தேடுதல்

புனித பேதுரு பெருங்கோவில் வளாகம் புனித பேதுரு பெருங்கோவில் வளாகம்   (ANSA)

சிறுவர் பாதுகாப்புக்கான பாப்பிறை ஆணையத்திற்கு புதிய சட்டம் வெளியீடு

சிறார்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடியோரின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், சிறுவர் பாதுகாப்புக்கான பாப்பிறை ஆணையத்தின் புதிய சட்டத்தை வத்திக்கான் அங்கீகரித்துள்ளது.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

சிறுவர் பாதுகாப்புக்கான பாப்பிறை ஆணையத்தின் புதிய சட்டம், மூன்று ஆண்டுகள் சோதனை அடிப்படையில் நடைமுறையில் இருக்கும் வகையில் அங்கீகரிக்கப்பட்டு, 2026 ஜூன் 13 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்களால் கையொப்பமிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், திருத்தியமைக்கப்பட்ட இச்சட்டத்திற்கு திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கடந்த மே 20 அன்று ஒப்புதல் வழங்கியதோடு, அது உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதியவிதிகளின்படி, "இந்த ஆணையம் நம்பிக்கைக் கோட்பாட்டிற்கான திருப்பீடத்துறையின் கீழ் செயல்படும்" என்றும் "அது தனது பொறுப்புகளைத் தொடர்ந்து பராமரிப்பதோடு, அதன் தலைவரின் மூலம் நேரடியாக திருத்தந்தைக்கு அறிக்கை அளிக்கும்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறுவர் பாதுகாப்புக்கான பாப்பிறை ஆணையத்தின் தலைவர் பேராயர் Thibault Verny அவர்கள், "மிகவும் பாதிக்கப்படக்கூடியோரைக் காக்கவும் அவர்களைப் பராமரிக்கவும் திருஅவை கொண்டுள்ள கூட்டுப்பொறுப்பை ஆழப்படுத்துவதில் இந்த புதிய சட்டம் ஒரு முக்கிய முன்னேற்றமாகும்" என்று கூறினார்.

மேலும், "பாதிக்கப்பட்டோர் மற்றும் உயிர்பிழைத்தோரின் அனுபவங்களையும், பாதுகாப்புத் துறை நிபுணர்களின் கருத்துகளையும், உள்ளூர் திருஅவைகளின் அனுபவங்களையும் கவனமாகக் கேட்டு உருவாக்கப்பட்டதே இந்தச் சட்டம் என்று கூறிய பேராயர் வெர்னி அவர்கள், இச்சட்டம் சிறுவர் பாதுகாப்பு திருஅவையின் முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்றாகத் தொடர்கிறது என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது" என்று தெரிவித்தார்.

திருத்தந்தைக்கு பாதுகாப்பு கொள்கைகள் குறித்த ஆலோசனைகளை வழங்குவதும், ஆயர்கள், ஆயர் பேரவைகள், கிழக்குத் திருஅவைகள், மத நிறுவனங்கள் மற்றும் அப்போஸ்தலிக்க வாழ்வுச் சங்கங்கள் ஆகியவை பாதுகாப்பு வழிகாட்டுதல்களை உருவாக்கவும் புதுப்பிக்கவும் உதவுவதுமே அதன் முதன்மைப் பணியாகும்.

உலகெங்கிலும் உள்ள மறைமாவட்டங்களில் வரம்புமீறல் குறித்து புகாரளிக்க நிலையான மற்றும் எளிதில் அணுகக்கூடிய அமைப்புகளை உருவாக்குவதற்கு இந்தச் சட்டம் முக்கியத்துவம் அளிக்கிறது. மேலும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களுக்கு வரவேற்பு, உடனிருப்பு, ஆன்மீக பராமரிப்பு மற்றும் உளவியல் ஆதரவை வழங்கும் மேய்ப்புப்பணி கட்டமைப்புகளை இது ஊக்குவிக்கிறது.

திருஅவையின் பாதுகாப்புக் கொள்கைகள் மற்றும் முயற்சிகள் குறித்த ஆண்டறிக்கையைத் தயாரித்து வெளியிடுவது இந்த ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஒரு குறிப்பிடத்தக்க பொறுப்பாகும்.

இந்த அறிக்கை உலகளாவிய மற்றும் உள்ளூர் திருஅவையில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு முயற்சிகளை மதிப்பீடு செய்யும் அதேவேளை, சவால்களை அடையாளம் காணும் மற்றும் சிறுவர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய நபர்களின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான மேம்பட்ட வழிமுறைகளை முன்மொழியும்.

சிறந்த நடைமுறைகளை ஊக்குவிப்பது, உலகளவில் பாதுகாப்பு தரநிலைகளை ஆதரிப்பது, திருஅவை நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை ஊக்குவிப்பது மற்றும் பயனுள்ள தடுப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதில் உள்ளூர் திருஅவைகளுக்கு உதவுவது ஆகிய பணிகளும் இந்த ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்த ஆணையத்தில் அதிகபட்சமாக 23 உறுப்பினர்கள் இடம்பெறுவர். ஐந்து ஆண்டு காலத்திற்கு திருத்தந்தையால் நியமிக்கப்படும் இவர்கள், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அருள்பணியாளர்கள், துறவறத்தினர் மற்றும் பாதுகாப்புப் பணிகளில் அனுபவம் பெற்ற பொதுநிலையினராவர். பொதுக் கூட்டங்கள், பகுதிசார் மற்றும் ஆய்வுக் குழுக்கள், நிர்வாகக் குழு மற்றும் ஆலோசகர்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் ஆணையம் தனது பணிகளை முன்னெடுக்கும்.

இந்தச் சட்டம் வத்திக்கான் திருப்பீடத்துறைகள் மற்றும் உள்ளூர் திருஅவைகளுக்கு இடையே வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், ரகசியத்தன்மை மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலியுறுத்துகிறது. மூன்று ஆண்டுகளுக்கு சோதனை அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த புதிய விதிகள், திருஅவையின் பாதுகாப்புக் கலாச்சாரத்தை வலுப்படுத்துவதையும், உலகம் முழுவதும் உள்ள சிறுவர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய பெரியவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

15 ஜூன் 2026, 11:56