கர்தினால் லாசரஸ் யூ ஹியூங்-சிக் அவர்கள் உரோமையிலுள்ள புனித பவுல் பெருங்கோவிலில் திருப்பலி நிறைவேற்றியபோது. கர்தினால் லாசரஸ் யூ ஹியூங்-சிக் அவர்கள் உரோமையிலுள்ள புனித பவுல் பெருங்கோவிலில் திருப்பலி நிறைவேற்றியபோது. 

தென்-வட கொரியா இடையே அமைதி நிலவ இறைவேண்டல்

தேஜியோன் மறைமாவட்ட முன்னாள் ஆயர் கர்தினால் லாசரஸ் யூ ஹியூங்-சிக் தலைமையிலான திருப்பலியில், தென் கொரிய அதிபர் லீ ஜே-மியோங் கலந்துகொண்டு கொரியத் தீபகற்பத்தின் அமைதிக்காக இறைவேண்டல் செய்தார். உரையாடல் மற்றும் நல்லிணக்கம் மூலமே மோதல்களைக் கடந்து உண்மையான அமைதியை நிலைநாட்ட முடியும் என்று கர்தினால் வலியுறுத்தினார்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

ஜூன் 14, ஞாயிறன்று, புனித பவுல் பெருங்கோவிலில் இடம்பெற்ற திருப்பலியில், அருள்பணியாளர்களுக்கான திருப்பீடத்துறையின் தலைவரும் தேஜியோன் மறைமாவட்டத்தின் மேனாள் ஆயருமான கர்தினால் லாசரஸ் யூ ஹியூங்-சிக் அவர்கள், தென் மற்றும் வட கொரியாக்களுக்கு இடையே அமைதி மற்றும் நல்லிணக்கம் நிலவ இறைவேண்டல் செய்தார்.

ஜூன் 15, திங்களன்று திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களைச் சந்தித்த தென் கொரிய அதிபர் லீ ஜே-மியோங் அவர்களும் இந்தத் திருப்பலியில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரிய தீபகற்பத்தில் தொடரும் பிரிவினையைக் குறித்து எடுத்துக்காட்டிய கர்தினால் ஹியூங்-சிக் அவர்கள், "உரையாடல் மோதலை விட வலிமையானது, நல்லிணக்கம் வெறுப்பை விட வலிமையானது, நம்பிக்கை பயத்தை விட வலிமையானது" என்பதை கொரியா உலகிற்கு நிரூபிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் "உண்மையான அமைதியை ஒருபோதும் கைவிட முடியாது" என்றும், "அமைதியை ஏற்படுத்த புரிதலையும் ஒற்றுமையையும் கட்டமைப்பதற்கான கூட்டு அர்ப்பணிப்பு தேவை" என்றும் அவர் வலியுறுத்தினார்.

"உண்மையான அமைதி என்பது நேர்மையான உரையாடல், மனித மாண்பிற்கான மரியாதை மற்றும் மற்றவர்களைப் புரிந்துகொள்ளும் முயற்சிகளின் அடிப்படையில் அமைந்தது" என்று  குறிப்பிட்ட கர்தினால் ஹியூங்-சிக் அவர்கள், "வன்முறைக்குப் பதிலாக கருணையும், அலட்சியத்தை வெல்ல சமூகத்தொடர்பும் அவசியம்" என்றும் வலியுறுத்தினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2014-ல் தென் கொரியாவிற்கு வருகை புரிந்ததை சுட்டிக்காட்டிய கர்தினால் ஹியூங்-சிக் அவர்கள், செவோல் படகு விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைத் திருத்தந்தை சந்தித்த நிகழ்வு, துன்பப்படுபவர்களுக்கு திருஅவை எவ்வளவு நெருக்கமாக இருக்கிறது என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம்" என்று எடுத்துக்காட்டினார்.

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் வழிகாட்டுதலின்படி கத்தோலிக்க திருஅவை மனித மாண்பைப் பாதுகாப்பதிலும், அமைதியை மேம்படுத்துவதிலும், வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நிற்பதிலும் தொடர்ந்து உறுதியாக இருக்கும் என்று மீண்டும் உறுதிப்படுத்தி தனது மறையுரையை கர்தினால் ஹியூங்-சிக் அவர்கள் நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

16 ஜூன் 2026, 12:28