பேராசிரியர் லுஷோம்போ பேராசிரியர் லுஷோம்போ  

செயற்கை நுண்ணறிவும் ஆப்பிரிக்காவின் சமூக நீதியும்: பேராசிரியர் லுஷோம்போவின் முக்கியப் பார்வை

மனித மாண்பு குறித்த திருத்தூது மடலின் நேர்மறையான பார்வைக்காகவும், புதிய காலனித்துவ மற்றும் சுரண்டல் பொருளாதார அமைப்புகளின் மூலம் ஆப்பிரிக்கா சுரண்டப்படுவதை விமர்சித்ததற்காகவும் அதனைப் பாராட்டுவதாக பேராசிரியர் லுஷோம்போ அவர்கள் தெரிவித்துள்ளார்.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

"ஆப்பிரிக்கா என்பது சுரங்கங்கள் தோண்டுவதற்கும் சுரண்டப்படுவதற்குமான ஒன்றாக மட்டுமே இருக்கக்கூடாது"  என்று தெரேசியன் அமைப்பின் உறுப்பினரான பேராசிரியர் லியோகாடி லுஷோம்போ அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

வத்திக்கான் செய்திக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் இவ்வாறு கூறியுள்ள பேராசிரியர் லுஷோம்போ அவர்கள், திருத்தந்தை அவர்களின்  'மாண்புமிகு மனிதநேயம்' (Magnifica Humanitas) திருத்தூது மடலை வரவேற்று மகிழ்ந்தார்.

மனித மாண்பு குறித்த அந்த திருத்தூது மடலின் நேர்மறையான பார்வைக்காகவும், புதிய காலனித்துவ மற்றும் சுரண்டல் பொருளாதார அமைப்புகளின் மூலம் ஆப்பிரிக்கா சுரண்டப்படுவதை விமர்சித்ததற்காகவும் அதனைப் பாராட்டுவதாக பேராசிரியர் லுஷோம்போ அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் காங்கோ ஜனநாயகக் குடியரசு உள்ளிட்ட பகுதிகளில் செயற்கை நுண்ணறிவு மற்றும் எண்ணிம தொழில்நுட்பங்களின் தாக்கம் அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டிய பேராசிரியர் லுஷோம்போ அவர்கள், தொழில்நுட்பம் வாய்ப்புகளை வழங்கினாலும், பல ஆப்பிரிக்கர்கள் உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட தயாரிப்புகளின் செயலற்ற நுகர்வோர்களாக மட்டுமே மாறி வருவதாக எச்சரித்துள்ளார்.

குறிப்பாக இளைஞர்களிடையே,  இந்தச் சார்புநிலை, சுற்றுச்சூழல் பாதிப்பு, தொழிலாளர் சுரண்டல் மற்றும் சமூக வாழ்க்கையின் பலவீனத்திற்கு வழிவகுக்கிறது" என்றும் "மக்கள் ஒருவருக்கொருவர் கலந்துரையாடுவதற்குப் பதிலாக, கேள்விகளுக்கு பதில் அளிக்கும் ஒரு கருவியாக மட்டுமே தங்கள் அலைபேசிகளை அதிகம் பயன்படுத்துகிறார்கள்"  என்றும் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் 'மாண்புமிகு மனிதநேயம்' என்ற திருத்தூது மடல் செயற்கை நுண்ணறிவுக்கு எதிரானது அல்ல என்றும் மாறாக தொழில்நுட்ப தீர்வுகளை வடிவமைப்பதில் அதிக பொறுப்புக்கூறல், உரையாடல் மற்றும் உள்ளூர் பங்கேற்பு தேவை என்றும் அந்த திருத்தூது மடல் அழைப்பு விடுக்கிறது என்பதை லுஷோம்போ வலியுறுத்தியுள்ளார்.

வளங்குன்றா வளர்ச்சியை அடைய, முடிவெடுக்கும் செயல்பாட்டில் உள்ளூர் சமூகங்கள் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று கூறிய பேராசிரியர் லுஷோம்போ அவர்கள், "செயற்கை நுண்ணறிவு இலாபத்தை மட்டும் நோக்கமாகக் கொள்ளாமல், அன்பு, ஒற்றுமை மற்றும் பொதுநலன் ஆகியவற்றால் வழிநடத்தப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.

ஆப்பிரிக்காவில் உள்ள திருஅவையானது, சமூக விவாதங்கள், ஊடகக் கல்வி மற்றும் உள்ளூர் சமயக் குழுக்கள் மற்றும் நீதி முன்னெடுப்புகளில் வலுவான பங்கேற்பு ஆகியவற்றின் மூலம் அறநெறி சார்ந்த செயற்கை நுண்ணறிவை ஊக்குவிக்க உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 ஜூன் 2026, 13:05