திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களுடன் மூன்றாவது கர்தினால்கள் பேரவைக் கூட்டத்தில் கலந்துகொண்ட கர்தினால்கள். திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களுடன் மூன்றாவது கர்தினால்கள் பேரவைக் கூட்டத்தில் கலந்துகொண்ட கர்தினால்கள்.  (@Vatican Media)

உலகின் பிளவுகளுக்கு நற்செய்தியே மருந்து!

வத்திக்கானில் நடைபெற்ற சிறப்புநிலை கர்தினால்கள் ஆலோசனை அவைக் கூட்டத்தின் மூன்றாவது அமர்வில், உலகை பாதித்து வரும் போர்கள், சமூகப் பிளவுகள், குடும்பச் சீர்குலைவு மற்றும் மனித மாண்பிற்கு எதிரான சவால்கள் குறித்து கர்தினால்கள் ஆழமாக கலந்துரையாடினர். செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி மனித மாண்பு, உழைப்பின் மதிப்பு மற்றும் பொதுவான மனித விழுமியங்களைப் பாதுகாக்கும் வகையில் அமைய வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

ஜூன் 27, சனிக்கிழமை காலை, வத்திக்கானின் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கில் இடம்பெற்ற சிறப்புநிலை கர்தினால்கள் ஆலோசனை அவைக் கூட்டத்தின் மூன்றாவது அமர்வு, புனித பேதுரு பெருங்கோவிலில் கர்தினால் ஜியோவன்னி பட்டிஸ்தா ரே தலைமையில் நடைபெற்ற திருப்பலியைத் தொடர்ந்து ஆரம்பமானது என்று திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தூய ஆவியாரே, உம் முன்னிலையில் ஒன்றுகூடியிருக்கிறோம் (Adsumus) என்ற இறைவேண்டலுடன் அமர்வைத் தொடங்கிவைத்தார். தபோரா பேராயரும் கர்தினாலுமான புரோட்டாசே ருகாம்ப்வா அமர்வை வழிநடத்தினார்.

திருத்தந்தையின் அமைதிக்கான அழைப்புகளுக்கு ஆதரவு வழங்கிய கர்தினால்களுக்கு நன்றி தெரிவித்த கர்தினால் ருகாம்ப்வா, அந்த அழைப்பை ஒவ்வொரு உள்ளூர் திருஅவையிலும் மேலும் வலுப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். தொடர்ந்து, தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் பேராயரான கர்தினால் ஸ்டீபன் பிரிஸ்லின் அவர்கள், “நன்மையைக் கட்டியெழுப்புதல்: நம் காலத்தின் பணித்தளங்கள்” என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார்.

குழு கலந்துரையாடல்களில், உலகை பாதித்து வரும் போர்கள், சமூகப் பிளவுகள், குடும்பச் சீர்குலைவு, ஏழைகள், இளைஞர்கள் மற்றும் முதியோரின் சவால்கள் குறித்து கர்தினால்கள் ஆழமாக சிந்தித்தனர். வாழ்க்கையின் அர்த்தமின்மை, உறவுகளின் சிதைவு, அடையாள இழப்பு மற்றும் அதிகரித்து வரும் தனிமனித மனப்பான்மை ஆகியவை இந்நெருக்கடிகளின் முக்கிய காரணங்களாகக் குறிப்பிடப்பட்டன.

செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி மனித மாண்பு, மனித வரம்புகள், உழைப்பின் மதிப்பு மற்றும் பொதுவான மனித விழுமியங்களைப் பாதுகாக்கும் வகையில் அணுகப்பட வேண்டிய அவசியத்தையும் அவர்கள் வலியுறுத்தினர்.  

மேலும், பிளவுகளைத் தாண்டி ஒற்றுமையை உருவாக்க நம்பிக்கை, ஒற்றுமை உணர்வு மற்றும் பொதுநலம் இன்றியமையாதவை என்றும், நற்செய்தியின் வழியாக உலகின் காயங்களை ஆற்றுதல், ஒருங்கிணைந்த  பயணத்தை ஊக்குவித்தல், பொறுப்புள்ள தலைவர்களை உருவாக்குதல் மற்றும் பிளவுபடுத்தும் மனப்பான்மைக்கு பதிலாக உரையாடலை வளர்த்தல் ஆகியவை திருஅவையின் முக்கிய பணிகள் என்றும் கர்தினால்கள் வலியுறுத்தினர்.

கர்தினால்களின் தனிப்பட்ட கருத்துப் பகிர்வுகளைத் தொடர்ந்து, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தலைமையில் இடம்பெற்ற மூவேளை  இறைவேண்டலுடன் மூன்றாவது அமர்வு நிறைவுக்கு வந்தது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

29 ஜூன் 2026, 09:50