தேடுதல்

திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்  

இதுவரை வெளியிடப்படாத திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்களின் மறையுரைகள் நூலாக வெளியீடு!

திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்களின் இதுவரை வெளியிடப்படாத சில மறையுரைகளை உள்ளடக்கிய The Lord Holds Us by the Hand (இறைவன் நம்மைக் கரம் பிடித்து வழிநடத்துகிறார்) என்ற நூலின் புதிய ஆங்கிலப் பதிப்பு வெளியாகியுள்ளது.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்களின் இதுவரை வெளியிடப்படாத சில மறையுரைகளை உள்ளடக்கிய இறைவன் நம்மைக் கரம் பிடித்து வழிநடத்துகிறார்’ (The Lord Holds Us by the Hand) என்ற நூலின் புதிய ஆங்கிலப் பதிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் போதகர், இறையியலாளர் மற்றும் ஆன்மீக வழிகாட்டி என்ற ஜோசப் ராட்ஜிங்கரின் பரிமாணங்கள் மீண்டும் வெளிப்படுகின்றன.

வத்திக்கான் பதிப்பகத்தால் முதலில் இத்தாலிய மொழியில் வெளியிடப்பட்ட இந்நூல், 2005 முதல் 2017 வரை திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்கள் திருவருகைக்காலம், தவக்காலம் மற்றும் உயிர்ப்புக்காலங்களில் ஆற்றிய மறையுரைகளின் தொகுப்பாகும்.

இந்தத் தொகுப்பை ரிகார்டோ பொல்லாட்டி, லூகா காருசோ மற்றும் அருள்பணி பெடெரிகோ லொம்பார்டி ஆகியோர் தொகுத்துள்ளனர். மேலும் இதில் பேராயர் ஜார்ஜ் கன்வெய்ன் அவர்கள் எழுதிய முன்னுரையும், அருள்பணி லொம்பார்டி அவர்களின்  அறிமுக உறையும் இடம்பெற்றுள்ளன.

இந்த மறையுரைகள், திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்கள் திருத்தந்தையாக இருந்த காலத்திலும், பின்னர் ஓய்வுபெற்ற திருத்தந்தையாக இருந்த காலத்திலும், திருத்தந்தை அரண்மனை மற்றும் மேட்டர் எக்லேசியா மடாலயத்தில் நடைபெற்ற தனிப்பட்ட திருப்பலிகளின் போது வழங்கிய ஆன்மீகச் சிந்தனைகளாகும்.

மிக நெருக்கமான சூழலில் நிகழ்த்தப்பட்ட போதிலும், இவை அவரது போதனைகளின் ஆழத்தையும், தெளிவையும், ஆன்மீகச் செழுமையையும் வெளிப்படுத்துகின்றன. கிறிஸ்துவுடனான தனிப்பட்ட உறவே இந்தத் தொகுப்பின் மையக்கருத்தாகும். கிறிஸ்தவ வாழ்க்கை என்பது தனிமையான பயணம் அல்ல, அது இறைவனின் உடனிருப்பு மற்றும் இரக்கத்தால் வழிநடத்தப்படும் ஒன்று என்பதை திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் வலியுறுத்துகிறார்.

திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்களின் ஆழமான இறையியல் சிந்தனைகளும், அவரது மேய்ப்புப் பணியின் இதயமும் எவ்வாறு ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருந்தன என்பதை இந்நூல் வெளிப்படுத்துகிறது. இதுவரை வெளியிடப்படாத அவரது மறையுரைகளை உள்ளடக்கிய முதல் தொகுப்பான இந்நூலைத் தொடர்ந்து, பொதுக்கால மறையுரைகளைக் கொண்ட இரண்டாம் தொகுதியும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

25 ஜூன் 2026, 11:31