தேடுதல்

தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங் அவர்கள் திருத்தந்தையைச் சந்திக்கச் சென்றபோது தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங் அவர்கள் திருத்தந்தையைச் சந்திக்கச் சென்றபோது  (@Vatican Media)

2027 உலக இளைஞர் தினம்: நம்பிக்கை, உரையாடல் மற்றும் ஒற்றுமைக்கு அதிபர் லீ அழைப்பு!

தென் கொரியாவின் சியோல் நகரில் 2027 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலக இளைஞர் தினத்தை முன்னிட்டு, உலகளாவிய மோதல்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்ள நம்பிக்கை, உரையாடல் மற்றும் ஒற்றுமையின் அவசியத்தை தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங் வலியுறுத்தியுள்ளார்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

2027 ஆம் ஆண்டு தென் கொரியாவின் சியோல் நகரில் இடம்பெறவிருக்கும் உலக இளைஞர் தினத்தை (WYD) முன்னிட்டு, தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங் அவர்கள் நம்பிக்கை, உரையாடல் மற்றும் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாண்டு கொண்டாட்டத்தின் கருப்பொருளான “துணிவுடன் இருங்கள்! நான் உலகின் மீது வெற்றி கொண்டுவிட்டேன்” (யோவான் 16:33) என்ற இயேசுவின் வார்த்தைகளை எடுத்துக்காட்டிய அதிபர் லீ அவர்கள், மோதல்கள், பிரிவினைகள் மற்றும் நிச்சயமற்ற நிலைகள் நிறைந்த இன்றைய உலகச் சூழலில், இந்த கருப்பொருள் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளிக்கும் வலிமையான செய்தியாக அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிபர் லீ அவர்கள், "பயத்தை விட நம்பிக்கை வலிமையானது என்றும் மோதலை விட உரையாடல் அதிக பயனுள்ளது என்றும் மேலும் சவால்களை முறியடிக்க இணைந்து செயல்படுதல் அவசியம் என்றும் இந்தக் கருப்பொருள் நினைவூட்டுகிறது" என்று விவரித்துள்ளார்.

இன்றைய இளைஞர்கள் குறிப்பிடத்தக்க சிரமங்களை எதிர்கொள்கிறார்கள் என்றாலும், சமத்துவமின்மை, தொழில்நுட்ப மாற்றம் ஆகியவற்றிற்குப் பதிலளிக்கவும், மிகவும் அமைதியான எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில் மாற்றங்களை உருவாக்கவும் தனித்துவமான வாய்ப்புகளையும் அவர்கள் பெற்றுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த உலகலாவிய கொண்டாட்டத்தை முன்னின்று நடத்துவதில் தனது நாடு கொண்டுள்ள ஆர்வத்தை வெளிப்படுத்திய அதிபர் லீ அவர்கள், உலகம் முழுவதிலுமிருந்து வரும் இளம் திருப்பயணிகளை வரவேற்க தென் கொரியா ஆவலுடன் காத்திருப்பதாகக் கூறியுள்ளார்.

சியோலில் இடம்பெறும் உலக இளைஞர் தினம், கலாச்சாரங்கள் மற்றும் நாடுகளுக்கு இடையே நம்பிக்கை, நட்புறவு மற்றும் ஒற்றுமையை வளர்க்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வத்திக்கானில் திருத்தந்தை பதினான்காம் லியோ உடனான தனது சந்திப்பை சுட்டிக்காட்டிய அதிபர், திருத்தந்தையும் இந்த நிகழ்வில் கலந்துகொள்வதை வரவேற்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இது அறநெறிமிக்க தலைமை, கருணை மற்றும் உரையாடலின் ஒரு ஆற்றல்மிக்க அறிகுறி என்றும் அவர் விவரித்துள்ளார்.

கொரிய தீபகற்பத்தின் தற்போதைய பிரிவினைமிக்க சூழலைப் பற்றி குறிப்பிட்ட அதிபர் லீ அவர்கள், மனிதர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து, ஒருவருக்கு ஒருவர் செவிசாய்த்து, தங்கள் பகிரப்பட்ட மனிதநேயத்தை அங்கீகரிக்கும் போதுதான் அமைதி தொடங்குகிறது என்று வலியுறுத்தியுள்ளார்.

2027 ஆம் ஆண்டு சியோலில் இடம்பெறும் உலக இளைஞர் தினம், எதிர்கால சந்ததியினருக்கு துணிச்சல், நட்பு மற்றும் அமைதியின் நீடித்த மரபை விட்டுச்செல்லும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

18 ஜூன் 2026, 09:28