் பதினைந்தாம் கிரிகோரியோ பியத்ரோ அகஜானியன் அவர்களின் முயற்சியால் நிறுவப்பட்ட இந்த ஆர்மேனியப் பிரிவு, திருப்பீடத்திற்கும் உலகம் முழுவதும் உள்ள ஆர்மேனிய மொழி பேசும் கத்தோலிக்கர்களுக்கும் இடையே ஒரு முக்கிய இணைப்பாகச் செயல்பட்டு வருகிறது. இன்று வத்திக்கான் செய்திகளில் பயன்படுத்தும் 57 மொழிகளில் ஆர்மேனிய மொழியும் ஒன்றாகும்.
இந்த ஆண்டு விழாக் கொண்டாட்டத்தில் உரையாற்றிய தகவல் தொடர்புத்துறைக்கான திருப்பீடத்துறையின் தலையங்க இயக்குநர் (Editorial Director) திரு. ஆந்திரேயா தொர்னெல்லி அவர்கள், ஆர்மேனிய மக்களின் நீடித்த கிறிஸ்தவ நம்பிக்கையைப் பாராட்டியதுடன், அமைதி மற்றும் உரையாடலுக்கான பாலமாகத் திகழும் இப்பிரிவின் பங்களிப்பையும் எடுத்துரைத்தார்.
மேலும் தவறான தகவல்கள் பரவும் இந்த காலத்தில், ஆர்மேனியப் பிரிவின் பணி விலைமதிப்பற்றது என்று விவரித்த ஆர்மேனிய கத்தோலிக்க திருஅவையின் முதுபெரும் தந்தை 21வது ரபேல் பெட்ரோஸ் மினாசியன் அவர்கள், "வத்திக்கான் வானொலி என்பது அமைதி, சமூக நீதி, சகோதரத்துவம் மற்றும் நற்செய்தி விழுமியங்களை ஊக்குவிக்கும் நம்பகமான மற்றும் அதிகாரப்பூர்வமான ஒரு குரல்" என்றும் குறிப்பிட்டார்.
"ஒன்றிப்பு மற்றும் நற்செய்தி அறிவிப்பின் சான்றாக விளங்கும் ஆர்மேனியப் பிரிவு, நம்பிக்கையாளர்கள் திருத்தந்தையோடு தொடர்ந்து இணைந்திருப்பதற்கான பாலமாகச் செயல்படுகிறது" என்று கர்தினால் கிளாடியோ குஜெரோட்டி அவர்கள் கூறினார்.
இறுதியாக, கடந்த காலங்களிலும் மற்றும் தற்போதும் இந்த சேவை தொடர்ந்து இயங்க உதவிய அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்த வத்திக்கான் செய்திகளின் ஆர்மேனியப் பிரிவின் தலைவர் ராபர்ட் அட்டாரியன் அவர்கள் மேலும், "நாங்கள் அச்சமின்றி தொடர்ந்து உண்மையை அறிவிப்போம்" என்று அந்த வானொலி சேவையின் இலட்சியத்தை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்