தேடுதல்

 ஆறாம் பால்  அரங்கில் நடைபெற்ற சிறப்புநிலை  கர்தினால்கள் பேரவையில் உரையாற்றிய கர்தினால் ரிஸ். ஆறாம் பால் அரங்கில் நடைபெற்ற சிறப்புநிலை கர்தினால்கள் பேரவையில் உரையாற்றிய கர்தினால் ரிஸ்.  (@Vatican Media)

இன்றைய உலகின் இரு முகங்களை வெளிப்படுத்தும் நல்ல சமாரியர் உவமை!

சிறப்புநிலை கர்தினால்கள் ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றிய கர்தினால் கிரிகோர்ஸ் ரிஸ் அவர்கள், நல்ல சமாரியர் உவமை இன்றைய உலகத்தையும் திருஅவையின் பணியையும் புரிந்துகொள்வதற்கான ஆற்றல்மிக்க வழிகாட்டி என்று தெரிவித்தார்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

இன்றைய உலகத்தையும் திருஅவையின் பணியையும் புரிந்துகொள்வதற்கு அது இன்றும் ஒரு ஆற்றல் மிக்க வழிகாட்டியாக இருப்பதாக கர்தினால் கிரிகோர்ஸ் ரிஸ் அவர்கள்  கூறியுள்ளார்.

சிறப்புநிலை கர்தினால்கள் ஆலோசனை அவைக் கூட்டத்தில், "எப்படிப்பட்ட உலகில் நாம் நற்செய்தியை அறிவிக்க அழைக்கப்பட்டுள்ளோம்?" என்ற தலைப்பில் உரையாற்றிய கர்தினால் ரிஸ் அவர்கள், நல்ல சமாரியர் உவமையை மையமாகக் கொண்டு தனது சிந்தனைகளைப் பகிர்ந்துள்ளார்.

அப்போது புனித ஆறாம் பவுலின் வார்த்தைகளை எடுத்துக்காட்டிய கர்தினால் ரிஸ் அவர்கள், நவீன உலகத்துடன் தொடர்புகொள்வதற்கு நல்ல சமாரியரே திருஅவையின் "மாதிரி" மற்றும் "நெறிமுறை" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு மனிதரும் உலகை வடிவமைப்பவராகவும், திருஅவையின் பணியின் மையமாகவும் இருப்பதால், உலகைப் பற்றி கருத்தியல் ரீதியாக மட்டும் பேசாமல், ஒவ்வொரு மனிதரின் மீதும் அக்கறையுடன் கவனம் செலுத்த நற்செய்தி கிறிஸ்தவர்களை அழைக்கிறது என்று கர்தினால் ரிஸ் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

"நல்ல சமாரியார் உவமையில் இடம்பெறும் காயமடைந்த பயணி, வன்முறை, அநீதி, மாண்பிழப்பு, உளவியல் மற்றும் ஆன்மீக காயங்கள், தனிமை மற்றும் அலட்சியம் ஆகியவற்றால் இன்றும் துன்பப்படும் பல மக்களைக் குறிக்கிறார்" என்று அவர் விளக்கமளித்துள்ளார்.

மேலும் "எருசலேமிலிருந்து விலகிச் செல்லும் அந்தப் பயணம், கடவுளிடமிருந்து விலகிச் செல்லும் உலகையும், மதச்சார்பின்மை மற்றும் மதத்தின் தவறான பயன்பாடு உண்மையான மனித மாண்பை பலவீனப்படுத்துவதையும் அடையாளப்படுத்துகிறது" என்றும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இந்த உவமை நல்ல சமாரியர் மூலம் நம்பிக்கையையும் அளிக்கிறது என்றும், அவர் ஒரு அந்நியராக இருந்தும் கருணையின் முன்மாதிரியாக மாறுகிறார் என்றும் எடுத்துரைத்த கர்தினால் ரிஸ் அவர்கள், "திருஅவை முன்முடிவுகளை முறியடித்து, எங்கு கருணையின் செயல்கள் காணப்படுகிறதோ அங்கெல்லாம் அவற்றை அங்கீகரிக்க வேண்டும் என்றும்  கூறியுள்ளார்.

"பிறரன்புப் பணிகள் கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே உரியவை அல்ல; மாறாக, அவை திருஅவையும் உலகமும் உண்மையான உரையாடலிலும் ஒத்துழைப்பிலும் இணையும் சந்திப்புத் தளமாக அமைகின்றன" என்று வலியுறுத்தினார்.

இறுதியாக, நல்ல சமாரியர் உவமையில் இடம்பெறும் இரண்டு நபர்களும் இன்றைய உலகின் இரு முகங்களை பிரதிபலிப்பதாகக் கூறிய கர்தினால் ரிஸ் அவர்கள், ஒருவர் குணமடைவதை எதிர்நோக்கி இருக்கும் காயமடைந்த மனிதர்; மற்றொருவர் உண்மையான வாழ்வின் பாதையை எடுத்துக்காட்டும் இரக்கமிக்க அந்நியர் என்றும்,  இவ்விருவர் மூலமாகவும், இரக்கம், நம்பிக்கை மற்றும் கருணையுடன் நற்செய்தியை அறிவிக்க இறைவன் திருஅவையைத் தொடர்ந்து அழைக்கிறார் என்றும்  வலியுறுத்தி தனது உரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

27 ஜூன் 2026, 12:20