2026.06.26 CHILDERN

FCRA புதிய விதிமுறைகள்: வெளிநாட்டு நிதி பெறும் அமைப்புகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்

வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டத்தின் (FCRA) கீழ் புதிய செயலாக்க விதிமுறைகளை இந்திய அரசு அமல்படுத்தியுள்ளது. வெளிநாட்டு நிதியின் பயன்பாடு குறித்து விரிவான தகவல்களை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், மதமாற்றம் மற்றும் மதப் பரப்புரைக்காக அந்நிதியைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

2010ஆம் ஆண்டு வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டத்தின் (FCRA) கீழ், அரசுசாரா அமைப்புகள், குடிமைச் சமூக அமைப்புகள் மற்றும் சமய அமைப்புகள் பெறும் வெளிநாட்டு நிதி மீதான கண்காணிப்பை வலுப்படுத்தும் புதிய செயலாக்க விதிமுறைகளை இந்திய அரசு அமல்படுத்தியுள்ளது.

ஜூன் 22 முதல் அமலுக்கு வந்துள்ள இந்த புதிய விதிமுறைகளின்படி, வெளிநாடுகளிலிருந்து பெறப்படும் நிதியின் நோக்கத்தைத் தெளிவாகக் குறிப்பிடுவதுடன், அந்த நிதி எந்த மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களில் பயன்படுத்தப்படவுள்ளது என்பதையும் சம்பந்தப்பட்ட அமைப்புகள் கட்டாயமாக அறிவிக்க வேண்டும்.

எதிர்காலத்தில் திட்டத்தின் நோக்கம் அல்லது திட்டத்தை செயல்படுத்தப் போகும் இடத்தில் மாற்றம் செய்யப்பட்டால் அதற்காக கூடுதல் கட்டணம் செலுத்தி அனுமதி பெற வேண்டும். தற்போது FCRA பதிவு பெற்ற அமைப்புகள் இதனைப் பின்பற்றுவதற்கு ஓராண்டு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு நிதியை மதமாற்றம் அல்லது மதப் பரப்புரைக்குப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மத அமைப்புகள் இனி "மதம்" என்ற பொதுப் பிரிவில் அல்லாமல், அரசின் 105 அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளில் தங்களது குறிப்பிட்ட பணிகளைப் பதிவு செய்ய வேண்டும் என்று புதிய விதிமுறைகள் தெரிவிக்கின்றன.

இதில் வழிபாட்டுத் தலங்களைப் பராமரித்தல், புனித நூல்களை அச்சிடுதல் மற்றும் மொழிபெயர்த்தல், உறுப்பினர்களுக்கு மதக் கல்வி அளித்தல், திருப்பயணிகளுக்கு உதவுதல், சமூக உணவகங்களை நடத்துதல் மற்றும் பூர்வீக மத மரபுகளைப் பாதுகாத்தல் ஆகியவை அடங்கும்.

இதனிடையே, முன்மொழியப்பட்ட 2026-ஆம் ஆண்டு வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்திருத்த மசோதா, FCRA உரிமம் ரத்து செய்யப்பட்ட அமைப்புகளின் சொத்துக்களைக் கைப்பற்றவும் விற்கவும் அரசிற்கு விரிவான அதிகாரங்களை வழங்க முற்படுகிறது. இந்தச் சீர்திருத்தங்கள் தேசிய நலனைப் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அரசு கூறினாலும், எதிர்க்கட்சிகளும் குடிமைச் சமூகக் குழுக்களும் இவை நிர்வாகக் கட்டுப்பாடுகளை அதிகரிப்பதுடன், மனிதாபிமான, கல்வி மற்றும் சமூக சேவை நடவடிக்கைகளுக்குத் தடையாக அமையக்கூடும் என்று எச்சரிக்கின்றன.

பீதேஸ் செய்தி நிறுவனம் 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

26 ஜூன் 2026, 14:15