2027–2028 திருஅவை மாமன்றங்களுக்கான தயாரிப்பில் உரோமையில் கூடும் உலகத் திருஅவைத் தலைவர்கள்
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
உலகின் பல கண்டங்களைச் சேர்ந்த திருஅவை அமைப்புகளின் தலைவர்கள், ஆயர்கள் மாமன்றத்தின் (Synod) அடுத்த கட்டப் பயணத்திற்கான ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்க ஜூன் 23 முதல் 25 வரை உரோமையில் ஒன்று கூடுகின்றனர்.
இலத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா, ஓஷியானியா, மத்திய கிழக்கு மற்றும் வட அமெரிக்கா ஆகிய பகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் திருஅவை அமைப்புகளின் தலைவர்களும், கண்ட அளவிலான ஆயர் மாமன்ற ஒருங்கிணைப்புக் குழுக்களின் பிரதிநிதிகளும் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
2024 அக்டோபரில் இடம்பெற்ற 16ஆவது பொது ஆயர்கள் மாமன்றப் பேரவையின் நிறைவுக்குப் பிறகு, "ஒன்றிணைந்து பயணிக்கும் திருஅவை " என்ற கருப்பொருளின் செயல்படுத்தும் கட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் பயணம் 2027 மற்றும் 2028 ஆம் ஆண்டுகளில் நடைபெறவுள்ள திருஅவை மாமன்றங்களால் சிறப்பிக்கப்படும் என ஆயர் மாமன்ற பொதுச் செயலகம் தெரிவித்துள்ளது.
இக்கூட்டத்தின்போது , 16ஆவது ஆயர் மாமன்றத்தின் இறுதி ஆவணத்தை உள்ளூர் திருஅவைகளில் நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் பகிரப்பட்டு வருகின்றன. மேலும், பல்வேறு பகுதிகளின் அனுபவங்கள் பரிமாறப்பட்டு, பொதுவான சவால்கள் மற்றும் எதிர்கால சிந்தனைக்குரிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படுகின்றன.
இக்கூட்டத்தின் நிறைவு நாளான ஜூன் 25 அன்று, திருத்தந்தை பங்கேற்பாளர்களை நேரில் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாட உள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.