அசர்பைஜான் பயணத்தில் கர்தினால் ஜார்ஜ் கூவக்காட்டிற்கு உற்சாக வரவேற்பு அசர்பைஜான் பயணத்தில் கர்தினால் ஜார்ஜ் கூவக்காட்டிற்கு உற்சாக வரவேற்பு 

அசர்பைஜானுடனான வத்திக்கானின் உறவை பல்சமய உரையாடல் மூலம் பலப்படுத்தும் கர்தினால் கூவக்காடு

பல்சமய உரையாடலுக்கான திருப்பீடத் துறையின் தலைவர் கர்தினால் ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காடு அவர்கள், ஜூன் 15 முதல் 19 வரை அசர்பைஜானுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது, வத்திக்கானுக்கும் அசர்பைஜானுக்கும் இடையிலான நட்புறவு மற்றும் மதங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

பல்சமய உரையாடலுக்கான திருப்பீடத் துறையின் தலைவரான கர்தினால் ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காடு அவர்கள், வத்திக்கானுக்கும் காக்கேசிய நாடான அசர்பைஜானுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தவும், மதங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை ஊக்குவிக்கவும் ஜூன் 15 முதல் 19 வரை அசர்பைஜானுக்கு பயணம் மேற்கொண்டார்.

ஜூன் 18, வியாழனன்று, அந்நாட்டின் தலைநகரான பாகுவில் உள்ள ஷேக் உல்-இஸ்லாம் அல்லாஷுகூர் பாஷாசாதேவின் இல்லத்தில் உரையாற்றிய கர்தினால் கூவக்காடு அவர்கள், வத்திக்கானுக்கும் அசர்பைஜானின் மத சமூகங்களுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவும் நட்புறவுக்கு நன்றி தெரிவித்தார்.

2002-ல் திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பால் மற்றும் 2016-ல் திருத்தந்தை பிரான்சிஸ் ஆகியோர் மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பயணங்களை நினைவுகூர்ந்த கர்தினால், இந்தப் பயணங்கள் பரஸ்பர புரிதலையும் ஒத்துழைப்பையும் ஆழப்படுத்த உதவியதாகவும் தெரிவித்தார்.

இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் 'நாம் வாழும் காலம்' (Nostra Aetate) என்ற திருஅவை ஏட்டின் கருத்தை வலியுறுத்திய கர்தினால் கூவக்காடு அவர்கள், படைத்த ஒரே இறைவனில் கொண்டுள்ள பொதுவான நம்பிக்கையை ஏற்றுக்கொண்டு,  கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் அமைதிக்காக ஒன்றிணைந்து செயல்பட அழைப்பு விடுத்தார்.

2011-ஆம் ஆண்டு இடம்பெற்ற இருதரப்பு ஒப்பந்தமும், மத ஒத்துழைப்பு குறித்த அண்மைக்கால புரிந்துணர்வு ஒப்பந்தமும் உரையாடல், நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பின் அடிப்படையில் வளர்ந்து வரும் கூட்டாண்மைக்கு சான்றாக உள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் 'மகத்தான மானுடம் ' (Magnifica Humanitas) என்ற திருத்தூதுமடலை மேற்கோள்காட்டிய கர்தினால் கூவக்காடு அவர்கள்,  அமைதியை மேம்படுத்துதல், மனித மாண்பைப் பாதுகாத்தல், துன்பப்படுபவர்களின் குரலுக்குச் செவிசாய்த்தல், மதங்கள் மற்றும் கலாச்சாரங்களுக்கிடையேயான உரையாடலை வலுப்படுத்துதல் மற்றும் உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள உரையாடலை மேம்படுத்துதல் ஆகியவற்றில் புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்புடன் செயல்படுமாறு வலியுறுத்தினார்.

தனது பயணத்தின் போது, கர்தினால் கூவக்காடு அவர்கள் அசர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவைச் சந்தித்தார். அப்போது திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், மத சுதந்திரம், கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாத்தல் மற்றும் வத்திக்கானுக்கும் அசர்பைஜானுக்கும் இடையே தொடர்ந்து இடம்பெற்று வரும் ஒத்துழைப்பு குறித்து உரையாடினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

20 ஜூன் 2026, 15:57