கடலோடிகளின் மாண்பும் நலனும் காக்கப்பட வேண்டும்!
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
"உலகம் வணிகம் மற்றும் போக்குவரத்திற்காக கடல் தொழிலாளர்களை பெரிதும் நம்பியிருந்தாலும், அவர்கள் செய்யும் பணிக்காக மட்டும் அல்லாமல், கடவுளின் சாயலில் படைக்கப்பட்ட மனிதர்கள் என்ற முறையில், மரியாதை மற்றும் கவனிப்பிற்கு உரியவர்களாக அங்கீகரிக்கப்பட வேண்டும்" என்று கர்தினால் மைக்கேல் செர்னி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவத் திருஅவைகள், "நம்பிக்கையின் துறைமுகங்கள்: கடலோடிகளுடன் இணைந்து பயணிக்கும் திருஅவை" என்ற கருப்பொருளில் இந்த ஆண்டு ஜூலை 12 அன்று கடல் ஞாயிறு தினத்தை கடைபிடிக்க உள்ளன.
இதனை முன்னிட்டு "சரக்கு மற்றும் வணிகத்திற்கு அப்பால்: கடலின் மனித முகம்" என்ற தலைப்பில் வழங்கிய தனது செய்தியில், ஒருங்கிணைந்த மனித முன்னேற்றதிற்கான திருப்பீடத் துறையின் தலைவரான கர்தினால் மைக்கேல் செர்னி அவர்கள், நீர்நிலைகளை நம்பி வாழும் 18 இலட்சத்திற்கும் அதிகமான மக்களின் மாண்பு மற்றும் சவால்களை எடுத்துரைத்தார்.
மேலும், "ஹர்முஸ் நீரிணையில் நிலவும் பதற்றங்கள் உள்ளிட்ட அண்மைய நெருக்கடிகள், மனிதகுலம் பெருமளவில் கடலோடிகளைச் சார்ந்திருப்பதை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளன" என்றும் கர்தினால் செர்னி அவர்கள் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இருந்தபோதிலும் மோதல், பாதுகாப்பின்மை, குடும்பத்திலிருந்து நீண்ட காலம் பிரிந்திருத்தல், மனச் சோர்வு, அதிகரித்து வரும் தனிமை போன்ற கடல் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் வளர்ந்து வரும் சவால்களையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் போதனையை எடுத்துக்காட்டிய கர்தினால் செர்னி அவர்கள், பொருளாதார அமைப்புகளில் மக்கள் வெறும் கருவிகளாக மட்டும் அடக்கிவைக்கப்படக் கூடாது என்று வலியுறுத்தினார்.
"திருத்தந்தையின் இந்தச் செய்தி சுற்றுச்சூழல் பொறுப்பையும் வலியுறுத்தியுள்ளது" என்றும் "மாசு மற்றும் கடல் வளங்களை அளவுக்கு அதிகமாகச் சுரண்டும் செயல்கள் கடல்களையும் மனிதகுலத்தையும் அச்சுறுத்துகிறது" என்றும் எச்சரித்துள்ளார்.
“கடலோடிகளின் நலனில் திருஅவை தொடர்ந்து அக்கறை செலுத்தி வருகிறது என்றும், அவர்கள் மதிக்கப்படுபவர்களும், மறக்கப்படாதவர்களும், தனிமையில் விடப்படாதவர்களும் என்பதை உணர்த்தும் வகையில் திருஅவை அவர்களுடன் பயணிக்கிறது” என்றும் கர்தினால் வலியுறுத்தியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.