ஒருங்கிணைந்த பயணத்தின் ஆன்மிகப் பரிமாணத்தை ஆழப்படுத்த கர்தினால்கள் அழைப்பு!
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
ஜூன் 27, சனிக்கிழமை மாலை, வத்திக்கானின் புதிய ஆயர் மாமன்ற அரங்கில் இடம்பெற்ற சிறப்புநிலை கர்தினால்கள் ஆலோசனை அவைக் கூட்டத்தின் நான்காவது அமர்வின் முதல் பகுதி, கர்தினால் ஜோசப் வில்லியம் டோபின் அவர்கள் தலைமையில் தொடங்கியது என்று திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது.
கர்தினால் Mario Grech அவர்கள் வழங்கிய தொடக்க உரையைத் தொடர்ந்து, பல கர்தினால்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். ஒருங்கிணைந்த பயணத்தின் ஆன்மிக மற்றும் வரலாற்றுப் பரிமாணங்களை மேலும் ஆழப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து அவர்கள் வலியுறுத்தியதுடன், குருத்துவ வாழ்வு நற்செய்தி மதிப்பீடுகளை பிரதிபலிக்கும் வகையிலும், அதிகார மையப்படுத்தலற்றதாகவும் விசுவாசிகளுக்கு எடுத்துக்காட்டப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டனர்.
மேலும், ஆலோசனை நடைமுறைகள் மிகவும் சிக்கலானதாக மாறும்போது, சாட்சிய வாழ்விற்கு அழைக்கப்பட்டுள்ள திருஅவையின் பணிக்கு அது சுமையாக மாறும் ஆபத்து இருப்பதாக கர்தினால்கள் சுட்டிக்காட்டினர். அதேவேளையில், திருஅவையில் தூய ஆவியார் உரைப்பதை அறிந்து பகுத்தறியும் பணியில், திரு ஆட்சி சார்ந்த திருஅவையும் இறைமக்களும் தத்தம் பொறுப்பிற்கு ஏற்ப பங்கெடுக்கின்றனர் என்பதும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.
உலகளாவிய திருஅவையின் ஒருங்கிணைந்த பயணத்திற்கு, கீழை கத்தோலிக்கத் திருஅவைகளின் ஒருங்கிணைந்த அனுபவம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதாக கர்தினால்கள் வலியுறுத்தினர்.
மாலை 5 மணியளவில் முதல் பகுதி நிறைவடைந்ததைத் தொடர்ந்து,திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களுடன் கர்தினால்கள் நேரடியாக உரையாடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஒவ்வொரு கர்தினாலுக்கும் மூன்று நிமிடங்கள் வரை கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.