தேடுதல்

வத்திக்கானின் ஆறாம் பால்  அரங்கில் நடைபெற்ற சிறப்புநிலை கர்தினால்கள் பேரவையின் இரண்டாம் அமர்வு. வத்திக்கானின் ஆறாம் பால் அரங்கில் நடைபெற்ற சிறப்புநிலை கர்தினால்கள் பேரவையின் இரண்டாம் அமர்வு.  (@Vatican Media)

‘அதிகாரத்தின் கலாச்சாரத்திற்கு' எதிராக 'அன்பின் நாகரிகம்!

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் தலைமையில் நடைபெற்ற சிறப்புநிலை கர்தினால்கள் ஆலோசனை அவைக் கூட்டத்தின் பிற்பகல் அமர்வில், போர்கள், வன்முறை, சமூகப் பிளவுகள் மற்றும் அதிகார மையப்படுத்தப்பட்ட கலாச்சாரத்தின் ஆபத்துகள் குறித்து கலந்துரையாடல் இடம்பெற்றது.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் தலைமையில் இடம்பெற்ற சிறப்புநிலை கர்தினால்கள் ஆலோசனை அவைக் கூட்டத்தின் பிற்பகல் அமர்வு, ஜூன் 26, வெள்ளியன்று, திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கில் நடைபெற்றது. அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் மற்றும் வெனிசுலா மக்களுக்காக இறைவேண்டலுடன் அமர்வு தொடங்கியது.

"அதிகாரத்தின் கலாச்சாரமும் அன்பின் நாகரிகமும்" என்ற தலைப்பில் இடம்பெற்ற இவ்வமர்வு, திருத்தந்தை அவர்களின் மகத்தான மானுடம் என்ற திருத்தூது மடலின் ஐந்தாம் அதிகாரத்தை மையமாகக் கொண்டிருந்தது. கர்தினால் பாப்லோ விர்ஜிலியோ டேவிட் அவர்கள் தலைமையேற்க, கர்தினால் விக்டர் மானுவேல் பெர்னாண்டஸ் அவர்கள் தொடக்க உரையாற்றினார். அமர்வின் தொடக்கத்திலும் நிறைவிலும் திருத்தந்தை பங்கேற்றார்.

இன்றைய உலகில் அதிகார மையப்படுத்தப்பட்ட கலாச்சாரம், போர்கள், வன்முறை, சமூகப் பிளவுகள் மற்றும் அதிகாரத்தின் தர்க்கத்திற்கு அடிபணியும் மனப்பான்மை குறித்து கர்தினால்மார்கள் கவலை தெரிவித்தனர். இந்நிலைக்கு பதிலாக, அமைதி, அன்பு, நல்லிணக்கம், மன்னிப்பு, நீதியை மீட்டெடுக்கும் முயற்சிகள் மற்றும் உரையாடல் ஆகியவற்றின் வழியாக திருஅவை உலகிற்கு நம்பகமான சாட்சியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

திருஅவையின் நம்பகத்தன்மைக்கு அதன் ஒற்றுமை இன்றியமையாதது என்றும், குறிப்பாக இஸ்லாம் உள்ளிட்ட பிற சமயங்களுடனும், கிறிஸ்தவ சபைகளுடனும் உரையாடலை வலுப்படுத்த வேண்டியதன் அவசியமும் எடுத்துரைக்கப்பட்டது. கிறிஸ்துவின் மீதான விசுவாசமும் நற்செய்தியும் வாழ்வில் நடைமுறைப்படுத்தப்படும்போதுதான் சமுதாயத்தை மாற்றும் வல்லமை பெறும் என்ற கருத்தும் முன் வைக்கப்பட்டது

அரசியல் அதிகாரம் பொருளாதார ஆதிக்கத்திலிருந்து விடுபட வேண்டியதன் அவசியம், குடும்ப வாழ்வும் கல்வியும் வலுப்படுத்தப்பட வேண்டியதன் தேவை, துணிச்சலுடன் நற்செய்தியை அறிவிக்கும் பணியை முன்னெடுக்க வேண்டியதன் முக்கியத்துவம் ஆகியவை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. மேலும், உலக அமைதியை நிலைநாட்டுவதில் திருப்பீடத்தின் தூதரகப் பணியும், திருத்தந்தையின் பிரதிநிதிகளான திருத்தூதுவர்களின் பங்களிப்பும் முக்கியமானவை என்றும் எடுத்துக்கூறப்பட்டது.

மேலும், 'நியாயமான போர்' என்ற கருத்தைத் தாண்டி, அளவான தற்காப்பு உரிமையையும் அமைதியான தீர்வுகளையும் முன்னிறுத்த வேண்டும் என்று பல கர்தினால்மார்கள் வலியுறுத்தினர். அமைதிக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் திருத்தந்தை அவர்களுக்கு நன்றி தெரிவித்த அவர்கள், அடிமைத்தனத்தை தாமதமாகக் கண்டித்த திருஅவையின் வரலாற்றுத் தவறை அவர் நேர்மையாக ஒப்புக்கொண்டதையும் பாராட்டினர்.

இறுதியாக, இறைவேண்டல், உரையாடல் மற்றும் பகிர்ந்த பொறுப்புணர்வின் வழியாக அன்பின் நாகரிகத்தை கட்டியெழுப்புவதற்கான உறுதியை புதுப்பித்த கர்தினால்மார்கள், மாலை 7.30 மணியளவில் திருத்தந்தை தலைமையில் நடைபெற்ற இறைவேண்டலுடன் அமர்வை நிறைவு செய்தனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

27 ஜூன் 2026, 11:52