கர்தினால் பியத்ரோ பரோலின்  மற்றும் பிற முக்கிய பேச்சாளர்கள் வத்திக்கானின் காசினா பியோ IV மாநாட்டில் பங்கேற்ற போது. கர்தினால் பியத்ரோ பரோலின் மற்றும் பிற முக்கிய பேச்சாளர்கள் வத்திக்கானின் காசினா பியோ IV மாநாட்டில் பங்கேற்ற போது. 

கர்தினால் பரோலின்: இளைஞர்களுக்குத் தேவை நோக்கம், வெறும் வாய்ப்புகள் மட்டுமல்ல

நவீன சமூகம் இளைஞர்களுக்கு "அனைத்து வசதிகளையும் வழங்குகிறது, ஆனால் எந்த நோக்கத்தையும் தருவதில்லை" என்று எச்சரித்த கர்தினால் கரோலின் அவர்கள், தகவல்களும் வாய்ப்புகளும் இருந்தபோதிலும் பலர் வழிதவறிய உணர்வைப் பெறுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

நவீன சமூகம் இளைஞர்களுக்கு "அனைத்து வசதிகளையும் வழங்குகிறது, ஆனால் எந்த நோக்கத்தையும் தருவதில்லை" என்றும், தகவல்களும் வாய்ப்புகளும் இருந்தபோதிலும் பலர் வழிதவறிய உணர்வைப் பெறுகிறார்கள் என்றும் திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்கள், குறிப்பிட்டுள்ளார்.

வத்திக்கானில் மனநலம், எண்ணிம தொழில்நுட்பங்கள் மற்றும் கல்வி குறித்த அனைத்துலக மாநாட்டில் உரையாற்றியபோது இவ்வாறு கூறிய கர்தினால் பரோலின் அவர்கள், இளைஞர்களிடையே அதிகரித்து வரும் மனநல நெருக்கடியை "கட்டமைப்பு ரீதியான பதில்கள் தேவைப்படும் ஒரு அவசர நெருக்கடி நிலை" என்று விவரித்துள்ளார்.

மேலும் மனித முன்னேற்றம், அமைதி மற்றும் சமூக நீதிக்கு கல்வி இன்றியமையாதது என்றும் கர்தினால் பரோலின் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தொடங்கிய உலகளாவிய கல்வி ஒப்பந்தம் மற்றும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் கல்வி குறித்த பார்வையை எடுத்துக்காட்டிய கர்தினால் பரோலின் அவர்கள், மூன்று முக்கிய முன்னுரிமைகளாக அகவாழ்வை கவனித்தல், மனிதனை மையமாகக் கொண்ட எண்ணிம கலாச்சாரம் மற்றும் அமைதிக்கான கல்வி ஆகியவற்றை அடிக்கோடிட்டுக்காட்டியுள்ளார்.

குறிப்பாக பெருந்தொற்றுக்குப் பிறகு இளைஞர்களிடையே கவலை, மனச்சோர்வு மற்றும் உளவியல் துயரங்கள் அதிகரித்து வருவதாக எச்சரித்துள்ள கர்தினால் பரோலின் அவர்கள், மனநலத்தை வெறும் மருத்துவப் பிரச்சினையாக மட்டும் பார்க்காமல், உடல், மனம் மற்றும் ஆன்மா என மனிதனின் முழுமையான வளர்ச்சியின் ஒரு பகுதியாகக் கருத வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இளைஞர்களை ஆதரிப்பதிலும் அர்த்தமுள்ள உறவுகளை வளர்ப்பதிலும் பள்ளிகள் மற்றும் குடும்பங்களின் முக்கிய பங்கை எடுத்துரைத்த கர்தினால் பரோலின் அவர்கள், எண்ணிம தொழில்நுட்பங்களின் நன்மைகளை அங்கீகரிக்கும் அதே வேளையில், திரையைச் சார்ந்திருத்தல், இணையவழியில் துன்புறுத்தப்படுதல் மற்றும் சமூகத்திலிருந்து விலகி இருத்தல் போன்ற ஆபத்துக்கள் குறித்தும் எச்சரித்துள்ளார்.

இறுதியாக, கல்வி, நலவாழ்வு மற்றும் குடும்ப ஆதரவில் முதலீடு செய்யுமாறு நாடுகளின் அரசுகளைக் கேட்டுக்கொண்ட கர்தினால் பரோலின் அவர்கள், இது இளைஞர்கள் அர்த்தம், நம்பிக்கை மற்றும் நோக்கத்துடன் கூடிய வாழ்க்கையை உருவாக்க உதவும் என்று கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 ஜூன் 2026, 13:11