உரோமில் நற்செய்திப்பணி திருப்பீடத்துறையின் இணைத் தலைவரான கர்தினால் லூயிஸ் அன்டோனியோ தாக்லே அவர்களை சந்தித்தபோது. உரோமில் நற்செய்திப்பணி திருப்பீடத்துறையின் இணைத் தலைவரான கர்தினால் லூயிஸ் அன்டோனியோ தாக்லே அவர்களை சந்தித்தபோது. 

வத்திக்கான் வழிகாட்டுதலுடன் வளர்ச்சிப் பாதையில் புனித பீட்டர் ஷானல் கல்லூரி

பிஜியின் சுவா நகரில் அமைந்துள்ள புனித பீட்டர் ஷானல் குருத்துவக் கல்லூரி, வத்திக்கானின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் அடிப்படையில் தனது ஆன்மீக மற்றும் குருத்துவப் பயிற்சித் திட்டங்களை மேம்படுத்தும் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கல்வித் தரத்தை உயர்த்துவதற்கும், பாப்பிறை அர்பானியானா பல்கலைக்கழகத்துடன் அதிகாரப்பூர்வ கல்வி இணைப்பை ஏற்படுத்துவதற்குமான சாத்தியக்கூறுகளும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

பிஜி நாட்டின் தலைநகரான சுவா நகரில் அமைந்துள்ள  பசிபிக் பகுதியின் புனித பீட்டர் ஷானல் குருத்துவக் கல்லூரி பாலினேசியா, மெலனேசியா மற்றும் மைக்ரோனேசியா ஆகிய பகுதிகள் முழுவதும் உள்ள திருஅவைக்கு சேவை செய்யும் ஒரே குருத்துவக் கல்லூரியாக விளங்குகிறது.

இது 2025 ஆம் ஆண்டில் பசிபிக் ஆயர்கள் பேரவையினால் (CEPAC) மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆய்வைத் தொடர்ந்து, அருள்பணித்துவப் பயிற்சியைப் புதுப்பிப்பதற்கான முக்கியமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

குவாம் தீவிலுள்ள அகானா உயர் மறைமாவட்டத்தின் பேராயர் ரையன் ஜிமெனெஸ் தலைமையிலான குழுவினர், இந்த ஆய்வின் முடிவுகளைச் சமர்ப்பிக்கவும் வத்திக்கானின் வழிகாட்டுதலைப் பெறவும் ஜூன் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் உரோம் நகருக்குச் சென்றனர்.

இக்குழுவில் பேராசிரியர் சூசன் பாஸ்கோ, அருள்பணி பிரடெரிக் பெச்சினா மற்றும் குருத்துவக் கல்லூரியின் முதல்வர் தந்தை ஓகுசிடினோ உலப் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.

பல்வேறு திருப்பீடத் துறைகளுடன் இடம்பெற்ற சந்திப்புகளின் போது, பசிபிக் பகுதியின் கலாச்சார மற்றும் வரலாற்று உண்மைகளை மதித்து, அருள்பணித்துவப் பயிற்சியில் உயர் தரத்தைப் பேணுவதன் முக்கியத்துவத்தை இக்குழுவினர் வலியுறுத்தினர்.

மேலும் உண்மையான மேய்ப்புப் பணித் தலைவர்களை உருவாக்குவதில் ஆன்மீகப் பயிற்சி மற்றும் தனிப்பட்ட வழிகாட்டுதல் ஆகியவற்றின் பங்கை கர்தினால் லூயிஸ் அன்டோனியோ தாக்லே அவர்கள் சுட்டிக்காட்டினார்.

அருள்பணியாளர்களுக்கான திருப்பீடத் துறையுடன் இடம்பெற்ற கலந்துரையாடல்கள் "அருள்பணித்துவப் பயிற்சி என்பது மனித, ஆன்மீக, அறிவுசார் மற்றும் மேய்ப்புப் பணி வளர்ச்சியைக் கொண்ட வாழ்நாள் பயணம்" என்னும் கருத்தை வலியுறுத்தின.

மேலும் பயிற்சியாளர்களுக்குப் பயிற்சி அளித்தல், நிர்வாகக் கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், உள்ளூர் கலாச்சாரங்களை குருத்துவ கல்லூரி வாழ்க்கையுடன் ஒருங்கிணைத்தல் மற்றும் கூட்டொருங்கியக்க நடைமுறைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றிற்கும் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டது.

இச்சந்திப்புகளின் போது பாப்பிறை அர்பானியானா பல்கலைக்கழகத்துடன் முறையான இணைவதற்கான சாத்தியக்கூறுகளையும் இந்தக் குழு ஆய்வு செய்தது.

ஓசியானியாவில் உள்ள திருஅவைக்கு இந்த குருத்துவக் கல்லூரி ஆற்றி வரும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வத்திக்கான் அதிகாரிகள் அங்கீகரித்ததுடன், அதன் தொடர் வளர்ச்சியையும் ஊக்குவித்துள்ளனர்.

ஆய்வின் பரிந்துரைகளைச் செயல்படுத்துவதற்கும், பசிபிக் பகுதிக்காக பற்றுறுதியுள்ள மற்றும் திறமையான அருள்பணியாளர்களைத் தயார் செய்வதற்கும் புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்புடன் இந்த சந்திப்பு நிறைவடைந்தது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

17 ஜூன் 2026, 12:50