வத்திக்கான் வத்திக்கான்   (@Vatican Media)

மனித மாண்பை மையமாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவை முன்னெடுக்க புதிய திருப்பீட ஆணையம்!

செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஆய்வு, சிந்தனை மற்றும் பொறுப்பான பயன்பாட்டை ஒருங்கிணைப்பதற்காக திருப்பீடம் புதிய செயற்கை நுண்ணறிவுக்கான இடைத் திருப்பீட ஆணையத்தை (ICAI) தொடங்கியுள்ளது.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

செயற்கை நுண்ணறிவுக்கான பல்வேறு திருப்பீடத் துறைகள் இணைந்து செயல்படும் ஒரு ஆணையத்தைத் (ICAI) திருப்பீடம் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. இதன் முதல் கூட்டம் பலாசோ சான் கலிஸ்டோவில் இடம்பெற்றது. செயற்கை நுண்ணறிவு குறித்த ஆய்வு, சிந்தனை மற்றும் பொறுப்பான பயன்பாடு ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்த, பல்வேறு திருப்பீடத் துறைகள் மற்றும் பாப்பிறை கல்விக்கூடங்களின் பிரதிநிதிகளை இந்த ஆணையம் ஒன்றிணைக்கிறது.

மனித மாண்பைப் பாதுகாக்கும், பொதுநலனை முன்னெடுக்கும் மற்றும் திருஅவையின் பணியை ஆதரிக்கும் ஒரு செயற்கை நுண்ணறிவுப் பார்வையை ஊக்குவிப்பதை இந்த ஆணையம் நோக்கமாகக் கொண்டுள்ளது. அதன் முதல் ஒரு ஆண்டிற்கு, ஒருங்கிணைந்த மனித வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான திருப்பீடத் துறை அதன் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும்.

கூட்டத்தைத் தொடக்கிவைத்து உரையாற்றிய கர்தினால் மைக்கேல் செர்னி அவர்கள், செயற்கை நுண்ணறிவின் விரைவான வளர்ச்சி, மனித மாண்பின் மீது அது ஏற்படுத்தும் தாக்கம், திருஅவைக்கும் தொழில்நுட்பத் துறைக்கும் இடையே விரிவடைந்து வரும் உரையாடல் மற்றும் 'மகத்தான மனிதநேயம்' (Magnifica Humanitas) திருத்தூது மடல் ஏற்படுத்தியுள்ள பரந்த தாக்கம் ஆகிய நான்கு முக்கிய அம்சங்களை வலியுறுத்தினார்.

செயற்கை நுண்ணறிவு பெரும் வாய்ப்புகளை வழங்கினாலும், அதனுடன் தொடர்புடைய சமூக, கலாச்சார, சுற்றுச்சூழல் மற்றும் அறநெறிசார் சவால்களைப் பொறுப்புணர்வுடனும் விவேகத்துடனும் எதிர்கொள்வது அவசியம் எனப் பங்கேற்பாளர்கள் வலியுறுத்தினர்.

அறநெறியுடன் கூடிய செயற்கை நுண்ணறிவிற்கான உரோமின் அழைப்பு (Rome Call for AI Ethics) மற்றும் செயற்கை நுண்ணறிவு–அமைதி குறித்த 2024ஆம் ஆண்டு உலக அமைதி தினத்திற்காக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய செய்தி ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் ஆணையம் மீண்டும் வலியுறுத்தியது.

எதிர்காலத்தைப் பொறுத்தவரை, திருப்பீடத்திற்குள் செயற்கை நுண்ணறிவு தொடர்பான முன்முயற்சிகளை ஒருங்கிணைப்பதிலும், கல்வி, அறிவியல், வணிகம் மற்றும்  திருஅவை சமூகங்களுடன் உரையாடலை வளர்ப்பதிலும், செயற்கை நுண்ணறிவுக்கான பயன்பாட்டு வழிகாட்டுதல்களை உருவாக்குவதிலும், தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்காக பிரத்யேக இணையதளத்தை உருவாக்குவதிலும் இந்த ஆணையம் கவனம் செலுத்தும். இந்த ஆணையம் ஜூலை மாத மத்தியில் மீண்டும் கூட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

29 ஜூன் 2026, 12:41