சாண்டா மரியா டி கலேரியாவில் அமைக்கப்படவுள்ள வேளாண்-சூரிய ஆற்றல் திட்டத்திற்கான திருப்பீட நிலம். சாண்டா மரியா டி கலேரியாவில் அமைக்கப்படவுள்ள வேளாண்-சூரிய ஆற்றல் திட்டத்திற்கான திருப்பீட நிலம்.  (©Santa Maria)

புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் புதிய மைல்கல்: வேளாண்-சூரிய ஆற்றல் திட்டத்தை முன்னெடுக்கும் வத்திக்கான்

வத்திக்கானின் சாண்டா மரியா டி காலேரியாவில் வேளாண்மை மற்றும் சூரிய ஆற்றலை இணைக்கும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் வத்திக்கான் வானொலியின் மின் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் ஆற்றல் தன்னிறைவை மேம்படுத்தும் முயற்சியாக அமைந்துள்ளது.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

உரோம் நகரின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள சாண்டா மரியா டி காலேரியா வளாகத்தில் வேளாண்மை மற்றும் சூரிய ஆற்றலை ஒருங்கிணைக்கும் ஆற்றல் திட்டத்தை உருவாக்குவதற்காக, திருப்பீடம் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. நிலையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த ஆற்றல் உற்பத்தியை ஊக்குவிக்கும் முக்கியமான முயற்சியாக இந்தத் திட்டம் கருதப்படுகிறது.

ஜூன் 10, புதன்கிழமையன்று கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின்படி, வத்திக்கான் நகர ஆளுநரகம், திருப்பீடத்தின் சொத்துக்களை நிர்வகிக்கும் துறை (APSA), சகோதரன் சூரியன் என்ற அறக்கட்டளை(Fondazione Fratello Sole) மற்றும் இத்தாலியின் முன்னணி ஆற்றல் மற்றும் நீர் பயன்பாட்டு நிறுவனங்களில் ஒன்றான ஏசியா (ACEA) ஆகியவை ஒன்றிணைந்து இந்தத் திட்டத்தின் திட்டமிடல் மற்றும் செயல்படுத்தலில் ஈடுபட உள்ளன.

ஜூன் 01, திங்களன்று, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களால் உருவாக்கப்பட்ட 'சகோதரன் சூரியன்' அறக்கட்டளையின் வழிநடத்தலில் இந்த வேளாண்-சூரிய ஆற்றல் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. ஆலையின் மேம்பாடு மற்றும் செயல்பாட்டு ஏற்பாடுகளை மேற்பார்வையிடும் பொறுப்பு அந்த அறக்கட்டளைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. சாண்டா மரியா டி காலேரியாவில் நிறுவப்படவுள்ள இந்த ஆலை, வத்திக்கான் வானொலி ஒலிபரப்பு நிலையத்தின் மின் தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன், வத்திக்கான் நகர அரசின் ஆற்றல் தன்னிறைவு முயற்சிக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூரிய ஆற்றல் உற்பத்தியையும் விவசாய நடவடிக்கைகளையும் இணைக்கும் இந்த வேளாண்-சூரிய ஆற்றல் திட்டம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின்   'இறைவா உமக்கே புகழ்' (Laudato si’) திருத்தூதுமடல் மற்றும் 'கடவுளை புகழுங்கள்' (Laudate Deum) திருத்தூது அறிவுரை மற்றும் 'சகோதரன் சூரியன்' (Fratello Sole) என்ற தன்னாணை அறிக்கை (Motu proprio) ஆகியவற்றினால் ஊக்குவிக்கப்பட்ட சுற்றுச்சூழல் பார்வையைப் பிரதிபலிக்கிறது.

நிலத்தின் உற்பத்தித்திறனைப் பராமரிக்கும் அதே வேளையில், சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை மேம்படுத்த முயலும் இந்தத் திட்டத்தின் தொழில்நுட்ப சிக்கலைக் கருத்தில் கொண்டு, எரி ஆற்றல், சுற்றுச்சூழல் மேலாண்மை, நீர் ஆதாரங்கள் மற்றும் விவசாயம் ஆகியவற்றில் ஏசியா நிறுவனம் தனது நிபுணத்துவத்தை வழங்க உள்ளது.

திருப்பீடத்திற்கும் இத்தாலிக்கும் இடையே ஜூலை, 2025 இல் கையெழுத்திடப்பட்டு, ஏப்ரல், 2026 இல் இத்தாலியால் அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட சட்டக் கட்டமைப்பின் ஆதரவுடன் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

17 ஜூன் 2026, 12:30