புதிய சலேசிய மறைசாட்சிகள் புதிய சலேசிய மறைசாட்சிகள் 

தங்கள் வாழ்வின் மூலம் கிறிஸ்துவிற்கு சாட்சி பகர்ந்த புதிய சலேசிய மறைசாட்சிகள்!

இறை ஊழியர் ஜான் ஸ்வியர்க் மற்றும் அவரது எட்டு சலேசியத் தோழர்களின் அருளாளர் பட்டத் திருப்பலியில், புனிதர் பட்டப் படிநிலைகளுக்கான திருப்பீடத் துறையின் தலைவர் கர்தினால் மார்செல்லோ செமராரோ சிறப்பு மறையுரையாற்றினார். அப்போது, தன் மந்தையை அறிந்து அதற்காகத் தன் உயிரைத் தியாகம் செய்த நல்ல மேய்ப்பராக இயேசு கிறிஸ்து திகழ்கிறார் என அவர் போற்றினார்.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

'தன் மந்தையை ஆழமாக அறிந்து, அதற்காகத் தன் உயிரையும் தியாகம் செய்யும் நல்ல மேய்ப்பராக இயேசு கிறிஸ்து திகழ்கிறார்’ என்று கர்தினால் மார்செல்லோ செமராரோ அவர்கள் கூறினார்.

இறை ஊழியர் ஜான் ஸ்வியர்க் மற்றும் அவரது சலேசியத் தோழர்கள் எட்டு பேரின் அருளாளர் பட்டத் திருப்பலியில் மறையுரையாற்றியபோது இவ்வாறு கூறிய  புனிதர் பட்டப் படிநிலைகளுக்குரிய திருப்பீடத் துறையின் தலைவர் கர்தினால் மார்செல்லோ செமராரோ அவர்கள், "போலந்தின் வரலாற்றில் மிக இருண்ட காலங்களில் ஒன்றில், இந்த புதிய அருளாளர்கள் தங்கள் அழைப்பிற்கு உண்மையாக இருந்து, மறைசாட்சிகளாகத் தங்கள் உயிரைக் கொடுப்பதன் மூலம் கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றினார்கள்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களின் மரணத்தில் உள்ள சோகத்தை திருஅவை கொண்டாடவில்லை, மாறாக அவர்களது சான்று வாழ்வின் வழியாக வெளிப்பட்ட கிறிஸ்துவின் மகிமையையே திருஅவை கொண்டாடுகிறது என்று வலியுறுத்திய கர்தினால் செமராரோ அவர்கள்,  "புனித தொன்போஸ்கோவின் அருங்கொடையால் ஈர்க்கப்பட்ட இந்த ஒன்பது சலேசிய அருள்பணியாளர்களும், இளைஞர்களுக்குக் கல்வி கற்பிப்பதிலும், ஏழைகளுக்குச் சேவை செய்வதிலும், ஆன்மாக்களைக் கடவுளிடம் வழிநடத்துவதிலும் தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர்" என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் "துன்புறுத்தலும் மதத்திற்கு எதிரான வன்முறையும் தாக்கியபோதும், அவர்கள் தங்கள் பணியைக் கைவிடாமல் கிறிஸ்தவ நம்பிக்கையில் உறுதியாக இருந்தனர்" என்றும் கூறியுள்ளார்.

இளைஞர்களைக் குறித்துப் பேசிய கர்தினால் செமராரோ அவர்கள், மனித இதயத்தின் ஆழமான ஏக்கங்களை நிறைவேற்றும் கிறிஸ்துவைத் தேடுமாறும், தியாகம் இல்லாத போலியான மகிழ்ச்சியளிக்கும் வாக்குறுதிகளை எதிர்த்து நிற்குமாறும் அவர்களை ஊக்குவித்துள்ளார்.

மேலும், சலேசியர்கள் மற்றும் அருள்பணியாளர்கள் தங்கள் பணியைத் துணிவுட னும் தாராள மனதுடனும் தொடர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இறுதியாக, புதிதாக அருளாளர்களாக அறிவிக்கப்பட்ட மறைசாட்சிகள் திருஅவைக்கு நம்பிக்கையின் ஆதாரமாக இருக்கிறார்கள் என்று கூறி, போர், வன்முறை மற்றும் துன்பங்களால் இன்னும் பாதிக்கப்பட்டிருக்கும் உலகில் அமைதிக்காக இறைவேண்டல் செய்து தனது மறையுரையை நிறைவு செய்தார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

06 ஜூன் 2026, 16:36