பொதுநலனை மையமாகக் கொண்டு எதிர்காலத்தை கட்டியெழுப்ப திருஅவை அழைப்பு!
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
சிறப்புநிலை கர்தினால்கள் ஆலோசனை அவைக் கூட்டத்தின் மூன்றாவது அமர்வைத் தொடங்கிவைத்து உரையாற்றிய தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் பேராயரான கர்தினால் ஸ்டீபன் பிரிஸ்லின் அவர்கள், “பொதுநலனுக்காக கட்டியெழுப்புதல்: நம் காலத்தின் பணித்தளங்கள்” என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார்.
திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் மகத்தான மானுடம் திருமடலை அடிப்படையாகக் கொண்டு உரையாற்றிய கர்தினால் பிரிஸ்லின் அவர்கள், வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் மனிதகுலம் தனது எதிர்காலத்தை எவ்வாறு கட்டியெழுப்புகிறது என்பதை ஆழமாக சிந்திக்க திருஅவையை அழைத்தார்.
திருத்தந்தையின் திருமடலில் இடம்பெறும் பாபேல் மற்றும் எருசலேம் நகரங்களின் ஒப்பீட்டை விளக்கிய கர்தினால் பிரிஸ்லின் அவர்கள், பாபேல், இறைவனைப் புறக்கணித்த மனிதனின் தன்னிறைவு மனப்பான்மையையும், இறைவன் இல்லாத ஒற்றுமை இறுதியில் பிளவுக்கும் சீர்குலைவுக்கும் வழிவகுப்பதையும் எடுத்துக்காட்டுவதாக கர்தினால் பிரிஸ்லின் விளக்கினார். அதேவேளையில், எருசலேம், இறைவனின் திருவுளத்திற்குக் கீழ்ப்படிந்து, ஒவ்வொரு மனிதரின் மாண்பையும் உயர்த்தும் சமூகத்தின் அடையாளமாக விளங்குகிறது என்றும் அவர் கூறினார்.
செயற்கை நுண்ணறிவு மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் வேகமாக வளர்ந்து வரும் இன்றைய காலத்தில், சவால் தொழில்நுட்ப வளர்ச்சியில் அல்ல; மாறாக, அது பொறுப்புணர்வு, நீதி மற்றும் மனித மாண்பிற்கு மதிப்பளிக்கும் வகையில் பயன்படுத்தப்படுகிறதா என்பதில்தான் உள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.
தொழில்நுட்பம் ஒருபோதும் நடுநிலையானது அல்ல; அது அரசியல், பொருளாதாரம், சமூக மற்றும் கல்வி வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று குறிப்பிட்ட கர்தினால் பிரிஸ்லின் அவர்கள், இச்சவால்களுக்கு திருஅவையின் பதிலாக ஒருங்கிணைந்த பயணம் (Synodality) அமைகிறது என்றும், செவிமடுத்தல், பகுத்தறிதல் மற்றும் பகிர்ந்த பொறுப்புணர்வு ஆகியவற்றின் வழியாக விசுவாசிகள் ஒன்றிணைந்து செயல்பட அது வழிவகுக்கிறது என்றும் தெரிவித்தார்.
இறுதியாக, மகத்தான மானுடம் திருமடல், நம்பிக்கை, அன்பு, எதிர்நோக்கு மற்றும் இறைவேண்டல் ஆகிய இறையியல் நற்பண்புகளை அடிப்படையாகக் கொண்ட கிறிஸ்தவ வாழ்வுப் பாதையை முன்வைக்கிறது என்றும், தூய ஆவியாரின் வழிநடத்தலுக்கு திறந்த மனதுடன் மனிதகுலத்திற்கு சேவை செய்யும் அன்பின் நாகரிகத்தை உருவாக்க திருஅவை அழைக்கப்படுகிறது என்றும் கர்தினால் பிரிஸ்லின் அவர்கள் வலியுறுத்தினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.